Wednesday, 6 October, 2010

தலைப்பில்லா சிறுகதை...

தீபாவளி விடுமுறைகள் தொடங்கவிருந்த ஒரு வசந்த காலத்தின் முதல் நாள் பின்மாலைப் பொழுது...வழக்கத்தை விட கூடுதல் நேரம் உழைத்ததால் சற்று அதிகமாகவே களைத்திருந்தான் சிவா.. வழக்கம்போலவே மனதின் அயர்ச்சி எரிச்சலாய் நெஞ்சம் நிரப்பி முகம் எங்கும் வேர்வையாய் வழிந்தோடிக் கொண்டிருந்தது.. இம்முறையாவது ஊருக்கு வர வேண்டும் என்ற அம்மாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் நோக்குடன் ரயில் நிலையம் செல்ல முற்பட்டான்...இருந்த அயர்ச்சியில் நகரப் பேருந்தில் ரயிலடிக்குச் செல்வது உயிருக்கு உசிதமல்ல என உணர்ந்து அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்த மூன்று சக்கர வாகனங்களுள் ஒன்றை அணுகினான்...
"சார் ஆட்டோவா??" - "தலைவா!!" என எழுதப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் அணுகினான்....
"எக்மோர் போகணும்னா.."
"த்ரீ பிப்டி குடுங்க சார்"
"ணா!!! என்ன ரொம்ப ஜாஸ்தியா கேக்குறீங்க!!! எப்பவும் நூற்றைம்பதுதானே வழக்கம்!!!" வழிந்தோடிய எரிச்சலில் சிலதுளி ஓட்டுனர் மீது பட்டுத் தெறித்தது...
"பெட்ரோல் விலையெல்லாம் ஏறிபோச்சு சார்!!! அங்கங்க ஒன்வே வேற ஆகிட்டாங்க... சுத்திதான் போகணும்!! கரெக்டாதான் சார் கேக்குறேன்..."
"சரி சரி.. இருநூறு ரூபா வாங்கிக்குங்க..."
"டூ பிப்டியா குடுங்க சார்..., உக்காருங்க...."
நகரத்தின் அத்துணை சாலை விதிகளையும் உடைத்து, சகல சாலை நெரிசல் இலக்கணங்களுக்கும் உட்பட்டு, ஆட்டோ ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயிலுக்கு இன்னும் அரை மணி நேரம் மிச்சமிருந்தது.... பன்னிரண்டு கிலோ மீட்டர்களுக்கு இருநூறு ரூபாய் அழுத புண்ணியத்தில் கூடுதலாய் வழிந்த ஏமாற்றம் கலந்த எரிச்சலை ஏந்திக்கொண்டு ரயில்நிலையத்தின் மக்கள் வெள்ளத்தூடே நடக்கத்தொடங்கினான் சிவா..
அவனை விட்டு விட்டு விரைந்த ஆட்டோ நகரப்பாதையின் நெளிவு சுளிவுகள் அறிந்து ஓடிக்கொண்டிருந்தது...
"என் உச்சி மண்டைல சுர்ருங்குது...உன்ன நான் பாக்கேல விர்ருங்குது...." காட்டுக்கத்தலாய் கத்தியது ஓட்டுனரின் அலைபேசி...
"டே விஜி... எங்க இருக்க!!?" மறுமுனை நகரத்தின் ஏதோ மறுகோடியில் இருந்து இரைய,
"எக்மொராண்டணா.. சவாரி வந்தேன்...இன்னானா??"
"ராயப்பேட்டைலருந்து கோயம்பேடு சவாரி போறியா? வாடிக்க கூப்டாங்க...நான் பெருங்குடில இருக்கேன்..."
"இல்லனா... நஸ்ரீன் இன்னைக்கு நேரமே வரசொன்னுச்சு...ஊட்டுக்கு போனும்ணா ..."
"சரி விடு..நான் முத்துவ கேட்டுப் பாக்குறேன்... "
"சரிணா"
எழும்பூர் தாண்டி அண்ணா சாலை வழியே திருவல்லிக்கேணியின் ஒண்டுக்குடித்தனங்களில் ஒரு தீப்பெட்டி முன்னாள் நின்றது வண்டி...
நாள்முழுதும் சவாரி போனதனால் வலித்த கழுத்தை நெட்டி முறித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விஜி...

"சை...இந்த பாழாப்போன கேஸ் சிலிண்டர் எப்பதான் தீந்துபோவும்னு கணக்கு கூட வச்சிக்க முடில!!"
"யம்மா...யம்மா.. தொண்டை வலிக்குதும்மா..." காய்ச்சலில் படுத்திருந்த காதல் பரிசு ரம்யா குட்டி அனத்தினாள்...
"இருடி என் செல்லம்.. பக்கத்து வீட்டு கிரிஜாக்கா கிட்ட போய் கொஞ்சம் சுடுதண்ணி வாங்கியாந்து கசாயம் வச்சு தரேன்.. கொஞ்ச நேரம் பொறுத்துக்கடி என் தங்கமே..."
"இன்னா நஸ்ரீனு ... வீட்டு நெலம எல்லாம் எப்புடி போவுது..." என்றவாறே உள்ள நுழைந்தான் விஜி..
"வாய்யா...நீயெல்லாம் வீட்டுக்கு ஒரு ஆம்பளையா!! வீடு எப்பிடி போவுதுன்னு என்னைய கேக்குற...புள்ளைக்கு உடம்பு சரியில்ல, டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவுனும்னு ஒருவாரமா காதுல ஓதினுக்குரேன்...எங்கனா அத கேக்குறியா நீ??"
""ஏய் நான் என்னடி பண்ணுறது... ஒவ்வொரு சவாரிலையும் வர்ற காசெல்லாம் சவாரி முடிச்சு தெருத்தெருவா அலையைரதுலையே சரியா போவுது... மிச்ச காசெல்லாம் உன்கிட்டதானே குடுக்குறேன்... எனக்கு மட்டும் அவ புள்ளயில்லையா.. எனக்கு கஷ்டமா இருக்காது...?? லவ் பண்ணி கல்யாணம் பண்ணவ மாதிரியா நடந்துக்கிற.. சொம்மா எப்ப பாத்தாலும் மேல விழுந்து பிராண்டிகினே... தலைவர் படம் வேற அடுத்த வாரம் ரிலீசு.. கல்யாணத்துக்கு முன்னாடி மாதிரி பேனருக்கும் பாலுக்கும் காசு குடுக்குலன்னாலும் முத நாள் டிக்கெட்டுக்காச்சும் காசு வேணுமின்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன்... "

வெந்நீர் எடுத்து வர கையில் எடுத்த பாத்திரத்துடனே அவனை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தாள் நஸ்ரீன்
"சரி சரி ரொம்ப முறைக்காதடி...நாள் பூரா அலஞ்சு திரிஞ்சு, கண்டவன்கிட்டையும் பேச்சு வாங்கிட்டு வீட்டுக்கு வரேன்... வந்த உடனே ஏறுனா கோவம் வராதா.... முத்தண்ணன் கிட்ட சொல்லி இன்னும் ஒரு வாரத்துக்கு டைடல் பார்க்கான்டையே ஸ்டாண்டு கேட்டுருக்கேன்... பாக்கலாம்.. பணத்த தேத்திட முடியும்னு ஒரு தைரியம் இருக்கு..."

"கண்டவன்கிட்டலாம் பேச்சு வாங்குவானுங்க... இங்க ஊட்ல வெந்து சாவுரவகிட்டதான் எல்லாத்தையும் காமிப்பனுங்க... கண்டவனுங்கதானே... அவனுங்ககிட்டையே மூஞ்சி காமிக்க வேண்டிதானே... ஹ்ம்ம்..." முணுமுணுத்தவாறே கிரிஜாக்கா வீட்டுக்கு வெந்நீர் வாங்க விரைந்தாள் நஸ்ரீன் ..

"யப்பா.... இவ வாய கடவுளால கூட அடக்க முடியாதுடா சாமி.." என்றவாறே ரம்யாவை நோக்கி சென்றான் விஜி...
"இன்னா கண்ணு... ரொம்ப வலிக்குதா... கவலை படாதடி செல்லம்.. நாளைக்கே உன்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்... அவுரு ஊசி போட போறாரு..."
"யப்பா... ஊசி வேணாம்..." சிணுங்கியது குழந்தை..
"சரி...மருந்து குடுக்க போறாரு...பாப்பா அடுத்த வாரம் தலைவர் படத்துக்கு போவும்போது திரும்ப கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கலாம்.... "
"தே.... போன வாரம் இப்புடிதான் நீ பாட்டுக்கு வாங்கி குடுத்துட்ட... புள்ள ஒரு வாரமா கஷ்டப்பட்டுக்கிட்டுருக்கு... திரும்ப வாங்கித் தராராமில்ல..."
"வாம்ம்மா தாயே... வந்துட்டியா... இனி நான் புள்ள பக்கமே வரல... நீயே பாத்துக்க..."

சிலநாட்கள் உருண்டோட...தீபாவளிக்கு முதல் நாள்... கை நிறைய புதுத் துணிகளுடனும் பட்டாசுக்களுடனும் வீட்டுக்குள் நுழைந்தான் விஜி...

"யப்பா.. ஒரு வழியா டைடல் பார்க் சவாரி புடிச்சதுல இந்த தீபாவளி சமாசாரம் பிரச்சனையில்லாம முடிஞ்சுது.. ஹே நஸ் ரீனு... உள்ள இன்னும் என்ன பண்ணிக்கிட்டுருக்க... படத்துக்கு நேரமாச்சு... சீக்கிரம் கெளம்பு... ரம்யா குட்டி... இங்க பாத்தியா... அப்பா உனக்கு இந்த தடவ மூணு டிரஸ் வாங்கியாந்துருக்கேன்.... சீக்கிரம் ஓடியா... ராத்திரி தலைவர் படம் பாக்கிறோம்...விடிய விடிய பட்டாசு கொளுத்துறோம்... காலைல புதுத்துணி போட்டுகினுதான் தூங்குறோம்... ரைட்டா.... போ போய் உங்கம்மாவ சீக்கிரம் வர சொல்லு..."
"யம்மா... தலைவர் படத்துக்கு நேரமாச்சாம்... அப்பா உன்னைய கூப்புடுது..."
"ஏய்... நீ என்னடி தலைவர் தலைவர்னுகிட்டு.. அந்தாளுதான் புத்தி கேட்டு போய் திரியுறாரு.. நீயும்.... சரி சரி.. அப்பாவ சொன்ன உடனே கோவம் பொத்துக்கிட்டு வந்துருமே...வா போலாம்"
தலைவர் படம் திரையிடப்பட்டிருந்த அரங்கம் மக்கள் வெள்ளத்தில் கிட்டத்தட்ட மூழ்கியிருந்தது...அதிலும் குடியானவர்கள் எண்ணிக்கை வேறு கணிசமாக இருந்ததால் சுவாசிக்கக் கூட திணறினாள் நஸ் ரீன்...
"ஏன்யா...இப்படி கஷ்டப்பட்டுதான் இத பாக்குனுமா....எனக்கே மூச்சு திணறுது .. பாவம் புள்ள என்ன கஷ்டப்படும்.. அதே இப்பதான் ஒரு வாரம் படுத்து எந்திருச்சுருக்கு..."
"எ.. தலைவர் படண்டி...இப்பிடி பாத்தாதான் அதுக்கு ஒரு கெத்து..."
"ஆமாம்... அடுத்த வாரத்துலருந்து எப்படியும் தேட்டர்ல ஒருபய இருக்க மாட்டான்... அப்ப பாத்தா என்ன கேடு..." மறுபடியும் முணுமுணுத்தாள் நஸ் ரீன்....
குத்துப் பாட்டுடன் துவங்கி நவீன தமிழ் சினிமாவின் இலக்கணங்களை அச்சுப் பிறழாமல் பின்பற்றியபடியே படம் நகர்ந்து கொண்டிருந்தது.... ஒருவழியாய் வழக்கமாய் போடும் அதே இடத்தில் இடைவேளை விட்டிருந்தார் அந்த உலகமகா இயக்குனர்...
குடியானவர்கள் அனைவரும் எழுந்திருக்க முடியாமல் இருந்த இடத்திலேயே உருண்டு கொண்டிருக்க, மற்றவர்கள் கூட்டம் கதவு நோக்கி விரைந்தது...
" புள்ளைய பாத்துக்கயா" தலையில் அடித்துக் கொண்டே கழிவறை சென்றாள் நஸ் ரீன் ...
"யப்பா... கொக்க கோலா..." கொஞ்சியது ரம்யா குட்டி...
ஒரு ரூபாய் கூட பெறுமானமில்லாத அந்த குளிர்பானத்தை நாற்பது ரூபாய் கொடுத்து வாங்கின நூற்றுக்கணக்கான நவநாகரீக கனவான்களுடன் சேர்ந்து விஜியும் அந்த பானத்தை வாங்கி வந்தான்...
"வாடி என் செல்லம்... நான் வாங்கிதாரேன்... அம்மா வர்றதுக்குள்ள குடிச்சு முடிச்சுடு... இந்தா..."
"என்னடி... ஏதோ திருட்டு முழி முழிக்கிற!!" ஒரு எரிச்சலுடன் வந்து இருக்கையில் அமர்ந்த நஸ் ரீனின் கால்களில் தட்டியது அந்த குளிர்பான பாட்டில்...
"ஒ!! இது உன் வேலைதானா...யோவ்... போன வாரந்தானே டாக்டரு சொன்னாரு... இந்த கருமமெல்லாம் குடுத்தா புள்ளைக்கு தொண்டைக்கு ஒத்துக்காதுன்னு...கொஞ்சம் கூட புத்தியே இல்லையா!!"
"ஆமாம்... அந்த ஆளு கெடக்குறாரு.. அவருக்கு ஒன்னும் தெரியாது... புள்ள ஆசைப்படுது...திரும்ப வலிச்சா போய் திரும்ப மருந்து சாப்டுக்கலாம்..."
"ஆமா... இவரு அப்டியே படிச்சு கிழிச்சுட்டாரு... டாக்டர குறை சொல்ல... படிச்ச அஞ்சாம் கிளாசுக்கு இவ்வளவு அலப்பறையா.... எக்கேடோ கேட்டு ஒழிங்க"
படம் தொடங்க, திரையில் ஆழ்ந்தான் விஜி...
"யம்மா... தொண்டை எரியுதும்மா..."
"போடி... நான் சொல்ல சொல்ல கேக்காம உங்கப்பன் வாங்கி குடுக்குராருனு குடிச்சல்ல... போய் அந்த ஆளுகிட்டே சொல்லு..."
"யப்பா... தொண்டை எரியுதுப்பா..."
"கொஞ்ச நேரம் இருடி செல்லம்... வூட்டுக்கு போனவுடனே அம்மா கஷாயம் வச்சு குடுக்கும்... காலைல டாக்டர்கிட்ட போய் மருந்து சாப்ட சரியா போயிடும்... "
"யப்பா... நெஞ்செல்லாம் எரியுதுப்பா..." குரல் கலங்கி கம்மிவிட்டிருந்தது ரம்யா குட்டிக்கு...
"கொஞ்ச நேரண்டா,... இதோ கடைசி சீன் வந்துருச்சு..."
ஒரு மாதிரியாய் உடம்பெல்லாம் எரியத் தொடங்க...கோபித்துக்கொண்ட அம்மாவையும், கருமமே கண்ணாயிருந்த அப்பாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தது ரம்யா குட்டி...
"திரும்பி வருவோம்ல..." என்ற எழுத்துடன் படம் ஒரு வழியாய் முடிய... விளக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டன...
முதலில் ரம்யாவைப் பார்த்த நஸ் ரீனுக்கு பகீரென்றது!!! வாயெல்லாம் நுரை தள்ளி, கண்கள் மேல சொருகி வாய் கோணிக் கிடந்தது அந்த பிஞ்சு....
"யோவ்...புள்ளையா... புள்ள..." அதற்கு மேல நா அசைய மறுத்தது அவளுக்கு...
"என்னடி..." என்றவாறே திரும்பி பார்த்த விஜி அதிர்ந்தான்....
அவசர அவசரமாய் ரம்யாவை அள்ளி ஆட்டோவில் போட்டுக்கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் மருத்துவமனை தேடி அலைந்து திரிந்து இறுதியாக ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்த போது முழுதாய் ஒரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது...
பேயறைந்தாற்போல வெறித்த பார்வையுடன் மருத்துவமனையின் வெண்ணிற வராண்டாவில் தனியே அமர்ந்திருந்தாள் நஸ்ரீன்
தீபாவளியன்று காலை... குளித்து முடித்து புத்தாடையுடன் அம்மாவின் கைமணத்தில் சுடச் சுட சிற்றுண்டி அருந்திவிட்டு அன்றைய செய்தித் தாளை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான் சிவா...
ஆறாம் பக்கத்தில் வலது ஓர மூலையில் பதினைந்து வரி கடைசி நேர செய்தியாய் வெளியாயிருந்த... "பூச்சிக் கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தை அருந்தியதால் ஆட்டோ ஓட்டுனரின் மகள் - ஐந்து வயது சிறுமி மரணம்...ஆளுங்கட்சியின் ஆதரவுள்ள திரையரங்க நிர்வாகம் செய்த கலப்படமே காரணம் என்று குளிர்பான நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது......." என்ற செய்தி கண்டு, " ச்சே!! ஏன்தான் இந்த நாட்டு அரசியல் இவ்வளவு சாக்கடையா இருக்கோ!!??" என சலித்துக்கொண்டவாறே அதற்கு மேலாக அச்சிடப்பட்டிருந்த தலைவரின் அடுத்தபடம் பற்றிய செய்தியில் கவனத்தை செலுத்தி படிக்கத் தொடங்கினான் சிவா...