Sunday 8 November 2009

மணிமேகலை...3 உயிர் கொண்ட தோழன்...

உயிரினும் மேலான தமையன் - அவன்
முதுகில் குத்திய கொடும்பாவி
தன் குலம் கெடுக்க வந்த கோடரிக் காம்பு
மனமே அவன் எண்ணம் நீங்கு..
மனதோடு போரிட்டாள் வீரமங்கை
தன் குலப்பெருமை காக்க

அறியாச் சிறுமி...
ஆயிரம் போர்க்களங்கள் காண்பதிலும்
பதினாயிரம் சத்ருக்களைக் கொல்வதிலும்
மிகக் கடியது இறைவன் திருவடி சேர்வது...
அதனினும் கடிது - காதல் கொண்ட
நெஞ்சத்தின் நினைவுகளை அழிப்பது

கனவிலும் அவனே நினைவிலும் அவனே
வெட்கம் அறியா எனக்கு நிலமகளைக் காட்டியவன்
தேவரும் போற்றும் வாணன், வந்திய தேவன்...

புவி மீது பூத்திருக்கும் மலர்கள் கோடி
ரசித்ததில்லை தம் எழிழழகை..
கார்குழலும் மான்விழியும்
தேன் சொரியும் அதரங்களும்
கலந்து செய்த தன் எழிலை கண்டு காட்டிய கண்ணாடியில்
சட்டென உதித்தான் ஆதவன்!

ஒ! அல்ல.. அவன் என் காதலன்..
கனவில் வந்து மனம் அணைத்த கள்வா!!
நினைவிலும் எனை முத்தமிட ஆசையோ..
உன்னை மறவேன் அல்லால் என் உயிர் துறப்பேன்..
மனம் மருகினாள் மணிமேகலை..

கண்ணிமைத்தும் மறையவில்லை காதலன்!
நான் காண்பதென்ன நினைவா!!ஊ!!
குயில் கூவியது கன்னியவள் வடிவத்தில்
சட்டென கலைந்தது நினைவு..

கதவம் மூடினான் வல்லவரையன்
தன இதயம் பதறினான் ஒரு கணம்
ஒருபுறம் கொலைவாள்! மறுபுறம் கன்னியவள் விழி வாள்!!
சமைந்தான் சிலையென குரங்கின் பின்புறம்
மூதாதையிடம் அறிவுரை கேட்கும் நோக்கோடு!?

நினைவிலும் கொலை செய்ய தொடங்கிவிட்ட கள்வா
உன்னை காணாது இனி எனக்கில்லை உறக்கம்..
சந்திரமதி ! வாடி, காண்போம் என் பதி

நுழைந்தாள் வேட்டை மண்டபத்தில் ஒரு புயலென
கைவிளக்கேந்திய காரிகையாய் சந்திரமதி அவள் உடன் இருக்க
சிலைகளே விழித்தன அசையும் சிலை கண்டு
வாணன் என்ன செய்வான் பாவம்.. அவனும் விழித்தனன்..
பின் உறைந்தனன், உறைந்தன சிலையென..

கள்வனைக் காணாத ஏக்கம் அமைதி அவ்விடம்
சட்டென கலைத்தான் கொடும்பாவி – இடும்பன் காரி
தேவதை இல்லம் திரும்ப – பின் ஓடி வந்தான்
அவள் இடம் தேடி – கொலைவாளை வெறுத்து
விழி வாளை நாடி – வாணன் வந்திய தேவன்

தன காதலன் உயிர் காக்க தமையன் மானமும் காக்க
தந்தாள் ஓர் புகலிடம் - அது யாழ்க்கலஞ்சியம்
கண்டதும் உணர்ந்தான் கொலை வாளினும் கொடிது
மேகலை விழி வாள் – அதன் வழி விலகலே
உத்தமம் – அதுவே யாம் குந்தவைக்கு செய்த சத்தியம்
அகன்றான் அவ்விடம் ; விரைந்தான் தன் அரசனிடம்

நந்தினி..

மீன்கள் ரெண்டிணைந்து அவள் கண்களானதே
கன்னி அவள் கால்களோ வாழைத் தண்டானதே
தேவலோக மங்கையவள் இதழ்கள் ரெண்டோ
மது சொரியும் மலர் செண்டானதே
அதை நாடி வந்து மயங்கும் ஆடவர் வண்டானரே..

பார்போற்றும் வேந்தர் சுந்தர சோழரும்
போற்றி வணங்கும் தனாதிகாரி - தன்
மனம் கிறங்கி மணந்தார் சர்ப்பமொன்றை

வேங்கையின் காலைச் சுற்றி தன் வன்மம் கக்கி
அதன் உயிர் பிரிக்கும் உறுதி கொண்டாள் நந்தினி
அவள் வேல் விழியில் தன் உயிர் மறந்தார் பேரரையர்

பட்டத்து இளவரசன் – வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி
வேங்கையின் விழிகள் சிறுத்தையின் பாய்ச்சல்
சிம்மத்தின் கர்ச்சனை இவை யாவும் நாட்டில் காண
பாரீர் எம் ஆதித்த கரிகாலனை..

அந்தோ பரிதாபம்!
அவனும் மயங்கினான் அந்த நாக கன்னியிடத்தில்
ஒத்துத் தலையசைத்தான் கருநாக விடம் அருந்த
வந்தான் சம்புவரையர் இல்லம் தேடி..
காலனவன் அருள் நாடி

Friday 9 October 2009

ஆட்டோகிராப்..


என்னை முதல் முதலாக பாதித்த திரைப்படம். நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தில் சேரன், ஒரு சாமான்ய கிராமத்து மனிதனின் வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்திருந்தார். கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன், புதிய இடங்களுக்கு செல்லும்போது அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், அவனை பாதிக்கும் விஷயங்கள் பற்றி தெளிவாக காட்சிகளைத் தொகுத்திருந்தார். திண்டுக்கல் அருகில் நெய்க்காரப்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து, தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் படித்த செந்தில் என்ற வெகுளியான சிறுவன், முதிர்ச்சியடைந்த இளைஞனாக மாறும் கதை. சென்னையில் விளம்பர நிறுவனம் நடத்தி வரும் செந்தில் தன் திருமணத்திற்கு தன் வாழ்வில் கடந்து வந்த அத்துனை முக்கிய மனிதர்களையும் அழைக்கும் முடிவுடன், முதலில் தன் கிராமத்திற்கு செல்லும் காட்சியுடன் படம் தொடங்குகிறது... கதையின் முதல் பாகமான கிராமத்து பின்னணியும், மனிதர்களும் நம்மை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறன.பள்ளித்தோழி கமலாவாக நடித்திருக்கும் மல்லிகா, முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விடலைப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை இதை விட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.. சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் செந்திலை பார்க்கும் கமலா, அப்போதும் "ஒரு நிமிஷம்" என்று சொல்லிவிட்டு கண்ணாடி முன்பு சென்று முகத்தை துடைத்து பொட்டு வைக்கும் காட்சி ஆயிரம் கவிதைகளை சொல்கிறது.
அதன் பின்னர் தன் கல்லூரி நாட்களைக் கழித்த கேரளாவிற்கு செல்கிறான். அவன் கண் முன்னால் 12 வருடங்களுக்கு முன்பான கல்லூரி நாட்கள் விரிகின்றன. தந்தையின் பணிமாற்றம் காரணமாக கேரளா வரும் செந்தில் வந்த புதிதில் மாற்ற மாணவர்களால் கிண்டல் செய்யப்படுகிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஆதரவாக இருக்கும் லத்திகா (கோபிகா) மீது காதல் வசப்படுகிறான். லத்திகாவும் அவனைக் காதலிக்க, அழகிய புல்லாங்குழல் இசையினைப் போல் சென்று கொண்டிருக்கும் அவர்களின் காதல், லத்திகாவின் தந்தைக்கு தெரியவர, அவளைக் கோவிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி அவளின் மாமன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார். அதே நேரத்தில் செந்திலின் வீட்டிற்கும் ஆட்களை அனுப்பி அவர்களை ஊரை விட்டு செல்லும்படி செய்கிறார்.
அதன் பின்னர் தன் வாழ்வின் இருண்ட இரு வருடங்களை கோவையில் கழிக்கும் செந்தில், வேலை தேடி சென்னை செல்கிறான்.. அங்கே பசி பட்டினிக்கு இடையில் நம்பிக்கையை தொலைத்த நிலையில் திவ்யா (சினேகா) வை சந்திக்கிறான். அவனுக்கு வேலை வாங்கித் தருவது மட்டுமின்றி, அவனுடன் ஒரு நல்ல தோழியாகவும், நலம் விரும்பியாகவும் இருந்து அவனை கடந்த கால சோகங்களில் இருந்து மீட்டெடுக்கிறாள்.
படகு கரையை அடைய, அவனும் பழைய நினைவுகளில் இருந்து மீள்கிறான். பழைய நண்பன் கிருஷ்ணாவுடன் சென்று லத்திகாவை திருமணத்திற்கு அழைக்க செல்லும் அவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக, அவள் விதவைக் கோலத்தில் அமர்ந்திருக்க, கனத்த இதயத்துடன் சென்னை திரும்பும் செந்தில், திருமணத்தை நிறுத்தி விடும் யோசனையில் இருப்பதாக திவ்யாவிடம் கூற, அவள் அவன் மனதை மாற்றி, "அறுபது வருட வாழ்க்கையில், முப்பது வருடம் பொருளாதாரத்திற்காகவே போராட வேண்டியிருக்கு. இந்த போராட்டத்தில் ஒரு மனிதனின் கவலைகள், தோல்விகள் எல்லாம் அடித்து செல்லப்படுகின்றன. இப்படித்தான் இருக்க முடியும், ஏன்னா இதுதான் இயல்பு" என்று அறிவுரை கூறுகிறாள்.அவனும் திருமணத்திற்கு சம்மதிக்கிறான். அனைவரும் திருமணத்திற்கு வர, அழகான ஓவியம் போல காட்சிகள் விரிகின்றன. திருமணப் பரிசு கொடுத்து விட்டு செல்லும் போது தூரம் சென்று திரும்பிப் பார்க்கும் காட்சியில், மல்லிகா ஆயிரம் கவிதைகளை திரும்ப சொல்கிறார்.
சேரனின் மிகச் சிறந்த படைப்பான இத்திரைப்படம் எல்லா விதத்திலும் சிறப்பாக அமைந்துள்ளது. நல்ல ஒளிப்பதிவு, செவிகளுக்கிதமான பரத்வாஜின் பாடல்கள், சபேஷ்-முரளி யின் பின்னணி இசை, துணை நடிகர்கள் என அனைவருமே தங்கள் உச்சபட்ச உழைப்பை அள்ளிக்கொட்டியிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. ஒரு ஆட்டோக்ராப் புத்தகத்தைப் போல விரியும் படத்தின் பெயரிலிருந்து, ஒவ்வொரு பிரேமிலும் சேரனின் உழைப்பு பளிச்சிடுகிறது. எத்தனை வருடங்களானாலும் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் மிகச் சில திரைப்படங்களுள் ஒன்று, சேரனின் ஆட்டோகிராப்...


மணிமேகலை....2

கள்வன் என் காதலன்...

மான்விழியாள் கார்குழலாள் செங்கழுநீர் நிறமுடையாள் சம்புவரையர் குலமகள் மணிமேகலை என்ற பெயருடையாள் கண்டதில்லை கண்ணீர்த் துளி அதன் வெப்பமும் அறிந்ததில்லை நாணமதோ என்ன விலை கேட்டிடுவாள் எவரிடமும்!!

அன்றொரு நாள்.. அமுதினும் இனிய காலைப் பொழுது
தங்கை காண ஓடி வந்தான் அன்புத் தமையன்
மாபெரும் வீரன், அவன் கந்தமாறன்

வீரத்தினில் அர்ச்சுனன் தான் வடிவத்தினில் மன்மதன் தான்
என் உயிர்த் தோழன் அவன்.. உன் மனம் கவரும் திறன் படைத்தோன் நாணமென்றால் என்ன விலை!? கேட்டிடும் மான் விழிகள் ரெண்டும் நிலமகள்மேல் காதல் கொள்ளும் நாள் வருமடி கண்மணி - உன் கழுத்தில்
மாலை சூடும் வேளை வரும் பொன்மணி

மூவேந்தர் முடிபரித்து பரி அழித்து
புலவர் பலர் மகிழ்ந்திடவே பரிசளித்து
பார் போற்றிய வாணன், அவன் வந்திய தேவன்..

கள்ளி மலர் சிவப்பதுண்டு அல்லி கூட சிவப்பதுண்டு
கருங்குவளை சிவந்ததுண்டோ!! காணீர் மானுடரே
எங்கள் மணிமேகலையின் கன்னம் சிவக்கக் காண்பீர் !!

கோபத்தின் ஊடாக வெட்கமொன்று வெட்டிச் சென்றது மின்னலென
மனதுக்குள் பூ பூக்க.. ஓடிச் சென்றாள் புள்ளி மானெனவே
மனதுக்குள் வரித்து விட்டாள்! தன் மணாளனை வரைந்து விட்டாள்
ஆசைத் தோழி, பாசமுள்ள சிநேகிதி.. சந்திரமதி ..
அவள் காதினில் கவி பாடி வந்தாள்.. கள்வன் என் காதலன் என..

மூவுலகும் கட்டி ஆளும் பாவேந்தர்
இந்தப் பார்வேந்தர்.. சுந்தர சோழர்
தலை வணங்கும் தனாதிகாரி..
பழுவேட்டரையரும் சம்புவரையரும்
முத்தரையர் வணங்காமுடி இரட்டையர்
இன்ன பிறரும் கூடினர் ஓர் இரவினில்

எதிரியையும் அணைத்துக் கொள்ளும்
ஏற்றமிகு சோழ வம்ச கருவறுக்க..
அங்கு விதியின் ஆட்டம் விளையாட்டு பொம்மைகளாய் அரையர்கள் கூட்டம் ..

அந்த காரிரவின் முற்பகுதியினில்..
நந்தினியின் கதை பேசி நகைத்திருந்த வேலையினில்
புயலென புகுந்தான் காளையவன்
வானவரும் வணங்கி நிற்கும் வாணன் வல்லவரையன் ...

கனவினில் வரித்த கள்வன்! என் மனம் அணைத்திட்ட காதலன்..
விம்மியது கன்னி நெஞ்சம்..
நிலமகள் மேல் காதல் கொண்டாள்..
தன் காதலன் முகம் காண மறுத்தாள்..
நாணமோ!? என்ன விலை!? கேட்டு வந்த கன்னி இவள்..
சம்புவரையர் குல மகள்..

அறியாத முகமதுவோ!! மீண்டும் பார்க்க
கனவுகளில் கை கோர்த்து அலைகடலும் தாண்டி சென்று
சந்திரனில் கால் பதித்து
காதல் கதைபேசி திரிந்த நாட்கள் மறக்குமோ!
அவன் திருமுகமும் மறந்திடுமோ!!

சொப்பனத்தில் திளைதவளின் மனம் கலைத்தான்
அன்புத் தமையன்.. நந்தினியின் ஆசை வலையில் சிக்கியவன்..
மாபெரும் வீரன், அவன் கந்தமாறன்..

உன் அன்புத் தமயனை முதுகில் குத்திய பாவி!!
சிநேகிதத் துரோகி... அவன் குலம் அறுப்பேன் கூடிய விரைவினில்!!

பெண்ணென்ன மாபெரும் சக்தி!?
தெய்வம் என்பார்கள்! கோவிலை விட்டு வெளியே வரக் கூடாதென்பார்கள்.. அல்லி முல்லை தாமரை என்பார்கள்!
அவள் மனதினை ஏறெடுத்தும் கேள மாட்டார்கள்..

மனம் நொந்தாள் மணிமேகலை, தேவதைகளின் தேவதை..


Thursday 8 October 2009

My Quotes... 1

அமைதியையும் ஆண்டவனையும் தனக்கு வெளியே தேடுபவன் மூடனே!!

உங்களை அடக்க நினைப்பவரிடம் அடங்கிச் செல்லுங்கள். உங்களை சகமனிதனாய் மதிப்பவரிடத்தில் சமமாய்ப் பேசுங்கள். உங்களிடம் அடங்கி நடப்பவரை அரவணைத்துச் செல்லுங்கள். இதை உங்கள் சுயமரியாதைக்கு உட்பட்டு செய்தால், நீங்களே சாதனையாளர்.

Friday 2 October 2009

மணிமேகலை...

கரைபுரளும் காவிரியின் கரையினிலே நான் நிற்கும்
நிமிடங்கள் ஒவ்வொன்றும் விழிச் சுழலில் சுழன்றடிக்கும்
கற்களையும் கசிந்துருக செய்துவிட்ட பேதையவள்
காதலினால் கடவுளுமாய் ஆன கதை…

அறிமுகம்….

அன்றொரு நாள்.. அழகிய மாலை..
ஆடியின் பெருக்கு காவிரியின் உவப்பு
வளம்கொழிக்கும் சோழதேசம்

இந்திரனின் கரி மிஞ்சும்
பரிமேலே வலம் வந்தான் காளையவன்
வடிவினிலே மன்மதன் தான்
வீரத்தினில் அர்ச்சுனன் தான்
வானவரும் வணங்கிடுவர்
வாணன் வல்லவ ரையன்
திரு முகம் கண்டால்

உடுக்கை இழந்தவன் கைபோல்
மனம் இணைந்த தோழன்
மாபெரும் வீரன் அவன் கந்தமாறன்
இல்லம் தேடி செல்லுகின்றான்
இரவினில் துயில் கொள்ள நாடுகின்றான்

மாளிகையின் வாயிலினில்
தடுத்திட்ட காவலரை தகர்த்தெறிந்து செல்லுகின்றான்
வந்தியதேவன்,
வாணன் புகழ் விளைக்கும் முதற்படியாய்

மாறன் கண்டுகொண்டான் தன்னுயிர் தோழன் முகம்
பிரிந்தவர் கூடி பேசா வார்த்தை பல கோடி
அன்புள்ள நண்பன் தனை தாயில்லம்
விழைக்கின்றான் அந்தப்புரம் செல்வதற்கு..

தேவலோக மாளிகையோ, அரம்பை மேனகை ஊர்வசியோ
அல்லியிடை கன்னியர்காள் செங்கழுநீர் நிறத்தினர்காள் ..
வியந்து நின்றான் காளையவன்
வானவரும் வணங்கி நிற்கும்
வாணன் வல்ல வரையன் ..

அம்மாவை வணங்கி நின்று விழி திறந்தான்
திறந்த விழி இமைக்கவிடா
இரு கயல் கண்டான்
பின் உணர்ந்தான் அது கன்னியவள் கண்களென..

மயங்கி நின்ற காளையவன்
மனம் உடைத்தான் நண்பனவன்
உனக்கல்ல என் தங்கை
நாடாளும் அரசன் அங்கே காத்து நிற்க
அவள் பாதம் தொட.
மனம் உடைந்தான் காளையவன்
தன்வழியின் தான் சென்றான்

அரசனென ஆவதென்று சூளுரைத்தான்
நாடிழந்தும் மானம்தனை உயிராகக் கொண்ட மன்னன்
அலுவல் நாடி சென்றுவிட்டான் தொலைதூரம் பறந்துவிட்டான்

முழுநிலவின் ஒளிகண்டான் கயல்விழியாள் முகம் மறந்தான்
குந்தவையின் முகம் கண்டான் – அவள்
வேல்விழியின் வீச்சினிலே தனை மறந்தான்

கடல் அலையை தாண்டி சென்றான்
மனிதருள்ளே மா ணிக்கம் கண்டான்
பொன்னியின் செல்வரென புகழ்படைத்தோன்
பார்போற்றும் பராந்தகரின் செல்லப் பெயரன்
அருள்மொழி வர்மன் தனை

மதி முனையும் வேல்முனையும்
தீட்டினன் தன் திறம்படவே
வென்றனன் அரிய பரிசில் பல
பார்போற்றும் சக்கரவர்த்தித் திருமகனின்
மனம் கவர்ந்து நட்பு கொண்டான்