Tuesday, 10 August, 2010

விழிநீர்..நெடுநாளைக்குப் பிறகு... அவளுக்காக...


கார்கால மேகங்கள் அந்த சாயங்காலத்தின் வானத்தை நிரப்பிருந்தது. சென்னை மாநகரத்தின் கோடியைத் தொட்டுவிட்ட மனிதப் புள்ளிகளுள் ஒருவனான சிவா தன் அலுவலகத்தை விட்டு நடக்கத் தொடங்கியிருந்தான். சிக்னலில் பலூன் விற்கும் சிறுமி, சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் நாய்க்குட்டியை எடுத்து மார்போடு அணைத்தவாறே நடந்த கிழிந்த டவுசர் சிறுவன் என வழக்கமான நாளில் ஓடிக்கொண்டிருந்த சென்னை அவனை பாதிக்கவே இல்லை.. "நிலவே நில்..இது வைகாசி மாசம், விழியோரம் நீர் ஏன் வந்ததோ!??" சாலையோர தேநீர் நிலையத்தில் சூரியன் fm ஒலித்தது.. கண்கள் குளமாய்ப் போனது சிவாவுக்கு.. இன்றோடு வருடங்கள் மூன்றாகி விட்டது... இன்று போலவே இருக்கிறது... ஒரு வார்த்தை, ஒரு நிமிடம்...
"தேவதைய பாத்துருகீங்களா சார் நீங்க??"
"யாருமற்ற அந்த சிறு தெருவில் அவனுக்கு சற்று முன்னாள் சென்று கொண்டிருந்த அந்த பார்த்தசாரதி கலவரமாய் அவனைத் திரும்பிப் பார்த்தார்..
"நான் பாத்துருக்கேன் சார்.. ஏன் இதோ இப்போ கூட, கண்ண மூடினா, அந்த விழி இமைக்கிற அரை நொடில கூட.."
மிஸ்டர்.பார்த்து ஓடத் தயாரானார்...
"ஒரு வார்த்தை, ஒரு நிமிடம்.. எல்லாம் போச்சு சார்.. என் கனவு ஒட்டுமொத்தமா கலஞ்சு போச்சு சார்... சார்.. நம்ம மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட கடுமையா பேசறது போல வலி எதுவுமே இல்ல சார்.."
பார்த்தசாரதி ஓடத் தொடங்கியிருந்தார்...
ஒரு பெருமூச்சுடன் மனமெங்கும் அப்பிக்கொண்ட சோர்வோடு நடந்தான் சிவா...
பள்ளி முடித்தபின் பதின்ம வயதின் இறுதிக்கட்டத்தில் பொறியியல் கல்லூரியில் சேரும் எல்லா இளைஞர்/இளைஞியையும் போல கனவு, கல்லூரிக்கு வந்த பரபரப்பு, ஹையா..இனிமே சீருடை அணியவேண்டாம் என்ற குழந்தைத் தனமான குதூகலம், வீட்டை விட்டு வந்து விடுதியில் தங்கவேண்டியிருக்கும் சோகம், வண்ண ஆடைகளில் நிறைய பெண்களைப் பார்க்க வாய்க்கும் குறுகுறுப்பு என கலவையான மன நிலையுடன் வந்தவன்தான் சிவா..
எல்லாரையும் போல, எப்போதும் அரட்டை, நிறைய நண்பர்கள், பரீட்சை சமயத்தில் மட்டும் படிப்பு என வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.. மூன்றாம் ஆண்டின் இறுதி.. மும்முரமாய் பல நிறுவனங்களும் நேர்முகத் தேர்வுக்கு வரத்தொடங்க, சிரத்தையுடன் படித்துக்கொண்டிருந்தான்.. ஒருநாள் யதேச்சையாய் வெல்டிங் ஷாப்பில் அமர்ந்து ஆசிரியருடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கையில் தான் அவளைப் பார்த்தான்...
"கொஞ்சம் நகருடீ.." அமைதியாய் இருந்த ஷாப்பில், கொஞ்சம் சத்தமாய் கேட்ட குரலுக்காக சட்டென திரும்பிப் பார்த்தான்.. வெண் பனிப் புகைப் படலத்துக்கிடையே, செக்கர் நிற சுடிதாரில் தேவதை... கண்ணை கசக்கிக் கொண்டு இரண்டாம் முறையும் பார்க்க... "டேய்.. என்ன, சிலிர்த்துட்டியா!! அது வெல்டிங் புகை டா!! நேத்து ரெண்டு தடவை "அழகிய தீயே" படம் பார்த்தப்பவே நெனச்சேன்.. இப்படி எதாச்சும் ரவுசு பண்ணுவேன்னு... அதுக்குன்னு இன்னைக்கேவாடா..."
நண்பன் கூறிய ஏதும் காதில் விழாதவனாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சிவா.
வெல்டிங் முடித்து பர் நீக்கிக் கொண்டிருந்தபோது சட்டென ஒரு துகள் அவள் விரலைப் பதம் பார்த்துவிட, துளி ரத்தம் வெளி வந்தது... "ஸ்ஸ்ஸ்ஸ்...ஆ.." என அந்த பட்டாம்பூச்சி முதல் வார்த்தையை உதிர்த்தது..அவளையே பார்த்துக்கொண்டிருந்ததில், தன்னை மறந்து சிவா, "ஹய்யோ என்ன ஆச்சு!!!!??" என்று கொஞ்சம் சத்தமாகவே பதறிவிட்டான்...அவனை ஒரு மார்க்கமாய்ப் பார்த்தது விழிமை கலைத்த கண்ணீர் திரையிட்ட கண்களுடன் அந்த பட்டாம்பூச்சி.. முதல்முறையாய் வெட்கப்பட்டான் சிவா.. "டே!! இது வேறயா!! இன்னைக்கு இது போதும், போய் ஒழுக்கமா நாளைக்கு இண்டர்வியூ வுக்கு படி போ".. என விரட்டிய ஆசிரியரை ஜென்மவிரோதி போல பார்த்துக்கொண்டே விடுதிக்கு சென்றான்.. அப்பறம் எங்க படிக்கறது!! ஆனால் அவளை அடுத்த முறை பார்த்தால் வேலையுடந்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது...மானப் பிரச்சனையாசே!! ஆசைப்பட்டவாறே முதல் மூன்று சுற்று தேர்வாகி, இறுதி தனித்தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தான்... அந்த உயர்நிலை அரசு பொறியியல் கல்லூரியில், குளிர்சாதன வசதி இருந்த ஒரே காரணத்துக்காக எல்லா நேர்முகத் தேர்வுகளுமே கணிப்பொறியியல் துறையில்தான் நடப்பது வழக்கம்..அப்போது தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கும், நிறுவன அதிகாரிகளுக்கும் வழிகாட்டவும், தேர்வின் நிலைகளை அறிந்துகொள்ளவும் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உதவுவது வழக்கம்..கொஞ்சம் பதட்டத்துடன் தேர்வு அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான் சிவா.. அடுத்து நீங்கதான் என்ற குரல் கேட்டு நிமிர்ந்தால், அவளேதான்!!!ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது இதயம்..."மச்சி, இன்னைக்கு மட்டும் இண்டர்வியூ ல சொதப்புன, அவ்வளவுதான் பார்த்துக்க.." என்ற குரல் உள்ளிருந்து ஒலித்து இருந்த படபடப்பை வேறு அதிகரித்தது..."நல்லா பண்ணுங்க" என்றாள் சிறு புன்னகையுடன்... ஒருவழியாய் அரைமணி நேரம் உள்ளே அந்த ஆபீசர் போட்ட மொக்கைகளை சகித்துக்கொண்டு சிரித்த முகமாய் இருந்தபடியே வெளியே வந்துவிட்டான்..ஒருவழியாய் தேர்வாகி வேலையும் கிடைத்து விட்டது... அவளைப் பற்றி தகவல் சேகரிப்பதையே முழு நேர வேலையாக மேற்கொண்டான்... தேவதையின் பெயர் ஜெயஸ்ரீ, படிப்பது கணிப்பொறியியல் என தெரிய வந்தது... "பொண்ணு ரொம்ப நல்ல மாதிரிடா...ஒரு பையன்கிட்ட கூட பேசுறதில்ல, நம்ம மகளிர் அணித் தலைவி கொடுத்த தகவல் படி, காதலிக்கக் கூடாதுங்கிறது அவளோட தலையாய கொள்கையாம், வேற வேலை இருந்தா பாரு"
" அடப் பாவிகளா!! ஏதோ நான் மூணு வருஷம் பொண்ணுங்க பின்னாடி சுத்துரதையே வேலையா பண்ணின மாதிரி பேசுறீங்களேடா, நானே எத்தன பசங்கள காதலிக்காம தடுத்துருப்பேன்.. இப்போ எனக்கேவா!!!? சரி விடு, இத நான் பாத்துக்கறேன்" இதுதான் அவன் காதலைப் பற்றி நண்பர்கள் கேட்ட இறுதி வார்த்தை..அவள் செல்கிறாள் என்பதற்காகவே தினசரி கல்லூரி வளாகத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்லத் தொடங்கினான்..இப்படியே நாட்கள் ஓட, நிஜமாகவே அந்த பிள்ளையார் அவனுக்கு பிடித்துப்போகத் தோடங்கினார்..ஒருநாள் கண்மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கையில் மீண்டும்,
"ஸ்ஸ்ஸ்ஸ்..ஆ..", அதே குரல்...பிரகாரத்தில் சுற்றிக்கொண்டிருந்த அவள் கால்களைப் பதம் பார்த்துவிட்டிருந்தது ஒரு சிறு தகடு,...
"அச்சோ என்ன ஆச்சு!!!"
"இல்ல.. நல்லா கிழிச்சுடுச்சு...."
"சரி இருங்க, என்றவாறே அதற்காகவே காத்திருந்தாற்போல தன் கைக்குட்டையைக் கொடுத்து கட்டிக்கொள்ள சொல்லிவிட்டு, ஆட்டோவுக்கு போன் பண்ணி, சக மாணவி ஒருத்தியையும் வரச்சொல்லி அனுப்பி வைத்தான்.. மூன்று நாட்களுக்குப் பின், மீண்டும் கோவிலில் அவள், சிநேகமாய்ப் புன்னகைத்தாள்..
"இப்போ பரவாயில்லையா?"
"ஹ்ம்ம்...ரொம்ப தேங்க்ஸ்.."
"ஹே, பரவால்ல" இப்படி தொடங்கிய பேச்சு, மூன்று மாதங்களில் பிறந்த நாள் வாழ்த்து குறுந்தகவல் பரிமாறிக்கொள்வது வரை வளர்ந்தது..ஆவலுடன் நெருகிப் பழகப் பழக, அவள் குடும்ப சூழலும், வளர்ந்த விதமும் புரிய வர, தன் வீடு நினைவுக்கு வந்தது அவனுக்கு..காதலை சொல்ல மனமே வரவில்லை.. இனிய நண்பனாய் அவளிடம் நடித்துவிட்டு, அவள் மேல் இருந்த காதலை எல்லாம், கவிதையாய் வடித்து வைத்தான்...
கல்லூரி இறுதி வருடமும் முடிந்தது... நல்ல நண்பனை பிரிகிறோமே என்ற சோகத்தில் அவளும், சொல்லவொண்ணா மனபாரத்துடன் அவனும் இறுதியாய் ஒரு முறை பிள்ளையார் பார்த்து அமர்ந்திருந்தனர்.... அப்போதும் ஒரு கணம் எண்ணினான், இப்போ சொல்லிடலாமா!!?
"அப்பா உன்ன அப்பப்போ போன் பண்ண சொன்னாரு..." என்ற குரல் அந்த எண்ணத்தை அப்படியே வயிற்ருக்குள் அழுத்தித் தள்ள, "கண்டிப்பா!" என்று ஒரு உலர்ந்த புன்னகையுடன் கல்லூரியை விட்டு கிளம்பினான்...
அலுவலகத்தில் சேர்ந்த பின், அவளை அதிகமாக தேடியது மனம்...அவளோ, தினம் ஒரு குறுந்தகவல், வாரம் ஒரு தொலைபேசி நலம் விசாரிப்பு என அளவாய் நிறுத்திக் கொண்டாள்.. சேர்ந்த நான்கு மாதங்களில் அறைக்கு அழைத்தார் மேலாளர்..
"நீ இன்னும் ஒரு மாசத்துல ஜப்பான் போறப்பா!! என்ன சொல்ற??"
"சார்....சரி சார்.."
"என்னப்பா, ஒரு குதூகலத்தையே காணோம் உன் முகத்துல!"
"அதெல்லாம் இல்ல சார்.."
நாட்கள் நெருங்க நெருங்க அனலாய் தவிக்கத் தொடங்கியது அவள் நினைவுகள்...அந்த வாரம் பேசும்போது அவளிடம் சொன்னால், மிகவும் சந்தோஷப்பட்டாள்.. "கலக்குடா!! வாழ்த்துக்கள்!!!", அவ்வளவுதான்..
அந்த நாளும் வந்தது... விமானத்தில் ஏறி, இருக்கைப்பட்டையை அணிந்தபோது அவனையும் அறியாமல் கண் கசியத் தொடங்கியது.... ஜப்பான் சென்ற பிறகு, அப்பா, அம்மா, நண்பர்கள் என யாருமே இல்லாத ஒரு தனிமை ஏற்பட, நினைவெங்கும் அவளே வியாபித்திருந்தாள்... அவளின் நினைவுகளில் மூழ்கி கவிதை எழுதுவதே ஒரு தினசரி செயலாக்கிப் போனது அவனுக்கு... ஆறு மாதங்களுக்குப் பின்னர், விடுமுறைக்காக இந்தியா செல்லத் தயாரானான்..இம்முறை அவளை எப்படியாவது பார்த்து மனதில் உள்ளதை எழுத்து வடிவிலாவது காட்டி விட வேண்டும் என்ற உறுதியுடன் எழுதிய கவிதைகள் அனைத்தையும் எடுத்து பையில் வைத்துக் கொண்டான்..ஒரு சிறு சோர்வுடனும், நிறைய படபடப்புடனும், சென்னை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்து தன் சகோதரனைத் தேடத்தொடங்கின அவன் கண்கள், சட்டென ஒரு மின்னல்...
"அவளா, அது அவளேதானா!!! என் தம்பிக்கு பக்கத்தில் நிற்பது, அவளேதானா!! இரவு பத்து மணிக்கு! அதுவும் அவளுக்கு தொடர்பே இல்லாத சென்னையில்.. அந்த மைவிழி கலைத்த கண்ணீர் திரையிட்ட விழிகள் கூட அப்படியே இருக்கிறதே!! அழுகிறாளா, அவள் அழுகிறாளா!!" திகைப்பில் அழக் கூட தோன்றாமல் நின்றான் சிவா.. விஷமத்துடன் சிரித்தான் அருண்...அவனிடம் மட்டும்தான் அவளைப் பற்றி புலம்புவது வழக்கம்...
"அடப்பாவி, எதாச்சும் சொல்லிட்டானா!!" நினைத்து முடிப்பதற்குள் பார்த்தான்... இறுக மூடிய கைகளுக்குள் காகிதக்குப்பைகள், அவன் கவிதைக்குப்பைகள்... போய் அவள் எதிரே நின்றான், தலைகுனிந்து.... அவன் கரம் பிடித்து கண்ணில் வைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள் அவள்..அந்த கணம் அப்படியே உறைந்துவிடாதா என நினைத்தான் சிவா.... மனமெங்கும் இருந்த அவள் நினைவுகள் விழி வழியே வெளிவர, அவன் கண்களும் விழிநீரால் நிறைந்தது..."
உங்க வீட்ல ஒன்னும் பிரச்சனை இல்லையே" ,
"அதெல்லாம் பாத்துக்கலாம்" என்றான் அருண்...
"டே இதையாச்சும் நான் சொல்றேனே டா!!!",
"சரி சொல்லுங்க சார்"
"அதெல்லாம் பாத்துக்கலாம்" சிணுங்கல் மறைந்து சிரிக்கத் தொடங்கியது பட்டாம்பூச்சி..
அங்கு இருந்த இரு வாரங்களும் காற்றில் மிதந்து கொண்டிருந்தான் சிவா..முதல் முறையாக சந்தோஷமான காதல் கவிதைகளும் எழுதத் தொடங்கினான்...மூன்று வருடங்களாய் தேக்கி வைத்திருந்த காதல் முழுவதையும் அவள் மேல் அன்பாய் செலுத்தினான் அவன்...
விடுமுறை முடிந்து மீண்டும் ஜப்பான் செல்லவேண்டி வந்தபோது, இம்முறையும் சோகம் வந்தது, அவளை தனியே விட்டுவிட்டு செல்கிறோமே என்று... பல்லைக் கடித்துக்கொண்டு மாதங்களைக் கடத்திவிட்டு ஓடிவந்தான் இந்தியாவிற்கு... இம்முறை வந்து சேர்ந்த அடுத்த நாளே, அவன் சென்ற இடம், அவள் இல்லம்... அவளுக்கு அதிர்ச்சி தர வேண்டும் என வரும் நாளைக்கூட அவளிடம் சொல்லாமல் அவள் வீட்டுக்கு சென்றால், "வாங்க மாப்பிள்ளை சார்" என அவனுக்கு அதிர்ச்சி தந்தார் அவள் அப்பா!!
"அடிப்பாவி, அன்னைக்கு "உங்க வீட்ல ஒன்னும் பிரச்சனையில்லையா?" நு கேட்டதுக்கு இதுதான் காரணமா!!??" என்று மனதுக்குள் திட்டியவாறே அவளைப்பார்த்தால், பட்டாம்பூச்சியின் சிறகுபோல் தன் கண்களை சிமிட்டிக்கொண்டிருந்தாள் அவள்...
"எனக்கும் வேலை கிடைச்சாச்சே...சென்னையிலேயே!!"
"ரைட்டு விடு..., இனிமே இந்த ஜென்மத்துல இத விட பெரிய சர்ப்ரைஸ் என்னால உனக்கு கொடுக்க முடியாது, எப்போ வேலையில சேர போற?"
"அடுத்த மாசம், பதினொன்றாம் தேதி"
நாட்கள் உருண்டோட, அவளும் சென்னை வந்து சேர்ந்தாள்..நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த அவர்கள் காதல் திருமணத்தை நெருங்கியது... முதலில் எதிர்த்த சிவாவின் அம்மா, அப்பாவும் ஜெயஸ்ரீ என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல மறுக்கவும் விரும்பாமல் ஒத்துக்கொண்டனர்...
திருமணத்துக்கான அழைப்பிதழ் தேர்வு செய்ய ஒருநாள் வெளியே செல்லும்போது, சிக்னலில் பைக்கை நிறுத்தினார் காவலர்...
"லைசென்ச எடுடா வெளிய..ஏன், துரை வண்டிய நிறுத்தி இறங்க மாட்டிங்களா?? பின்னாடி ஒரு பொண்ணு இருந்துட்டா போதுமே!!, அப்டியே ரெக்க கட்டி பறப்பானுங்க..." குடிமகன் வாடை தெளிவாக அடித்தது
"சார், கொஞ்சம் பாத்து பேசுங்க, நீங்க பாட்டுக்கு பேசிகிட்டே போறீங்க??"
என கையை ஒங்க தயாரானான் சிவா..
"ஹே சிவா, என்ன பண்ற, பேசாம வா"
"ஹே, நீ சும்மா இரு, இந்த ஆளை இன்னைக்கு நான் பாத்துக்கறேன்"
"சிவா, யாரு பெரிய ஆளுன்னு பார்க்கறதுக்கு இது நேரம் இல்ல, பேசாம வா, அவன்தான் குடிசுருக்கான்னு தெரியுதுல்ல சிவா வா பேசாம"
"ஹே சும்மா இருன்னு சொல்றேன்ல, என்னய்யா நெனசுக்கிட்டுருக்க, வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டுருக்க?"
"சிவா, அப்படியென்ன கோபம் வருது உனக்கு, வான்னு சொல்றேன்ல,"
"ஹே...சொன்னா கேட்க மாட்டியா" சிவந்த விழிகளுடன் திரும்பி அவளை ஒருகணம் முறைத்தான் சிவா...
காதல் இல்லை, அதில் நேசம் இல்லை, ஆசை இல்லை.... கோபம், வெறும் கோபம் மட்டுமே நிறைந்த விழிகள்...
சட்டென அதிர்ந்து, இரண்டடி பின்னோக்கி நகர்ந்தாள் ஜெயஸ்ரீ...ஹே ஹே, லாரி வரு.....
கடைசியாய் அவன் பார்த்ததெல்லாம், அதே, விழிமை கலைத்த கண்ணீர் திரையிட்ட பார்வை, இம்முறை அதிர்ச்சி கலந்து....
முடிந்தது அவன் கோபம், ஆசை, மகிழ்ச்சி, காதல் எல்லாமே....
"போச்சு சார், என் ஆசை, கனவு, எல்லாமே, ஒரு நொடி கோபத்துல, கரைஞ்சு போய்டுச்சு சார்..., நம்ம மனசுக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட கடுமையா பேசறது போல வலி எதுவுமே இல்ல சார்...." யாருமில்லா தெருவில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான் சிவா...
அவன் விழிவழிந்த கண்ணீரைத் துடைக்கும் பொருட்டு, யாவருக்கும் மழையை பெய்யனப் பொழிந்தார் வருண பகவான்....

Friday, 6 August, 2010

தீவிரவாதிஒரு மெல்லிய சாரலுடன் முடிவுக்கு வந்தது எனது அந்த வியாழக்கிழமை அலுவலக நேரம்.. சுமார் பன்னிரு மணி நேரங்களை என் வாழ்நாளில் இருந்து பறிகொடுத்துவிட்டு,ஐநூறு ரூபாய்
பணம் வாங்கி வந்து வயிற்றைக் கழுவும் ஒரு சாமான்யன் நான். இரவு சுமார் ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருந்து நடந்து வீடு வந்து சேர்கையில் அறை
நண்பர்கள் யாவரும் துயிற்தாயின் மடியில்..வந்தவுடன் உறங்கப் பிடிக்காமல் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்..
“…க்காகவும், உங்க friends எல்லாருக்காகவும் அடுத்த song.. நான் நடந்தா அதிரடி… என் பேச்சு சரவெடி.. என்னை சுற்றும் காதல் வெடி நீ... நான் உந்தன்…..”
“என்ன மீனாக்ஷி இப்டி பண்ணிட்ட.. உனக்கு எவ்வளவு தரம் சொல்றது!? அவன் விஷயத்துல விளையாடாத விளயாடாதனு.. இப்போ பாரு, பத்து வயசுன்னு கூட பார்க்காம பச்ச கொழந்தைய தூக்கிட்டு போய்ட்டான்.. இப்போ என்ன பண்ண போறோம் கடவுளே!!!.. என்னங்க.. நீங்களே இப்டி….. “
“தன இணையைக் கொன்ற சிறுவனை பழி வாங்க வீடு தேடி வந்த நல்ல பாம்பு..உயிரை உறைய வைக்கும் உண்மை!! நடந்தது என்ன!!?.. ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு… அம்மன் T R Y முறுக்குக் கம்பிகள் வழங்..”
நம் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாமே எரிச்சல் தர,சட்டென ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு மாறினேன்..

“அடுத்து வரும் செய்திகள்.. இந்திய கலாசாரத்தை அவமதிக்கிறதா TIME பத்திரிகை? சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு... boys always like less…. AXE now, costs less... now just for hundred and twe….”

“the meaning of being lonely.. is this the feeling I need to walk with….tell don’t me why… I cant be there. Where you are… there’s something missing in ma….”

“அந்த மாத இதழின் ஜூலை மாத பதிப்பில், my own private India எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு நகைச்சுவைக் கட்டுரை,அமெரிக்காவாழ் இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்திய கலாசாரத்தையும்,வழிபாட்டு முறைகளையும் கேலி செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தொடர்கிறது பல வருடங்களாக அங்கே வசிக்கும் மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள….”
“அது வேற ஒரு நாடு, இப்போ காஷ்மீர் பிரச்சனைய நாங்க பார்த்துக்கரோம்னு சொன்னா அமெரிக்காவ நாம அனுமதிப்போமா, அதே மாதிரிதான் இலங்கையும், அது இலங்கையோட உள்நாட்டுப் பிரச்சனை, அதுல நாம எப்படி தலையிட முடியு…. “
“ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்ந்து வருவது குறித்து நம் வெளியுறவுத் துறை அமைச்சர் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விரைவில் ஆஸ்திரேலிய அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரி… “
“கதையல்ல.. கறுப்பு சரித்திரம்… ஒரு ஒட்டு மொத்த கிராமத்தையே கடலுக்குள் புதைத்து விட்ட குற்ற.....”
“நான்கு கரங்களையும், துதிக்கையும் உள்ள உருவத்தைக் கடவுள் என வழிபடுபவர்களை எப்படி புத்திசாலி என எடுத்துக் கொள்வது!? என்பது போன்ற சொற்கள் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மனதை மிகவும் புண்படுத்துவதாகவும், இந்தியாவின் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை அவமதிப்பதாகவும் இருப்பதாக கொதித்துப் போய் இருக்கின்றனர்..இதற்கு அடுத்த இதழில் TIMES பத்திரிகை மன்னிப்பு கேட்டிருந்தாலும், வெளியிட்டது மாபெரும் தவறு என்பதே பெரும்பாலான இந்தியர்களின் கருத்தாக….”
“ராஜா சோழன் எடுப்பித்த தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆனதை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என பல சமூகஆர்வ தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.. ராஜ ராஜ சோழன் ஆட்சி காலம் தமிழர்களின் பொற்காலம் என பொதுவாக
வரலாற்று ஆய்வாளர்களிடையே அழைக்கப்படுகிறது… இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்து, இலங்கை, லட்ச, மினிக்காய் மற்றும் அந்தமான் தீவுகளையும் சோழர் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த சக்தி வாய்ந்த கடற்படையை அவர் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்….”
“...சிவகாமி…நாய் நம்மைப் பார்த்து குரைக்குதுன்றதுக்காக, நாம அதா பாத்து குரைக்க முடியமா?? இல்ல அது நம்மள பார்த்து குரைக்கிரதுனால நாம திருடன்னுஆயிடுமோ!??.."
“...களின் தொடக்கத்தில் சில மருத்துவர்கள் எங்கள் நகரத்துக்கு வந்த பொழுது நாங்கள் இந்தியர்கள் அனைவரும் புத்திசாலிகள் என நினைத்திருந்தோம்.. பிறகு, அவர்கள் தம் வியாபாரி உறவினர்களைக் கொண்டு வந்த பொது, நாம் நினைத்த அளவு புத்திசாலிகள் அவர்கள் இல்லை என நினைத்தோம்.. அதன் பிறகு, வாடகை ஊருந்து ஓட்டும் உறவினர்களையும் கூட்டி வந்த பொழுது, இந்தியா ஏன் இன்னும் ஏழை நாடாக இருக்கிறது என அறிந்து கொண்டோம்… கட்டுரையின் இந்த பகுதி தங்கள் மனதை மிகவும் புண்படுத்துவதாய் இருப்பதாக வெகுண்டெழுந்துள்ளனர்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள்…”
“கொடு எங்கள் நாடே.. கடல் வாசல் தெளிக்கும் வீடே.. பனைமரக் காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா… முகத்தில் புன்னகை எரிப்போம், உடம்பை உயிருக்குள் புதைத்தோம்… வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோ…..”
சட்டென மின்சாரம் நின்று எங்கும் அந்தகாரம் சூழ, என் விழிகளில் இருந்து இருதுளி நீர் தெறித்தது… நான் பிரிவினைவாதியா? தீவிரவாதியா?
தேசவிரோதியா?? இல்லை மனிதனா!?? கேள்விக்கு விடை தெரியும் முன்னரே உறங்கிப் போனேன்…..