Friday, 31 May, 2013

விதை


செயலின்மையின் இனிய மதுவினைப் புட்டியுடன்
சற்று புகட்டி
கால்கள் தள்ளாட, கருவிழி கிறங்கிச் சொறுகிய பொழுதில்
கோழைமையின் கடிந்த விஷத்தினை அதில் இட்டு நிரப்பி
புட்டியைக் கவிழ்த்து
நெஞ்சம் எரித்த பின்னும்
அதன் உள்ளே வைத்த கனவின் விதையைப்
பசுமை போர்த்துக் காத்த
கொடியவன் நெஞ்சினுள் கரத்தினை செலுத்தி
விதையினை வேருடன் உருவிப் புதைக்கும்
பாரத தேசம் இப்பார் போற்றும் தேசம் என்பாம்

Tuesday, 7 May, 2013

உறவுகள் பலவிதம்

உறவுகள் பலவிதம்...அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்.. ஆதாயம் சார்ந்தவை, ஆதாயம் எதிர்பாராதவை என... முதல் வகை உறவு ஒரு வணிக ரீதியானதாகவே அனைத்தையும் பார்க்கும் குணம் கொண்டது. மனம் மட்டும் சார்ந்ததாக இருக்கும் எந்த உறவுமே ஆதாயத்தினை எள்ளளவும் கணக்கில் கொள்வதில்லை...
வலிகளும் காயங்களும் அதன் மீது மெல்லிய பூச்சாய் இடப்பெற்ற சந்தோஷத் தருணங்களும்தான் எந்த ஒர் உறவும் எனப் பொதுவாகக் கூறலாம். அது நட்பானாலும், ரத்த பந்தமானாலும், காதலானாலும் அதன் அடிப்படை ஒன்றுதான். இரு உயிர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அன்புதான். அந்த அன்பு இருக்கும் தளத்தினைப் பொறுத்து அதன் பெயர் மட்டுமே மாறுபடுகிறது. உறவுகள் உணர்வுகளின் மெல்லிய இழை வழியே பெரும்பாலும் மனித அறிவினால் காரணப்படுத்த முடியாத முறையிலேயே ஊடுபாவுவது வழக்கம்.. மானுடம் தோன்றிய இந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் பரிணாம வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்தாலும், அன்பும், அது மனித உணர்வுகளின் மீது செலுத்தும் தாக்ககும் மட்டும் கிட்டத்தட்ட நிலையாகவே உள்ளது... சங்க இலக்கியமானாலும், புதுக்கவிதையானாலும் அதிலுள்ள வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துப் பார்த்தால், அகத்திணைப் பாடல்கள் அனைத்துமே எடுத்துரைக்கும் விஷயங்கள் மனித மனத்தின், உணர்வுகளின், அது வழி பின்னப்பட்ட உறவுகளும் அதன் விளைவுகளுமே ஆகும்..
ஐன்ஸ்டீனின் எந்த ஒரு பொருளும் தனித்து இருப்பதில்லை, அதன் எதிர்மறையை சார்ந்தே இருக்கிறது எனும் கருத்து உறவுக்கும் பொருந்தும்... வெளிச்சம் என்றும் இருளைச் சார்ந்தே இருப்பதைப் போல, தணல் என்றும் குளிரைச் சார்ந்து இருப்பது போல, உறவும் பிரிவும் ஒரு கோட்டில் பின்னப்பட்ட இரு இழைகளாகவே அமைந்திருக்கின்றன..முடிவில்லாத உறவுகள் இருக்கலாம்... ஆனால் பிரிவில்லாத எந்த உறவுமே இருந்ததில்லை.. உறவின் தன்மையும், பிரிவின் தன்மையும் கூட ஒன்றை ஒன்று எதிர்த்து, சார்ந்து இருப்பவையே.. உறவு நிலையானால் அதன்பால் வரும் பிரிவு நிலையானதாய் இருப்பதில்லை... அதே போல் உறவு நிலையிள்ளததானால் பிரிவு அங்கே நிலை பெற்று விடுகிறது... இந்த நிலைத்தன்மை என்றுமே கால அவகாசத்திற்குள் அடக்க முடியாததே ஆகும்.. சில நிலையான உறவுகளில் ஏற்படும் பிரிவுகள் காலத்தால் நீண்டதாக இருந்து அந்த உறவு பொய்த்துவிட்டது போல ஒரு மாயை தோற்றுவிக்கலாம்.. ஆனால் எவ்வளவு நீண்ட பிரிவானாலும் உறவின் தன்மையைப் பொறுத்து அது ஒரு கண நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் அதிசயத்தையும் நாம் கண்கூடாகக் காண முடியும்...இவற்றை மட்டுமே நாம் உண்மையான உறவுகள் என்று வகைப்படுத்தல் வேண்டும். வாழ்வின் லட்சியமாய் பணம், புகழ், பெயர் என பல விஷயங்கள் இருந்தாலும், மனத்தின் லட்சியமாய் ஒரு மனிதன் கொள்ள வேண்டியது இது போன்ற உண்மையான உறவுகளை சம்பாதிப்பது தான் .. ஒவ்வொரு மனிதனும் அவன் இறக்கும் தருவாயில் அவனின் சுருங்கிய கை விரல்களுக்குள் அடக்கக் கூடிய அளவு அவனுக்கு உண்மையான உறவுகள் கிடைத்திருப்பின், அவனே பூரண வாழ்வை வழ்ந்தவனாவான்... அவனே மகிழ்ச்சி என்றால் என்ன என்று அனுபவித்தவனாவான்...
-------------------------தேடல் நீளும் .....