Wednesday 29 April, 2009

வாழ்வு!!


ஏற்றமில்லை தாழ்வுமில்லை
வாழ்க்கை ஓடத்தில் என்றும்
ஒட்டையுமில்லை
மனம்தான் பகை என்றாலும்
அது ஒரு நிலையில் இல்லை
சில நேரம் சிரிக்க வைக்கும்
சில நேரம் அழவும் வைக்கும் 
வாழ்க்கை ஓடத்தில் என்றும்
ஒட்டையுமில்லை
வெற்றி தரும் தோல்வி தரும்
வாழ்க்கை என்றும் பாடம் சொல்ல... 
இரண்டும் இன்றி போரும் இல்லா
வாழ்வில் என்றும் வெறுமை வரும்
பின்பு வெறுப்பும் வரும்.. 
கடவுள் செய்த பூமி என்றார்
அவனே என்றும் துணைவன் என்றால் 
பாழும் உலகில் மாந்தர் எதற்கு!!?? 
மனிதப் பிறவி எடுத்து வந்தோம்
இந்த மண்ணுக்கு 
மனமென்னும் தூரிகையால்
வாழ்வென்னும் ஓவியம் சொல்ல... 
தூரிகைதான் தூர்ந்ததென்றால் 
ஓவியமும் உதிர்ந்துவிடும்
அறிவீரே மானுடரே!!!
வண்ணமிகு ஓவியமும்
மனம் கலைக்கும் ஒபியமும்
கலந்ததென்ன உன் முகத்தில்.. 
இருள் விலக்கும் அக ஒளியும்
கண்பறிக்கும் மின்னலதும்
சுமந்ததென்ன உன் விழியோ! 
மணம் பரப்பும் மலர்வனமும் 
கண்களிடை குங்குமமும் 
பிணைந்ததுந்தன் செவ்விதழில்.. 
சேற்றலரும் செங்கமலம் 
தாங்கி நிற்கும் தண்டதுவோ 
ஆனதென்ன உன்னிடையாய்!! 
கூடல்நகர் வெண்சங்கும்
பெருங்களிறின் தந்தமதும்
ஒன்றிணைந்த உன்கழுத்தில்
சோழனவன் செம்பொன்னும்
பாண்டியனின் வெண்முத்தும்
இழையச் செய்த பொற்தாலி
நான் சூட்டும்
நாள்வருமோ பைங்கிளியே!!!!

Sunday 19 April, 2009


உன் மனதை நீ மறைக்க,
அதைக்கண்டு நானோ கண்மூட
மௌனியாய் நீ.. மௌனமாய் நான்...
என்னை உயிர்ப்பிக்க வாராயோ....

Wednesday 15 April, 2009


மலர்தாமரை முகம் கொண்டு 
அதில் ஆதவன் குணம் கலந்து 
படர்கொடியின் இடைகொடுத்து- பிரம்மன் 
வரம் கொடுத்த விழியுடையாள் 
விழியிரண்டும் வேலாக 
கொடியிடையோ அசைந்தாட 
மலர்மீது மணம்  பரப்பி 
வனம் கடந்தாள் என் தேவதை
என் தேவதை மனம் நிறைக்க
புதுக் கவிதை நான் வடிக்க 
அவள் பார்வை நான் கேட்டேன் 
அவள் மறுக்க நான் மரித்தேன் 

தமிழுக்கும் அமுதென்று பேர் 
ஆனால் அதுகூட நீ பேசினால்தான்  இனிக்கிறது எனக்கு!!!

தேவதை


அன்றொரு நன்னாளும் அழகிய காலையும் 
எனக்கு அவளைக் காட்டின...
எல்லா நாளையும்போல் விடிந்த அந்த வெள்ளிக்கிழமையின் 
இரவுமுதல் தூக்கம் தொலைத்தது என் இதயம்
சமீபகாலமாக என் கண்களும்...
சாந்தமான தோற்றமும்
கவிதையும் ஓவியமும் கலந்த பேசும்
மின்னலும் தென்றலும் கலந்த புன்னகையுமாய் 
அவள் வளையவந்த அந்த நான்கு நாட்களைத்தான்
நான் தேவதைகள் தினமாகக் கொண்டாடினேன்...!!
அவளுக்கென்ன!! தேவதையல்லவா...!! அதனால் 
உணர்ச்சிகளும் இல்லை போலும்... ஆம் !
எந்த சலனமும் இன்றி பின் எப்படி என் இதயத்தைப் 
பறித்துச் செல்ல முடிந்தது அவளால்!!
இதயத்தைப் பறித்தால் காதலைத் தருவாள் என மகிழ்ந்திருந்தேன்
அவளோ எனக்குக் கல்லறையைக் காட்டி ஓடி மறைந்தாள்....

வியப்பு!!!


உன்னைக் கண்ட நாட்களின் நினைவு சொர்க்கமாகின்றது
உன் பெயரை நாட்குறிப்பில் எழுதாத நாள் நரகமாகிறது
வெறும் விழி வீச்சுக்கும் புன்னகைக்கும் 
இத்துணை சக்தியா!!? நான் வியக்கத் தொடங்கி ஆண்டு பல கடந்துவிட்டது
ஆனால் அந்த வியப்பு மட்டும் இன்னும் அப்படியே... உன்னைப்போல் 
அழகாக...என் மனதில்...
இதோ!!! இன்று நான்காம் சித்திரைத் திருநாள்!!!

Sunday 12 April, 2009

மனமெனும் மாயக் குரங்கு


மனிதனின் மனம், அவனின் மன ஓட்டங்கள், அவன் வாழ்க்கையை மட்டுமன்றி, அவனை சுற்றியிருக்கும் அனைத்து உறவுகளின் வாழ்க்கையையும் மிகவும் பாதிக்கிறது. பாதிக்கப்படும் மனிதரின் மன நிலைமையைப் பொறுத்து பாதிப்பின் அளவும் வேறுபடுகிறது. இதைப் பலரும் உணர்வதில்லை. வெறும் அறுபது முதல் எழுபது ஆண்டுகள் மட்டுமே வாழ முடிந்த ஒரு சராசரி மனிதன், தன் வாழ்நாளில் எத்துனை சக மனங்களை காயப்படுத்தி, கசக்கி, காலடியில் போட்டு நசுக்கி, தன் வலிமையை நிரூபிக்கத் துடிக்கிறான் என்பதை பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது!! ஹிட்லர் முதல் முசோலினி வரை, ஜார்ஜ் புஷ் முதல் சதாம் உசேன் வரை.. அவ்வளவு ஏன்!! நம் வாழ்க்கையிலேயே பலரை சந்திக்க நேரிடுகிறது. அன்பு மட்டுமே வாழ்க்கையில் நிலையான இன்பத்தைத் தரும் என்பதை யாரும் உணர்ந்தும், தெரிந்தும் தன்னை திருத்திக் கொள்ள முயல்வதில்லை..அன்பின் அடிப்படையில் உருவானவைதானே நாம் வணங்கும் அத்துணை தெய்வங்களும்!! எல்லா மதங்களும் வலியுறுத்துவது அன்பை மட்டும்தானே!! இவை யாவுமே எவருக்கும் தெரியாத செய்திகள் இல்லை.. வலுக்கட்டாயமாக மனதில் இருந்து ஒவ்வொரு தனி மனிதனாலும் அகற்றப் பட்டவை.!!
ஒவ்வொருவனும் அதற்கு காரணம் என்ற பெயரில் ஒரு கதையை சொல்லிக்கொள்வதுண்டு!! அவ்வப்போது எழுந்து தன்னைக் குத்தும் மனசாட்சியை கொள்ள இயலாமல் சமாதானப் படுத்தும் நோக்குடன்.. ஆனால் பாவம்!! ஒவ்வொருவனும் தன் வாழ்க்கையின் இறுதி நிமிடங்களை நெருங்கும்போது, அவனின் மனதை, மனசாட்சி செய்யும் துன்பம் இவன் வாழ்க்கை முழுவதும் பிறரையும் அவன் மனசாட்சியையும் துன்புறுத்தியதற்கு சமமானதாக இருக்கிறது. எந்த ஒரு சாமான்ய மனிதனின் பணப் புகழும் அதிகபட்சம் இரு தலைமுறைகளுக்கு மேல் நீடிப்பதில்லை. அப்படி நீடிக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவருமே அன்பை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தியவர்களாகவே இருக்கிறார்கள். இதுவும் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே..பின்பு ஏன் ஒருவரும் இதனை பின்பற்றுவதில்லை என்பது தான் புரியாப் புதிராகவே இருக்கிறது..!! இதுவரை நான் சந்தித்த மனிதர்களில் கிட்டத்தட்ட அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் உருவாகும் கோபத்தை அவர்தம் எளியரின் மீது செலுத்தும் செயலை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்... கோபம் என்பதே ஒரு மனிதனின் இயலாமையைக் காட்டும் ஒரு வழி தானே. "நகையும் உவகையும் அழிக்கும் சினத்தின் பகையும் உளவோ பிற" எனும் வள்ளுவர் வாக்கினை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்!! அவர்கள் அனைவருமே வாழ்வில் வெற்றியடைந்தவர்கள்தாம், இல்லையா!! வாழ்வில் வெற்றி என்பது வெறும் பணத்தையும் பதவிகளையும் வைத்து மதிப்பிடப்படுவதில்லை..அவன் வாழ்வில் அவனுக்குக் கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சியான மற்றும் மனம் நிறைந்த தருணங்களும், அவன் இறப்புக்காக உண்மையாக கண்ணீர் சிந்தும் உள்ளங்களும்தான் அவனின் வெற்றியை சொல்பவை என்பது என் உறுதியான எண்ணம். அப்படி உண்மையாகக் கண்ணீர் சிந்தும் உள்ளங்களுக்கான தேடலில் நாம் பல போலிகளையும், அவர்கள் தரும் வலிகளையும் தாங்கிக் கொள்ள நேரிடலாம். அவற்றையெல்லாம் தாண்டியும் வாழ்க்கையை ஒரு நம்பிக்கையோடே வாழ்ந்து முடிப்பவர்கள்தாம் பிறருக்கு எடுத்துக்காட்டுகளாய் கூறப்படும் உன்னத மனிதர்களாகின்றனர்..

Thursday 9 April, 2009

song of the week!!


என் மனதிலே என் மனதிலே நுழைந்தவள் நீதானே
உன்னைக் கண்டதும் உன்னைக் கண்டதும் நான் உள்ளே உடைந்தேனே
உன் ஜோடி கண்களின் வெளிச்சம் கண்டேன் முன்னாலே
பல குறிஞ்சிப் பூக்களும் பூத்தது அன்றே என்னுள்ளே
உன்னோடுதான் என் வாழ்க்கையே
என்றெண்ணினேன் அப்போழுதிலே.. (என் மனதிலே)
வாசம் அறியாப் பூவைப் போல திசையை அறியாப் பறவை போல
அலைந்து திரிந்தேன் நானும் இங்கே பெண்ணே உன்னைக் காணும் வரையில்
உந்தன் மேலே காதல் கொண்ட நானும் எங்கே கண்ணே கண்ணே
காதல் போயின் சாதல் என்ற பாரதியார் எங்கோ அங்கே
இசையாக நீயும் வந்தாய் கானமாக துடித்தேனே
அபஸ்வரமே வேண்டாம் என்றாய்.. உயிர் வரை வெந்தேனே..(என் மனதிலே)
உன்னைக் கண்ட ஒவ்வொரு நோடியும் பிறந்தேன் நானும் மீண்டும் மீண்டும்
பெண்ணே ஏனடி இன்னும் கோபம் வந்து சேர்ந்திடு இங்கே நீயும்
என் காதல் என்னைக் கொல்லும் உயிர் தருவாய் நீயே மீண்டும்
தேவதையை நேரில் கண்டால் உயிர் பிழைப்பேன் மீண்டும் நானே
தென்றலாக வந்தாய் நீயும் பூவாக உதிர்ந்தேனே
என் வாழ்வில் நீயே வந்தால் மலர்வேனே மீண்டும் நானே... (என் மனதிலே)


Tune: Vanna Nilave Vanna Nilave from "Ninaithen Vandhai"

Friday 3 April, 2009

மானுடரே பாரீர்!



மௌனமே மொழியாய்
வெட்கமே ஆடையாய்
நர்த்தனமே நடையாய்
வில் வீச்சே பார்வையாய்
மின்னலே புன்னகையாய்
தேவதையே பெண்ணுருவாய்
மலர்ந்ததிங்கே
மானுடரே பாரீர்! பாரீர்!

அசமஞ்சனையும் கவிஞனாக்கும்
பரதேசியையும் பட்டத்தரசனாக்கும்
கோழையையும் மாவீரனாக்கும்
ஏனோ?
காதல்,
என்னை மட்டும் ஊமையாக்கியதேனோ??