Tuesday 10 December, 2013

பல்லவர் வழிப் பயணம்...


   இந்த 2013 பிரஸ்தாராவிற்கு தனிப்பட்ட முறையில் சிறப்பாகவே அமைந்திருக்கிறது...மாணவர்களுடன் களப்பயணம், கோவில் கட்டடக் கலை வகுப்புகள் என்று முன்னேற்றப் பாதையில் பிரஸ்தாரா சென்று கொண்டிருந்தாலும், நண்பர்கள் குழுவாக இருந்த பொழுது நாம் ஆவலுடன் திட்டமிட்டு, ஆர்வமாக எதிர்நோக்கி உவகையுடன் சென்று வந்த சுற்றுப்பயணங்கள் இல்லாது போனது ஒரு பெரும் வருத்தமே. என்றுமே இது போன்ற பயணங்கள் மூலமாகவே புதிய சிந்தனைகளும், திட்டங்களும் உருவாகும் என்பது திண்ணம்.
    இந்தக்குறை போக்குவது என்று முடிவு செய்து, இரு வாரங்களுக்கு முன்னாள், குழுமத்தின் முன்னாள் இளவலும், இந்நாள் நிறுவனர் தலைவருமான ஜெயக்குமார் மற்றும் குழுமத்தின் தொழில்நுட்பத் தலைவர் ஜோதிவேல் அவர்களிடம் கலந்தாலோசித்து, ஏற்கனவே திட்டமிடப்பட்டு மலைப்பு காரணமாக ஒத்திப்போட்டிருந்த பல்லவர் சுற்றுப்பயணத் திட்டத்தை விரித்துரைத்தேன். இந்த பயணம் மேற்கொள்ளாவிடில் 2013ஆம் ஆண்டு நிறைவு பெற்றதாக தமிழ் கூறும் நல்லுலகு ஒப்புக்கொல்லது  என்று வலியுறுத்தவே, அவர்களும் மேன்மக்கட்கே உரிய தயாள குணத்துடன் இசைவளித்தனர்.
      இரு நாள் பயணம். மாமல்லபுரம் அதிரண சண்டேஸ்வரத்தில் (புலிக்குகை அருகே) துவங்கி, திருக்கழுகுன்றம், செஞ்சி வழியே திருவண்ணாமலை கடந்து, பல்லவர் தலைநகராம் காஞ்சி மாநகரிலே பயணத்தை நிறைவு செய்வதாகத் திட்டமிட்டோம். செல்லும் வழி நெடுகிலும் பல்லவர் எடுப்பித்த குடைவரைக் கோவில்கள் அமைந்திருந்தது இப்பாதையை நாம் தேர்ந்தெடுத்ததன் முக்கியக் காரணம். இந்த பயணத்தில் முக்கிய நோக்கம், நாம் செல்லும் அனைத்து கோவில்களையும் முழுமையாக புகைப்பட ஆவணப்படுத்தல். 

       30-11-13 சனிக்கிழமை  அதிகாலை 5.30 அளவில் திருவான்மியூரில் இருந்து கிளம்புவதாகத் திட்டம். வழக்கம் போல நேரம் தவறாமல் சரியாக 6.45 கு கிளம்பியாயிற்று. முதல் இடம் மாமல்லபுறத்திற்கு சற்று முன்னாள் இருக்கும் அதிரண சண்டேஸ்வரம் (புலிக்குகை). மென் தூறலும், கார் மேகங்களும் சூழ நாம் அதிரண சண்டேஸ்வரம்  அடைந்தோம். பச்சைப் பசும்புற்களும் பசுக் கூட்டமும் நிறைந்த ரம்யமான சூழலில் நம் கண்ணுக்கு காணக் கிடைத்தது 1300 வருடங்கள் பழமையான அந்த குடைவரைக் கோயில். இரு துவார  பாலர்களுடன், இட வலதில் சோமா ஸ்கந்தர் சிற்பங்கள் வீற்றிருக்க, கருவறையினுள்  மற்றும் ஒரு சோமாஸ்கந்தர் காட்சி அளிக்கிறார். பல்லவர் பாணி சிற்பங்களுக்கே உரிய உயிர்ப்பான தோற்றத்துடன். குடைவரையின் அருகில் இருக்கும் மகிஷாசுரமர்த்தினி புடைப்புச் சிற்பம்  காணத்தவற விடக்கூடாத ஒரு கலைப் படைப்பு. அந்த அதிகாலை வேளையிலேயே கடமை உணர்ச்சி  சற்றும் தவறாத இரு காதல் ஜோடிகள் உள்ளே  நுழைய,நாம் மெதுவாக அந்த இடம்  விட்டகன்றோம். அடுத்து மாமல்லபுரம் ஆதி வராகர் கோவிலுக்கு செல்வதாக  உத்தேசம். ஆனால், காலை உணவு வேளையாதலால், வயிற்றுக் குணவில்லாத போழ்து சிறிதளவு செவிக்கும் ஈயப்படும் என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்கி மாமல்லா உணவகத்தினுள் நுழைந்தோம் (என்னே நம் பல்லவர் பற்று, உணவகம் பெயர் கூட மாமல்லா).
       ஆற அமர சிற்றுண்டி முடித்ததும் ஆதி வராகர் கோயிலுக்கு சென்றால், அது சிறுவர்களின் கிரிக்கெட் மைதானமாக மாறியிருந்தது. வாயிலில் காவலுக்கு ஒரு சிறு நூலில் கட்டப்பட்ட பைரவர் வேறு. அப்டியே இரண்டு அடிகள் பின்னோக்கி  நடந்தோம். கோயில் குருக்களை அழைத்து திறக்க சொல்லலாம் என்றால், அன்று சனிக்கிழமை ஆதலால் அவரோ ஸ்தல சயனப் பெருமாள் கோயிலில் "ஒரே பிஸி". சரி என்ன பண்றது அப்டின்னு அடுத்த இடம் நோக்கி காரைக்  கட்டினோம். அடுத்த இடம் திருக்கழுகுன்றம்.  
  மாமல்ல புரத்தில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலையில் சற்று தூரம் சென்று, பையனூர் அருகில் குறுக்காகச் செல்லும் பாதையில்  சென்றால் சில  கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது திருக்கழுகுன்றம். மலை மீது வீற்றிருக்கிறார் வேதகிரீஸ்வரர். அவரை வணங்கி சுற்றி இறங்கி வரும் தடத்தில் அமைந்திருக்கிறது நாம் நாடி வந்த குடைவரை. இந்திய தொல்பொருள் துறையின் பொறுப்பான நடவடிக்கையால் நல்லா நாலு தூண்களிலும் இரும்பு சட்டம் போட்டு பூட்டப்பட்டிருந்தது. புகைப்பட ஆவணம் எடுக்க வந்த நம் குழு சற்றே சோர்வடைந்தது. ஒரு கணம் தான். நம்மகிட்ட முடியுமா?? பின்னர் வெள்ளையர்கள் நம்மிடம் கடைப்பிடித்த பிரித்தாளும் சூழ்ச்சி நமக்கும் கைகொடுத்தது. நாம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி பற்றிய புகைப்படத் தொகுப்பு கீழே. 

   அடுத்து நாம் சென்ற இடம் ஸ்ரீவல்லம். திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 12.5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. மொத்தம் மூன்று குடைவரைகள்  அமைந்திருக்கின்றன. ஒன்று விஷ்ணுவிற்கும், இரண்டு சிவபெருமானுக்கும்  சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. இம்மூன்று கோயில்களுமே வழிபாட்டில்  இருக்கின்றன. விஷ்ணுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடைவரை கிட்டத்தட்ட அதன் இயல்பு மாறாமல் பராமரிக்கப்பட்டு வந்தாலும் மற்ற இரண்டும், டைல்ஸ்  மண்டபங்களும், கண்ணைப்பறிக்கும் பெயிண்டுகளும் பூசப்பட்டு  காணப்படுகின்றன.இதை செய்பவர்களின் நோக்கம் நல்லதாகவே  இருந்தாலும்,அவர்களின் அறியாமை காரணமாக சிற்பங்களின் இயல்பு மாறாது பாதுகாக்க தவறி  விடுகின்றனர்.இந்த நிலை தமிழகத்தின் பல தொன்மை வாய்ந்த கோயில்களுக்கும்  நேர்ந்திருக்கிறது. இந்திய தொல்பொருள் துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் பின்வரும் தலைமுறைகளுக்கு இந்த அரிய கலைப்போக்கிஷங்கள் சென்று சேராமலே போய்விட வாய்ப்பு அதிகம். 

 [வல்லம் குடைவரையின் முன்பாக கொட்டிவைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்கள் ]


     அடுத்து நாம் சென்ற இடம் சிங்கபெருமாள் கோயில். இந்து சமய அறநிலையத் துறை கீழ் வரும் இந்த கோயில் ஆதலால் புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. நம்ம போனது வேறு மதியம் 2 மணிக்கு. பூட்டிய கதவை வெறித்து விட்டு திரும்பினோம். வேறே என்ன செய்ய. இங்கே செல்ல விழைபவர்கள் வழிபாட்டு நேரத்தில் சென்றால் மட்டுமே தரிசிக்க முடியும்.
     நம் பயணம் செஞ்சி நோக்கித் தொடர்ந்தது . வழியெங்கும் பச்சைப் பசேலென்ற  வயல்வெளிகள், கார்மேகங்கள், சில்லென வீசும் பூங்காற்று, செவிக்கு இளையராஜாவின் இசை என கிறங்கடித்தது. தொண்டை மண்டலம் இவ்வளவு பசுமையா என உள்ளம் வியந்து  கொண்டே இருந்தது. மதிய உணவை மாலை 4 மணிக்கு அருந்திவிட்டு செஞ்சியில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் சிங்காவரம் செல்ல கிளம்பும்போது பெருந்தூறல் தொடங்கியது. சிங்காவரம் ஒரு மிக மிக எளிமையான, அழகான, அமைதியான கிராமம். அதிலும் சற்று உள்ளே தள்ளி அமைந்திருக்கிறது நாம் நாடி வந்த ரங்கநாதர் ஆலயம். இதுவும் வழிபாட்டில் இருக்கும்  ஆலயம்.  நாம் சென்ற பொது திறக்கப்படவில்லை. நமக்கு  முன்னரே அங்கே வந்து காத்திருந்த சிற்பிகள் குழு ஒன்று கோவில் தாண்டி மலை மீது ஏதோ சிற்பம் இருப்பதாகக் கூற, நானும் ஜெயக்குமாரும் சுவரேறிக் குதித்து மலை ஏற்றத்தினைத் தொடங்கினோம். சற்றே கடினமான பாதைதான்.


[சிங்காவரம்] 
    சுமார் 1 .கி.மீ தூரம் பாறையேற்றத்திற்குப்  பிறகு நாம் கண்டது மனதை மயக்கும் நிலக்காட்சி. பறந்து விரிந்த சமதளப் புல்வெளி. ஓர் ஓரமாய் இயற்கையாக உருவாயிருந்த தெள்ளிய நீர் நிறைந்த குளம். அதன் மத்தியில் அமைந்திருந்தது முகமண்டபத்துடன் அமைந்த ஒரு கோயில். கருவறையினுள் தெய்வங்கள் ஏதும் இல்லை. ஆயினும் உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்யும் அந்த  எளிமையான மண்டபம் நம்மை அவ்விடம்  விட்டகலச்  செல்லவிடாத பிடிப்பை  ஏற்படுத்தியது. அங்கிருந்து கீழே ஒரு வழியாய் இறங்கி வந்தோம்.அதற்குள்ளாக கோவில்  திறக்கப்பட்டிருந்தது. கருவறையினுள் இரு தூண்களுடன் மூன்று அறைகளில் தரிசிக்கக் கிடைத்தார் ரெங்கநாதர்.பிரம்மாண்டமான ரங்கநாதர். அரங்கனின் நாபியில் இருந்து உதித்த  பிரம்மா தாமரையில் வீற்றிருக்க, அவருக்கு இடதில் பூதகணமும், வலப்பக்கம்   கருடாழ்வாரும். பாதங்களில் பணிந்திருக்கும் பூமாதேவி. அரங்கனின் தலைக்கு மேலாக ஐந்து தலை ஆதிசேஷன். தனித்துவமாய் விண் நோக்கி  அமைந்திருந்தார்.முகத்தில் துலங்கிய ஒளி  என்ன ,  கண்களில் விளங்கிய கருணை என்ன, இதழ்களில் வழிந்த மந்தகாசம் என்ன, அப்பப்பா! பார்க்கும்பொது நெஞ்சம்  விம்மியது.அதனை வடித்த சிற்பியின் கரங்களை மனம் மானசீகமாய்த் தொழுதது. அரங்கனைப் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. அனுமதி இருந்திருந்தாலும் அவனது எழிலை ஒரு புகைப்படத்தில் அடக்கியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.  நம் திட்டப்படி அன்று மேலும் நான்கு குடைவரைகள் பார்த்திருக்க வேண்டும். ஆனால், பயணம் செல்ல செல்லவே தெரிந்தது; பல்லவர் குடைவரைகளை இரு நாட்களில் பார்த்தல் சாத்தியமல்ல என்று. மலையில் இருந்து இறங்கும்போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. அன்று இரவு ஜோதிவேல் அவர்களின் அரசம்பட்டு  பண்ணை இல்லத்தில் தங்குவதாக திட்டம். வண்டி கிளம்பி அரசம்பட்டை நெருங்கியதில் இருந்து ஜோதிவேல் அவர்கள் மீனை உறுத்துக் காத்திருக்கும் நாரைபோல் ஆர்வமாக வீட்டைத் தேடி  காத்திருந்தார். நாமளும் போறோம் போறோம் ஊரே தாண்டிருச்சு. வீட்டைக் காணாம்!! என்று ஜோதிவேல் சொல்ல, நமக்கு பகீரென்றது. சரி,  பதறாதீங்க,பக்கத்துக்கு கடைல விசாரிச்சுட்டு வரேன்னு போனார். அந்த கடைக்காரன் இவர் மணியக்காரர் வீட்டுக்கு வழி கேட்டதும் ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து விட்டு, சொந்த வீட்டுக்கே வழி கேட்ட முதல் ஆள்  நீதான்யா என்று சொல்லி .பாராட்டிவிட்டு, வீட்டிற்கு  அடையாளம் கூறினார்.  சொந்த வீட்டுக்கு வழி கேட்ட செய்யாறு சிங்கம் வாழ்க வாழ்க என்ற கோஷங்களுக்கிடையே அன்னாரின் இல்லத்திற்குள்  நுழைந்தோம். இப்படியாக பயணத்தின்  முதல்நாள் ஒருவழியாக  இனிதே நிறைவடைந்தது.
       அடுத்த நாள் காலை அதிகாலையிலேயே துயில் எழுந்து, சீரும் சிறப்புமாக சிற்றுண்டியை ஒரு கை பார்த்துவிட்டு, நாம்  திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள அறகண்டநல்லூர். பல்லவர் குடைவரை நூலை இயற்றிய மேதகு.கூ.ரா. ஸ்ரீனிவாசன் அவர்கள் கூற்றுப்படி ஒப்பிலா நாயனார் கோவில் அமைந்துள்ள பாறையின் கிழக்குப் பகுதியில், அடிவாரத்தில்  அமைந்துள்ளது அந்த முற்றுப்பெறாத குடைவரை. கோவிலின் பெயரே ஊரில் எவரும் அறிந்திருக்கவில்லை. குகைக் கோவில், குடைவரை, பாறைக்கோயில், பல்லவர் கோயில்  தெரிந்த சகல சொல்லாடல்களையும் பயன்படுத்திப் பார்த்தும் பலன் பூஜ்ஜியம்.  சுமார் அரைமணி நேரம் ஊருக்குள்  திரிந்து, ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதியிருந்த குறிப்பை மீண்டும் மீண்டும் படித்த பின்னர், அங்கு  வந்த ஒரு முதியவரிடம்  கேட்க, அவர் சர்வ சாதாரணமாக, பஞ்ச பாண்டவர் அறையைக் கேட்கிறீர்களா?? என்று கேட்டு விட்டு வழிகாட்டினார் . தற்போது அதுல்ய நாதேஸ்வரர் கோயில் என்று அறியப்படும் ஒப்பிலா நாயனார் கோவில் கோபுரம் அமைந்திருக்கும் பாறையின் அடிவாரத்தில்,கோபுரத்திற்கு வெளியே வரும் வழியில் இடப்புறத்தில் அமைந்திருக்கிறது அந்த பெயரிடப்படா, முற்றுப்பெறாத அழகிய குடைவரை. சிற்பங்களோ, கருவறையோ அமையாத, நாம் பார்த்ததிலேயே மிக நீளமான குடைவரை.


 [நம் வழிகாட்டி]
     இதன் எதிரிலேயே மிக ரம்யமான இயற்கையாய் அமைந்திருக்கும் சுனை ஒன்று குடைவரையின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. ஆனால் தற்போது எந்த வித பராமரிப்பும்  இன்றி சமூக விரோதக் காரியங்கள் நடைபெறும் இடமாகத் திகழ்வதன் அறிகுறிகள் தென்படுகின்றன என்பது வேதனைக்குரிய விஷயம்.

[தாள கிரீஸ்வரர்]
     அறகண்டநல்லூரில் இருந்து திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் சுமார் 30 கி.மீ. தூரம் சென்றால் நாம் பனைமலையை அடையலாம். நாம் இந்த சுற்றுப்பயணத்தில் சென்ற அனைத்துக் கோயில்களும்  கிட்டத்தடட  அமைதியான, பசுமையான வயல்கள் சூழ ஏகாந்தத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண முடிந்தது. அந்த மட்டில், இவையாவது நம்மைப் போல நாகரீகம், நகரமயமாதல் என்று சிக்கிக்கொண்டு மூச்சடைத்துக் கிடக்காமல் நிம்மதியாய் இருப்பதில் மகிழ்வே. நிற்க. சாலையில் இருந்து சுமார் 500 மீ. சென்றால் பனைமலை அடிவாரத்தினை அடையலாம்.
[பனைமலை அடிவாரத்தில் பயணக்குழு]
[வாண்டுகளுடன் வாண்டாக...]
   மலைமீது அமர்ந்திருக்கிறார் தாளகிரீஸ்வரர். கோவிலில் இந்தியத் தொல்பொருள் துறை பணியாளர்கள் யாரும் இல்லை. தற்போது கோவில் சில குரங்கார்கள் வசமும், ஒரு மூதாட்டி, ஒரு வேலையில்லாப் பட்டதாரி வசமும்  இருக்கின்றது. இதன் பின்புலம் அறியக்கூட வில்லை. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை ஒத்த அமைப்பில் அமைந்திருக்கிறது விமானம். கருவறையினுள் நடுநாயகமாய் பிரம்மாண்டமான சோமஸ்கந்தர். இடப்புறமும் வலப்புறமும் விஷ்ணுவும் பிரம்மாவும். புடைப்புச் சிற்பங்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. பல்லவர்கால சுவர் ஓவியங்கள் அவர்கள் படைத்த சிற்பங்களைப் போலவே ஆழமான உயிரோட்டம் மிக்கவை.  தாளகிரீஸ்வரர் திருக்கோவிலின் பிரதான சந்நிதியை ஒட்டி அமைந்துள்ள சிறு சந்நிதியின் உள்ளே அமைந்துள்ளது அந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஓவியம். 
 [உமை ]
   கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில், நமது கவனக்குறைவின் உச்சத்தை உணர்த்தும் வகையில், எஞ்சி இருக்கிறது கையில் குடையினை ஏந்தி எழிலுடன் நின்றிருக்கும் உமையவளின் ஓவியம். 1300 ஆண்டுகளுக்கு முன்னால் பெண் தெய்வ வழிபாடு இருந்துபட்டதை தெளிவாக உணர்த்தும் ஒரு சான்றாக. ஒரு பானை சோற்றில் ஒரு பருக்கை. முற்றிலும் அழிந்துவிட்ட பிரதான ஓவியத்தில் சிவன் ஆனந்த நடமிடுகிறார். அவருக்கு அருகில்  அமைந்துள்ளது இந்த உமையின் ஓவியம். உமையவளின் கண்களில் உள்ள உயிர்ப்பும், அன்னையின் இதழில் ததும்பும் மந்தகாசமும், அவளின் சிரசில் சூட்டப்பட்டுள்ள கிரீடத்தின் அலங்கரிப்பும், அவள் தாங்கியுள்ள குடையில் வண்ணங்கள் கொண்டு படைக்கப்பட்டுள்ள நுணுக்கமும் இந்த கலைப்போக்கிஷத்தினைப் படைத்த மூதாதையை காலத்தை வென்ற கலைஞனாக்குகிறது.



[மண்டகப்பட்டு]
     இதனையடுத்து நாம் சென்றது, செங்கலோ, உலோகமோ, மரமோ இன்றி, எங்கும் நிறைந்திருக்கும் இறைக்கு யாம் எடுப்பித்த கற்கோயில் என்று விசித்திரசித்தர் மகேந்திர வர்மர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள மண்டகப்பட்டு இலக்ஷிதாயணம். அதன் எதிரில் அமைந்துள்ள மகேந்திரர் தடாகம் அந்த சூழலுக்கு மேலும் அழகூட்டுகிறது.

     மண்டகப்பட்டில் இருந்து செஞ்சி செல்லும் நெடுஞ்சாலையில் சற்று தூரம் சென்றால் நாம் அடையும் இடம் தளவானூர். 


[சத்ரு மல்லேஸ்வர சுவாமி குடைவரை]
       சாலையில் இருந்தே பார்க்குமாறு அமைந்திருக்கிறது சத்ரு மல்லேஸ்வர சுவாமி குடைவரை. சுற்றிலும் பசுமை நிறைந்த வயல்கள் சூழ, மெல்லிய இலன்தூரளுடன், நாற்று வழி நாம் குடைவரையினை அடைந்த பாதையே மிகவும் எழிலார்ந்த ஒன்று. காணும் காட்சி யாவும் பசுமை நிறைந்து கண்களின் நுழைந்து நிரம்பி வழிந்து ததும்பியது என்று கூறினால் அது மிகையே அல்ல. அத்துணை வகையான பச்சை வண்ணங்களை எந்த தலைசிறந்த ஓவியனாலும் எத்துனை தூரிகைகள் கொண்டும் தீட்டிவிட முடியாது..இந்த குடைவரையும் அந்த சூழலுக்கு எழில் சேர்க்கும் வண்ணம் மிகுந்த கலை நுணுக்கத்துடன் படைக்கப் பெற்றுள்ளது. அதன் நுழைவாயிலில் அமைந்துள்ள மகர தோரணம் எழிலார்ந்து காணப்படுகிறது.
   தளவானுரில் இருந்து செஞ்சி சென்றால் அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மேலச்சேரி ஸ்ரீ சிகாரி பல்லவேஸ்வரம். ஊரில் இருந்து சற்று தள்ளி, ஒரு குன்றின் மீது குடியிருக்கிறான் குமரன். அந்த பாறையினை வலமாகச் சுற்றி சென்றால் அமைந்திருக்கிறது மனத்தைக் கொள்ளை கொள்ளும் எழிலுடன் அமைந்திருக்கிறது சிகாரி பல்லவேஸ்வரம். நாம் சென்ற நேரம் இருட்டி விட்டதனால் கோவில் பூட்டி இருந்தது. குடைவரையை ஒட்டி ஒரு செங்கற் கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளது. கோவிலின் வாசலில் ஒரு எழிலார்ந்த நந்தி, கல்லாலான தீபக்கம்பமும் அமைந்துள்ளது. வழிபாட்டில் இருக்கும் கோயில். பார்க்க விரும்பினால் காலை நேரத்தில் ஊருக்குள் சென்று அருகாமையில் இன்னோர் ஊரில் இருக்கும் கோவில் குருக்களின் உதவியுடன் கோவிலை பார்க்க முயற்சிக்கலாம் என ஊர் மக்கள் கூறினர்.
[சிகாரி பல்லவேஸ்வரம்]

   நாம் திட்டமிட்டபடி சென்றிருக்கவேண்டிய இடங்கள் இன்னும் விழாப்பாக்கம், மாமண்டூர், குரங்கணில் முற்றம், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த குடைவரைகள். ஆயினும், இரு நாட்களில் முடியக்கூடிய காரியம் அது அல்ல என்பதனால் நாம் பயணத்தை முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மற்றும் ஒரு தருணத்தில் செல்லவேண்டும், வெகு விரைவில் என்று எண்ணமிட்டுக்கொண்டோம். 


   அங்கிருந்து செஞ்சி வரும் வழியில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது சிங்காவரம் ஜெயின் மலை. ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. சரி, முழுவதுமாக இருட்டு ஆட்க்கொள்ளும் முன்னர் சென்று பார்த்து விடலாம் என்று முடிவு செய்தோம். படியேறும் வழியில் பாறையில் செதுக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிற்பம் உடைந்த நிலையில் காணப்பட்டது. அங்கிருந்து சற்று தூரம் மேலும் ஏறிச் சென்றால் ஓர் ஓங்கிய பாறையில் வரிசைக்குப்  பன்னிரெண்டாகச்  செதுக்கப்பட்ட, ஜைன மதத்தின் 24 தீர்த்தங்கரர்களின் சிற்பமும். ஒவ்வொருவரின் சிரத்திற்கு மேலும் வெண்கொற்றக் குடை, இருபுறங்களிலும் வெண் சாமரங்கள் கொண்டு, அமைதியின் சாரமாக மோன நிலையில் அமர்ந்த கோலத்தில். 
    பின் அந்திப்பொழுதில், பூச்சிகளின் ரீங்காரம் தவிர வேறு வாத்திய முழக்கங்கள் ஏதும் இல்லாது, மாலைக் குளிர் காற்று முகத்தை வருட, அஹிம்சையும், அனைத்துயிர் ஓம்பலையும், சுய ஒழுக்கத்தையும் பரம்பொருளை அடைவதற்கான வழியாக வகுத்து, அதன்படி நடந்து காட்டிய இருபத்து நால்வரின் முன்னால் நின்ற அத்தருணத்தை வெறும் வார்த்தைகளாய் வடித்துவிட முடியாது. ஒட்டுமொத்த சுற்றுப் பயணமே முழுமை அடைந்தது அங்கே தான் என்றால் அது மிகையாகாது. பயணத்தின் ஓட்டம் நிற்கும் தருணத்தில் தான் அந்த ஓட்டத்தில் நாம் தவற விட்டவை புலனாகும்.
  இந்த இரு நாட்களில் நாம் பார்த்த ஒவ்வொரு குடைவரையிலும், கற்கோவிலிலும், சிற்பங்கள் வாயிலாகவும், ஓவியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் நம் மூதாதை நம்முடன் தொடர்புகொண்டே இருக்கிறான். ஓடும் வாழ்வில் நாம் சிதறவிடும், கவனிக்கத் தவறும் வாழ்வின் ஏதோ ஒரு முக்கியமான சாராம்சத்தினை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறான். நாம் எப்பொழுது நின்று அவனது குரலுக்கு செவி சாய்க்கிறோமோ, அதுவே நம்மை வரலாற்றுடன் பிணைக்கும் தருணம். அந்த தருணத்தில் நம் வாழ்வு காலங்கள் கடந்து அந்த மூதாதயுடன் பிணைகிறது. அதுவரை நாம் காணும் அனைத்துமே நம் கண்களுக்கு வெறும் கற்குவியலாகவோ, ஆராய்ச்சிக் கூடமாகவோ தான் தென்படும்.

Friday 31 May, 2013

விதை


செயலின்மையின் இனிய மதுவினைப் புட்டியுடன்
சற்று புகட்டி
கால்கள் தள்ளாட, கருவிழி கிறங்கிச் சொறுகிய பொழுதில்
கோழைமையின் கடிந்த விஷத்தினை அதில் இட்டு நிரப்பி
புட்டியைக் கவிழ்த்து
நெஞ்சம் எரித்த பின்னும்
அதன் உள்ளே வைத்த கனவின் விதையைப்
பசுமை போர்த்துக் காத்த
கொடியவன் நெஞ்சினுள் கரத்தினை செலுத்தி
விதையினை வேருடன் உருவிப் புதைக்கும்
பாரத தேசம் இப்பார் போற்றும் தேசம் என்பாம்

Tuesday 7 May, 2013

உறவுகள் பலவிதம்

உறவுகள் பலவிதம்...அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்.. ஆதாயம் சார்ந்தவை, ஆதாயம் எதிர்பாராதவை என... முதல் வகை உறவு ஒரு வணிக ரீதியானதாகவே அனைத்தையும் பார்க்கும் குணம் கொண்டது. மனம் மட்டும் சார்ந்ததாக இருக்கும் எந்த உறவுமே ஆதாயத்தினை எள்ளளவும் கணக்கில் கொள்வதில்லை...
வலிகளும் காயங்களும் அதன் மீது மெல்லிய பூச்சாய் இடப்பெற்ற சந்தோஷத் தருணங்களும்தான் எந்த ஒர் உறவும் எனப் பொதுவாகக் கூறலாம். அது நட்பானாலும், ரத்த பந்தமானாலும், காதலானாலும் அதன் அடிப்படை ஒன்றுதான். இரு உயிர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அன்புதான். அந்த அன்பு இருக்கும் தளத்தினைப் பொறுத்து அதன் பெயர் மட்டுமே மாறுபடுகிறது. உறவுகள் உணர்வுகளின் மெல்லிய இழை வழியே பெரும்பாலும் மனித அறிவினால் காரணப்படுத்த முடியாத முறையிலேயே ஊடுபாவுவது வழக்கம்.. மானுடம் தோன்றிய இந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் பரிணாம வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்தாலும், அன்பும், அது மனித உணர்வுகளின் மீது செலுத்தும் தாக்ககும் மட்டும் கிட்டத்தட்ட நிலையாகவே உள்ளது... சங்க இலக்கியமானாலும், புதுக்கவிதையானாலும் அதிலுள்ள வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துப் பார்த்தால், அகத்திணைப் பாடல்கள் அனைத்துமே எடுத்துரைக்கும் விஷயங்கள் மனித மனத்தின், உணர்வுகளின், அது வழி பின்னப்பட்ட உறவுகளும் அதன் விளைவுகளுமே ஆகும்..
ஐன்ஸ்டீனின் எந்த ஒரு பொருளும் தனித்து இருப்பதில்லை, அதன் எதிர்மறையை சார்ந்தே இருக்கிறது எனும் கருத்து உறவுக்கும் பொருந்தும்... வெளிச்சம் என்றும் இருளைச் சார்ந்தே இருப்பதைப் போல, தணல் என்றும் குளிரைச் சார்ந்து இருப்பது போல, உறவும் பிரிவும் ஒரு கோட்டில் பின்னப்பட்ட இரு இழைகளாகவே அமைந்திருக்கின்றன..முடிவில்லாத உறவுகள் இருக்கலாம்... ஆனால் பிரிவில்லாத எந்த உறவுமே இருந்ததில்லை.. உறவின் தன்மையும், பிரிவின் தன்மையும் கூட ஒன்றை ஒன்று எதிர்த்து, சார்ந்து இருப்பவையே.. உறவு நிலையானால் அதன்பால் வரும் பிரிவு நிலையானதாய் இருப்பதில்லை... அதே போல் உறவு நிலையிள்ளததானால் பிரிவு அங்கே நிலை பெற்று விடுகிறது... இந்த நிலைத்தன்மை என்றுமே கால அவகாசத்திற்குள் அடக்க முடியாததே ஆகும்.. சில நிலையான உறவுகளில் ஏற்படும் பிரிவுகள் காலத்தால் நீண்டதாக இருந்து அந்த உறவு பொய்த்துவிட்டது போல ஒரு மாயை தோற்றுவிக்கலாம்.. ஆனால் எவ்வளவு நீண்ட பிரிவானாலும் உறவின் தன்மையைப் பொறுத்து அது ஒரு கண நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் அதிசயத்தையும் நாம் கண்கூடாகக் காண முடியும்...இவற்றை மட்டுமே நாம் உண்மையான உறவுகள் என்று வகைப்படுத்தல் வேண்டும். வாழ்வின் லட்சியமாய் பணம், புகழ், பெயர் என பல விஷயங்கள் இருந்தாலும், மனத்தின் லட்சியமாய் ஒரு மனிதன் கொள்ள வேண்டியது இது போன்ற உண்மையான உறவுகளை சம்பாதிப்பது தான் .. ஒவ்வொரு மனிதனும் அவன் இறக்கும் தருவாயில் அவனின் சுருங்கிய கை விரல்களுக்குள் அடக்கக் கூடிய அளவு அவனுக்கு உண்மையான உறவுகள் கிடைத்திருப்பின், அவனே பூரண வாழ்வை வழ்ந்தவனாவான்... அவனே மகிழ்ச்சி என்றால் என்ன என்று அனுபவித்தவனாவான்...
-------------------------தேடல் நீளும் .....

Tuesday 3 April, 2012

முதலிர(லுற)வுகள்

மூடிய கதவின்


இடுக்கில் வழியும் மஞ்சள் விளக்கின் எஞ்சிய ஒளியில்

மெத்தென்ற விரிப்பும் உர்ர் எனும் செயற்கைக் குளிரும்

நிறைந்த அறையில்

விரிப்பின் அடியில் பதுங்கிய உடல்களின்

இதழ்கள் பேசும் வரியற்ற மொழியில்...

விழிகள் மூடும் நாணம் கொண்டு

கன்னம் சிவக்கும் வெட்க உச்சம்

இதழ்கள் கவ்வி

உடைகள் களைந்து

விரல்கள் கோர்த்து

யாக்கை கொண்டு யாவும் பேசி

உச்சம் அடைந்து

அயர்ந்து அடங்கி

அணைத்து உறங்கிப்

பின் துயிலெழுதல்

என்றே நடக்கும் முதலிர(லுற)வுகள்

ஏனோ

இப்போதெல்லாம் பெரும்பாலும்

அலைபேசியில் மின்காந்த அலைகளினூடேயே

நடக்கின்றன...

Friday 11 November, 2011

நீராடிய பொழுதுகள்!


நீராடல் 1...

நவம்பர் மாத நள்ளிர வோர்நாள்  
கடற்கரை மணலில் நடைபயின்றிருக்கையில்
கடலின் அலையாய் மனதும் அலையும்;
மதியும் வெளிவர அஞ்சும்  வெயிலில்
கடலின் அலையென அலையின் துளியென
ஆடித் திளைத்து
ஆடை காய மணலில் கிடந்து
கைகள் கோர்த்து அவளுடன் நடந்த
நினைவின் எச்சம் இதழில் புன்னகை தெளிக்க
மலர்ந்தேன்!!;
சட்டென வானம் பன்னீர்த் தூவ,
சிதறிய துளிகளில் ஒன்றென் இதழில் தெறித்து
தீஞ்சுவை தந்தது
ஒருகணம் வியந்தேன்! பின்
யாரோ எங்கோ சொன்னது நினைந்தேன்
இன்னும் நனைந்தேன்!
தேவதைகள் குளித்த நீரது ஆவியும் ஆகும்
பின் அது மழையாய்ப் பொழிய வாரம்
ஈராறும் ஆகும்!

***
நீராடல் 2...

விடிந்தும் விடியாக் காலை
வெள்ளி முளைக்கும் வேளை
துயில்களைத் தெழுந்து
கூதிர்காலக் குளிர்நீர் கொண்டு
செந்நிற மேனியை பொன்னென ஆக்கி
கார்குழலெடுத்து  திறமாய் அலசி
அலசிய குழலை நுனியில் முடிந்து
துயிலின் மடியில் கிடக்கும் என்னை
எழுப்பிட வருவாள்
அலசிய குழலில் அங்கிங்கிருக்கும்
சிற்சில துளிகள் -   
(அவளுக்கது பனித்துளிகள்
எனக்கோ அவை பன்னீர்த்துளிகள்!)
குனிந்தவளென்னை  எழுப்பும் போது
நுதலில் கிடக்கும் குழலிழை வழியே
ஓர் துளி சட்டென குதித்து அவளின்
 நாசியில் சறுக்கி - எனை எட்டிப் பார்க்கும்
வாய் பிளந்ததனை ரசிக்கும் நேரம்
சட்டெனக் குதிக்கும்!
மோட்சம் அடைவோம்
நானும் அப்பனி(பன்னீர்த்)துளியும்!
***

நீராடல் 3...

இரண்டெனக் கிடந்து; பின்
அஃதறக் கலந்து;
தொலைந்த தன்னைத் தேடித் தொலைந்து
தொலைத்த பின்னும் தேடலுள் திளைக்க
மனது முழுதும் மகிழ்ந்து நிறைய
களைத்து அணைத்து  கண்கள் மூட
சற்றே விலகி முகிலாய் நடந்தாள்
நொடிகள் கரைய, நீராடி வந்தாள்
சட்டென நெருங்கி கேசம் களைத்து
சற்றே நகைத்து இதழ்தனைப் பதித்தாள்
ஊடலின் இன்பம் கூடல்
என உரைக்கா துரைத்தாள்!