Friday 28 August, 2009

உன் நினைவுகள்

பல நேரங்களில் என்னுள் கவிதையை விதைத்த
உன் நினைவுகள்
இப்பொழுதெல்லாம் மௌனத்தையே விதைக்கின்றது
பேச திராணியின்றி
நா வறண்டு
இருக்கும் இடத்தை விட்டு அசையாமல்
ஒரு தியான நிலைக்கு செல்லச் செய்கிறது
உன் நினைவு..
என் கனவே
என் நினைவே
முடிந்ததா என் காதல் கதையும் இறுதியில்!!
உன் கால்கொலுசின் மணியில் துவங்கிய என் காதல்
ஆண்டு பல ஆகியும் அங்கேயே இருக்கிறது...
அதை ஒருமுறையேனும் நீ எடுத்து தூசி தட்டி
என்னை தன்யனாக்குவாய் எனும்
நம்பிக்கை கூட இப்போதெல்லாம் என்னை விட்டு நீங்கத் தொடங்கிவிட்டது.. நம்பிக்கையில்லா மனிதன் நடைபிணம்..!!!
உணர்கிறேன் இன்று நான் அதையும்...
என் வாழ்வில்
சகலத்தையும் எனக்கு கற்றுக்கொடுக்கிறாயே பெண்ணே...
அதுவும் வெறும் நினைவுகள் மூலமாகவே!!!
நீ தேவதை மட்டுமல்ல.. தெய்வமும் கூட..

Tuesday 18 August, 2009

விழி வழியே நுழையும் மொழி


கண்ணிரண்டும் கண்ணிரண்டும் உன்னைக் கண்டதே
நெஞ்சமதோ அக்கணமே காதல் கொண்டதே
என்னுள்ளே நீயும் நுழைந்தாயடி
உனைக்கண்ட நானோ உறைந்தேனடி
விழி வழியே நுழையும் மொழி காதலென்று ஆனதிங்கு..
என்புருக்கி எனை எரிக்கும் கண்களல்லவா
தமிழ் மொழியும் இன்பமுறும் இதழ்களல்லவா
இதயம் மட்டும் ஏனோ கல்லானதே
என் காதல் நுழையா சுவரானதே
மனதில் என்றும் நீ இருக்க நானும் இங்கு தினம் பிறக்க..
கண்ணிரண்டும் கண்ணிரண்டும் உன்னைக் கண்டதே
நெஞ்சமதோ அக்கணமே காதல் கொண்டதே

Sunday 9 August, 2009

நினைவுக் கோப்பை


மரணத்தின் தருவாயில்
உயிரைத் தவிர யாவும் மறந்துபோம்..
ஆனால் கண்ணே...
உன் நினைவுக் கோப்பையின் விளிம்பில் மட்டும்
உயிரும் மறந்துபோவதெப்படி ??

நீயின்றி நானில்லை...

உன்மேல் காதல்கொண்டு
என் உயிரை நானும் வெறுத்திருந்த
காலங்கள் யாவும் கனவாய்ப்போனதே...
கால வெள்ளத்தின் ஓட்டத்தில்
ஒருவேளை நான் உன்னை மறந்துபோகக் கூடுமோ!?!
என்ற எண்ணம் மனதில் எழும் நேரம் யாவும்
சட்டென நினைவுபடுத்தும்
துடிக்கும் இதயம்
நீயின்றி நானில்லை...