Sunday 8 May, 2011

முதற்காதல்

தரையில் நடந்த கால்களில்
புதியதாய் ரெண்டு இறக்கைகள்

கோபுர விளக்காய் பளீரிடும்
கண்கள்

காரணமின்றி சிரித்திருக்கும்
கிறக்கம்

அவள் மட்டுமல்ல;
அவளின் வகுப்பறையைக்
கடக்கும்போதும்
துடிப்பெகிறும் இதயம்

அவளின் நிழல்மட்டும் கண்டால்கூட
கூத்தாடும் நெஞ்சம்

வருடங்கள் பல ஓடியும்
அவளின் பெயர் நினைத்த ஓர் கணத்தில்
கட்டி இழுத்து
புதைக்கப்பட்டுவிட்ட நினைவுகளின்
துவாரத்தினூடே இழுத்துச் சென்று
நிதம் கொல்லும்

ஒத்துக் கொள்கிறேன்
இதயம் கலந்து
உயிரோடு உறைந்து விடும்
முதற்காதல்

மரணபரியந்தமும்!~!
மனம் நிறைக்கும் புன்னகையில் பொய்யிருக்கலாம்
கடைவிழியின் வழி தெறிக்கும் கண்ணீரில் இருப்பதில்லை
விரல்கள் உரச பயிலும் நடையிலில்லாதிருக்கலாம்
நெஞ்சத்தின் ஆழத்தில் புதைத்துவிட்ட பின்னரும்
முளைத்தெழுந்து உறக்கம் பறிக்கும்
நினைவுகளில் என்றும்
உயிர்த்திருக்கும் அவளுக்கான என் காதல்

Saturday 7 May, 2011

புணர்தலும் புரிதலும்!~!

குளிரூட்டப்பட்ட பேரங்காடியின்
ஜனத் திரள்களுக்கு நடுவே
இரு விழியெனும் வாள் கொண்டு
கண்கள் விரியச் சிரித்துத் திரிந்திருந்த
குமரிகளின் சதை ரசித்துத் திரும்பிய
ஓர்நாள் மாலை நேரம்
மனதின் உள்ளே இருந்த ஏதோ ஒன்றை
வெகு இயல்பாக அறுத்துப்போட்டது
நடுத்தெருவில் புணர்தல் நிமித்தம்
பின்தொடர்ந்த ஆண் நாயின்
புறம் நோக்கி வள்ளென மெலிதாய் ஒரு முறைப்பு தந்த
பெட்டை நாயும், அது கண்ட உடன்
தலைகுனிந்து பின்வாங்கி அதன் வழி விலகிய அந்த ஆண் நாயும்...