Friday 14 May, 2010

நிழற்குடை



அப்போதுதான் புதிதாக சிமெண்ட் பூசப்பெற்று, பச்சை நிற சுண்ணம் தீட்டப் பெற்றும், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பெற்றும் கரிசல் காட்டின் புழுதிக் காற்றை எதிர்த்து நின்றது அந்த MLA பெயர் தாங்கிய நிழற்குடை. சில பல மாதங்களுக்குப் பின் சொந்த ஊருக்கு சென்ற என் கண்ணில் பஸ் ஐ விட்டு இறங்கியவுடன் முதலில் தென்பட்டது இதுதான்! அட! என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு சென்றாகி விட்டது. மறுநாள் பக்கத்து ஊரிலிருக்கும் குல தெய்வக் கோவிலுக்கு செல்வதற்காக நிழற்குடை பக்கம் ஒதுங்க நேரிட்டது. கடந்த 15 வருடங்களாக எப்போதும் டீ கடை உள்ளே நின்று பஸ் ஏறியே பழக்கப் பட்டுவிட்ட எனக்கு, இந்த நிழற்குடையின் உள்ளே நிற்பது சற்றே சங்கடத்தையும் புது அனுபவத்தையும் கொடுத்தது. காலை சுமார் 11 மணி, சூரியன் உச்சி வெயில் போல் கொளுத்திக் கொண்டிருந்தான். நிழற்குடையின் ஒரு பக்க மேடையில் கிழிசல் சட்டையுடன் பழுப்பு வெட்டியும் உடுத்தியிருந்த அந்த பெரியவர் ஜன்னல் வழியே வானம் வெறித்தவாறு அமர்ந்திருந்தார். கடந்த சில வருடங்களாகவே ஊரில் மழை இல்லை. மரங்களே அற்றுப் போன சில நகரப் பகுதிகளில் கூட மழை பெய்யும் போதும் ஏனோ, வயல் வெளிகளும், பல மரங்களும், மண் சாலைகளும் நிரம்பிய எங்கள் ஊருக்கு மழையில் நனையும் பாக்கியம் ஏனோ கிட்டவே இல்லை. நிலத்தடி நீரோ, 200 அடிக்கும் கீழே! நிலம் வைத்து என்ன செய்வது! தண்ணீர் இன்றி எங்கள் கண்ணீரிலா நெல் விளையும்!! இதில் கால வரையற்ற மின்வெட்டு வேறு! இப்படி பல நினைவுகளில் நான் மூழ்கிவிட்டு மீண்டும் ஓர் முறை கடிகாரத்தைப் பார்த்தேன், பேருந்து வர இன்னும் நேரமிருந்தது. மீண்டும் அந்த பெரியவரை நோக்கினேன். இன்னும் வானம் வெறித்தவாறே அவர். பட்டபகலில் இப்படி எந்த இழக்கும் இன்றி நிழற்குடையில் , தனியாக அமர்ந்திருக்கும் இவர்(ன்) என்ன பிச்சை காரனோ!! காரணமின்றி ஏனோ அந்த எண்ணம் மனதில் உதித்தது. நான் அணிந்திருந்த மேல்நாட்டு பாரம்பரிய உடையான அந்த ஜீன்ஸ் பாண்டின் மீது படிந்த தூசியை தட்டிக்கொண்டே, தாய்த் தமிழகத்தின் பாரம்பரிய ஆடையான அழுக்கு வேட்டி தரித்திருந்த அந்த பெரியவரிடம் இருந்த என் பார்வையை விலக்கி பேருந்தை எதிர் நோக்கி காத்திருக்கத் தொடங்கினேன் . அது வரும் வழியாய் இல்லை.. தொலைவே ஒடிசலாய் இதே போல் பழுப்பு வேட்டியோடும் அழுக்கு சட்டையோடும் ஒடுங்கிய கண்களோடும் இடுங்கிய கன்னங்களோடும் ஒரு மனிதர் நடந்து வந்து வந்து கொண்டிருந்தார். சட்டென கிழவரின் கண்கள் சற்றே பளிச்சிட்டன.

“வாடா எசக்கி!! என்ன இந்த பக்கம்!! எப்பிடி இருக்க? பார்த்து பல நாள் ஆயி போச்சே டா !” .

ஏனோ தேயவில்லை, என் கண்கள் அவர் கால்கள் நோக்கி சென்றன, அங்கே கிடந்த உழைக்கும் வர்க்கத்தின் அடையாளமான தோல் செருப்பு எனக்கு அவர் பிச்சைக்காரன் இல்லையோ என உரைக்க வைத்தது

“ஆமா மாமன், பகலைக்கெல்லாம் வேலையே சரியாய் போவுது, ரவைக்கு(இரவு) போனதும் சாப்டு தூங்கினாதானே அடுத்தநாள் வேலைக்கு போகமுடியுது!! நீங்க என்ன இப்புடி இங்க போய் குந்தீருக்கிங்க!! வீட்டுக்கு போகலியா?”

“ஆமா, வீட்டுக்கு போய் என்னத்த கிழிக்கிறது, வெட்டியா இருக்க கழுத எங்க குந்துனா என்ன!? சரி, நீ இப்ப வயல்ல என்னத்த போட்ருக்க?”

ஹ்ம்ம், போடறாங்க, என்னத்த போடறது, அதெல்லாம் வித்து நாளாச்சு மாமன், எங்க அப்பன் போன தீபாவளிக்கு கட்டைய சாச்சப்பவே எல்லாம் வித்து பிரிச்சாச்சுல்ல!!"

"அட கெரகமே! ஏன்டா, இருக்கற நிலத்த அப்புடியே பிரிச்சுக்க வேண்டியதானே டா!! அதா போய் வித்துபுட்டிங்க!!"

"என்ன மாமன் பண்றது, ஊர்ல மழையா பாத்தே வருஷம் ரெண்டாவுது, இன்னும் மழைய நம்புனா புள்ளகளுக்கு எங்க, மானத்துல இருந்தா சோறு கொட்டும்!?."

"பொறவு எங்க! வயல் வேலைக்கு போறியா??"

"இல்ல மாமன், வயல் வேலைலாம் கெடைக்க மாடிங்கிது.. காலேஜ்லதான் கொத்து வேலைக்கு போறேன், மண்ணள்ளி கொட்றது, சித்தாள் வேலைதான்.. "சரி, உன் பொம்பளயாளு!!?"

"அதும் அங்கதான் மாமன்.. வேற என்ன பண்றது, பச்சை புள்ளைங்களயா வேலைக்கு அனுப்ப முடியும்!! ஏதோ பள்ளிகூடத்துக்கு போவட்டும்னு அனுப்பிருக்கேன்.. பெரியவன் இப்பதான் ஆறாப்பு படிக்கிறான், சின்னவன் ரெண்டாப்பு.."

“அட கெரகமே!! சரி எவ்வளவு தான் சம்பளம்?”

“ஒரு நாளைக்கு எனக்கு 140 ரூபா, பொம்பளையாளுக்கு 100 ரூபா.. ஏதோ ஓடுது மாமன்.. வாரம் மூணு நாலு நா வேலை இருக்கும், வச்சு ஓட்ட வேண்டிதான்.. ஆத்தா வேற இப்பவோ பொறைக்கோனு இழுத்துகிட்டு கெடக்கு.. அதுக்கு மருந்த வாங்கவே மாசம் ஆனா ஒரு பெரிய தொகை வேண்டி கெடக்கு..”

”ஒரு 150 ரூபா தர கூடாது! ஏன்டா வேல செய்யற இடத்துல கொஞ்சம் கூட கேக்கலாம்ல!? "

"என்னத்த மாமன் கேக்கறது, கேட்ட நம்ம முத்துபாண்டிய, இந்தா, இந்த வாரம் பூரா வேலைக்கே கூப்புடல! எவன் இனிமே கூட கேப்பான்? ஏதோ வந்த வரைக்கும் சர்த்தான்!!”

" சரி என்னத்த பண்ணி தொலயிறது!! அந்த ஆத்தா கண்ண தொறந்து மழை மட்டும் ஒழுங்கா பெஞ்சிருந்தா நமக்கு இப்பிடி நாதியத்து போவுமா?? இன்னைக்கு வேலை இல்லியா?

"போவனும் மாமன், சரி அப்டியே நான் போய் அரிசி வாங்கிகிட்டு கெளம்பறேன்.."

"சரி சரி போடா, போய் பொழப்ப பாரு”

நான் மெல்ல திரும்பி அந்த பெரியவர் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன்! மீண்டும் அவர் வானம் வெறித்தார்.. அவர் கண்கள் சற்றே பனித்தன.. “ஹ்ம்ம்.. என்ற ஒரு ஆங்காரப் பெருமூச்சுடன் அவர் எழுந்து தோளில் துண்டை போட்டுக்கொண்டு தளர்ந்து நடக்கத் தொடங்கினார்.. தொலைவே புழுதியைத் தன்மேல் வாரி அடித்துவிட்டு செல்லும் பேருந்தை வெறித்தபடி மளிகைக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தார் எசக்கி.. ஏனோ என் மனம் குற்றஉணர்வால் குறுகுறுக்கத் தொடங்கியது!!! சாலைக்கு எதிரில் இருந்த அந்த தொடக்கப்பள்ளியில் இருந்து சிறுவர்கள் பாடம் படிக்கும் சத்தம் தெளிவாய் கேட்டது!!

“மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” “ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது!!

1 comment: