Friday 11 November, 2011

நீராடிய பொழுதுகள்!


நீராடல் 1...

நவம்பர் மாத நள்ளிர வோர்நாள்  
கடற்கரை மணலில் நடைபயின்றிருக்கையில்
கடலின் அலையாய் மனதும் அலையும்;
மதியும் வெளிவர அஞ்சும்  வெயிலில்
கடலின் அலையென அலையின் துளியென
ஆடித் திளைத்து
ஆடை காய மணலில் கிடந்து
கைகள் கோர்த்து அவளுடன் நடந்த
நினைவின் எச்சம் இதழில் புன்னகை தெளிக்க
மலர்ந்தேன்!!;
சட்டென வானம் பன்னீர்த் தூவ,
சிதறிய துளிகளில் ஒன்றென் இதழில் தெறித்து
தீஞ்சுவை தந்தது
ஒருகணம் வியந்தேன்! பின்
யாரோ எங்கோ சொன்னது நினைந்தேன்
இன்னும் நனைந்தேன்!
தேவதைகள் குளித்த நீரது ஆவியும் ஆகும்
பின் அது மழையாய்ப் பொழிய வாரம்
ஈராறும் ஆகும்!

***
நீராடல் 2...

விடிந்தும் விடியாக் காலை
வெள்ளி முளைக்கும் வேளை
துயில்களைத் தெழுந்து
கூதிர்காலக் குளிர்நீர் கொண்டு
செந்நிற மேனியை பொன்னென ஆக்கி
கார்குழலெடுத்து  திறமாய் அலசி
அலசிய குழலை நுனியில் முடிந்து
துயிலின் மடியில் கிடக்கும் என்னை
எழுப்பிட வருவாள்
அலசிய குழலில் அங்கிங்கிருக்கும்
சிற்சில துளிகள் -   
(அவளுக்கது பனித்துளிகள்
எனக்கோ அவை பன்னீர்த்துளிகள்!)
குனிந்தவளென்னை  எழுப்பும் போது
நுதலில் கிடக்கும் குழலிழை வழியே
ஓர் துளி சட்டென குதித்து அவளின்
 நாசியில் சறுக்கி - எனை எட்டிப் பார்க்கும்
வாய் பிளந்ததனை ரசிக்கும் நேரம்
சட்டெனக் குதிக்கும்!
மோட்சம் அடைவோம்
நானும் அப்பனி(பன்னீர்த்)துளியும்!
***

நீராடல் 3...

இரண்டெனக் கிடந்து; பின்
அஃதறக் கலந்து;
தொலைந்த தன்னைத் தேடித் தொலைந்து
தொலைத்த பின்னும் தேடலுள் திளைக்க
மனது முழுதும் மகிழ்ந்து நிறைய
களைத்து அணைத்து  கண்கள் மூட
சற்றே விலகி முகிலாய் நடந்தாள்
நொடிகள் கரைய, நீராடி வந்தாள்
சட்டென நெருங்கி கேசம் களைத்து
சற்றே நகைத்து இதழ்தனைப் பதித்தாள்
ஊடலின் இன்பம் கூடல்
என உரைக்கா துரைத்தாள்!  

No comments:

Post a Comment