Tuesday 1 June, 2010

பயணப் பட்டோம்...



தென் பாண்டி - சோழ மண்டல பயணம்.....
ஒரு அழகிய ஞாயிற்றுக்கிழமை மாலை..நான் ஜப்பானிலிருந்து திரும்பிய அடுத்த வாரம், பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் மிளகாய் பஜ்ஜியுடன் தொடங்கிய சூடான சந்திப்பின் இறுதியில் தோன்றிய சிறு எண்ணம்தான், மாதம் ஒருமுறையாவது நம் குழும உறுப்பினர்கள் இணைந்து ஒரு இடத்திற்கு சென்று அதைப் பற்றியா தகவல்களைப் பதியலாம் என்பது. அந்த மிளகாய் பஜ்ஜியின் மனம் நாசியை விட்டு அகலத் தொடங்கிய மற்றுமோர் ஞாயிறு மாலை..நம் குழும மக்கள் தொடர்பு அதிகாரி ஜோதிவேல் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கோடிக்கரை மற்றும் தரங்கம்பாடி செல்லலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்தார்.. கரும்பு தின்ன கூலியா!!! பலமான தலையாட்டலுடன் நம் நண்பர்கர் ஒத்துக்கொள்ள, சட்டென விரிந்தது பயணத்திட்டம்...எதிர்பாராத விதமாய் நம் குழுமத்தின் வரலாற்று ஆசிரியர் லக்ஷ்மி அவர்களும் குடும்பத்துடன் இப்பயணத்தில் கலந்துகொள்ள இருப்பதாக நம் ஜோதிவேல் அவர்கள் கூறியதும், எனது முதற் சுற்றுப்பயணத்திற்கான ஆயத்தங்களை சற்றே கூடுதல் உற்சாகத்துடன் செய்துகொண்டிருந்தேன்.. எதிர்பார்த்த அந்த திருநாளும் வந்தது. எதிர்பாராத குடும்ப விழாவின் காரணமாக சத்தியன் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என பயணத்திற்கு இருநாட்கள் முன்னர் தெரிவித்ததை தொடர்ந்த, சென்னையில் இருந்து நான்கு பேர் கொண்ட குழு திருவான்மியூர் வழியாக கிழக்குக் கடற்கரை சாலையைப் பிடித்து, பாண்டி, சிதம்பரம், சீர்காழி வழியே தரங்கம்பாடி செல்வதாக திட்டமிடப்பட்டது. வீரத்தளபதி ஸ்ரீராம் அவர்கள் அலுவலகத்தில் எதிர்பாராது நேர்ந்த தீ விபத்தினால் ஏற்பட்ட தாமதத்தினால், பத்து மணி சுமாருக்கு ஜோதிவேல் அவர்கள் வீட்டில் இருந்து, திரு, ஸ்ரீராம் மற்றும் நம் ஜோதிவேல் ஆகிய மூவரும் கிளம்பி வர, திருவான்மியூரில் நானும் தொற்றிக் கொண்டேன்..ஜோதிவேல் அவர்களின் திறமையான ஓட்டுதலின் மூலம் விரைவில் பாண்டி சென்றடைந்தோம். அங்கு ஒரு தேநீர் இடைவெளி எடுத்துக்கொண்டே லக்ஷ்மி அவர்களை தொடர்புகொண்டால், அவர்கள் வரும் வழியெங்கும் கன மழை என தெரிவித்தார்கள்..நம்ம நின்ன எடத்துல ஒரு சொட்டு தண்ணி விழல.. நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் பயத்தைத் தொடர்ந்தோம்.. சற்று நேரத்தில் வருண பகவான் தம் கருணை மிகுந்த கரங்களினால் எங்களையும் ஆரத் தழுவிக்கொள்ளத் தொடங்கினார்.. நமது தேசிய சாலைத்துரயினர் நமக்கு சாலையில் இருக்கும் தண்ணீர் மூடிய குழிகளைத் தாண்டி வண்டி ஓட்டுவது எப்படி என்ற ஒரு அறிய திறனாய்வு போட்டியை வைக்க, நம் பி.ஆர்.ஒ. அவர்களோ, எங்களுக்கேவா!!! என்ற அசால்டான மனபாவத்துடன் சீருந்தை சீரிய முறையில் செலுத்தினார்.. அவருடன் முன் இருக்கையில் நமது தொகுப்பாளர் திரு அவர்கள் அமர்ந்துகொண்டே, லைவ் கம்மேண்டரி கொடுத்துக் கொண்டிருந்தார்.. அங்க பாருங்க குழி வருது, இங்க பாருங்க மாடு வருது என்ற ரேஞ்சில் சொல்லிக்கொண்டு வர, ஜோதிவேல் அவர்களும் நிதானமாக வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.. பின் இருக்கையில் ஸ்ரீராம் அவர்கள் எனக்கு சோழ வரலாற்றையும், சிரபக்களை பாணிகளையும் பற்றிய தகவல்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்..நானும் விரிந்த விழிகளுடன் அக்கதைகளைஎல்லாம் கேட்டுக்கொண்டே வந்தேன்.. கதிரவன் மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கிய நேரம் தரங்கை சென்றடைந்து, திரு சுப்பு மற்றும் லக்ஷ்மி குடும்பத்திற்காக காத்திருக்கத் தொடங்கினோம். இரவு முழுவதும் கண் விழித்து கம்மேண்டரி கொடுத்த களைப்பில் திரு அவர்கள் ஆழ்ந்த சயன நிலைக்கு சென்று விட, மற்ற மூவரும் அருகிலிருந்த பயணிகள் நிழற்குடையில் ஓய்வாக பேசிக்கொண்டிருந்தோம். இடையில் ஸ்ரீராம் அவர்கள் சற்றே "டீலிங்" செய்ய ஆசைப்பட்டு சென்று வந்தார்.. அவர் எங்கே சென்று வந்தார் என நான் சொல்லப்போவதில்லை.. பிறகு சற்று நேரத்தில் சுப்பு குடும்பத்தாரும் வர, அங்கு ஒரு தேநீரைக் குடித்து விட்டு சற்றே சுறுசுறுப்புடன் முன்னூறு ஆண்டுகள் பழமையான டச்சுக் கோட்டைக்கு மழையையும் பொருட்படுத்தாமல் சென்று பார்த்தபின்தான் தெரிந்தது, மே முதல் நல அரசு விடுமுறை அன்று கோட்டை தஇறக்கப் பட மாட்டாது என்று!!!விட்ரா சூனா பானா என மீசையை முறுக்கிக் கொண்டே, திருநள்ளாறு சென்று அரசினர் பயணிகள் விடுதியில் குளியலை முடித்து விட்டு கோடிக்கரை நோக்கி விரித்தோம்.. செல்லும் வழியில் ராமர் பாதம் பட்ட இடம் என்று கூறப்படும் இடத்தை தரிசித்த பின்னர் கோடிக்கரை கடற்கரையை சென்றடைந்தோம்..அங்கே நம் குழுவினர் அனைவரும் தத்தம் புகைப்படக் கருவிகளைக்கொண்டு இயற்கையின் கவர்ச்சிமிகு ஓவியங்களை வேட்டையாடத் தொடங்க, நம் நண்பர்கள் புகைப்படத்திற்கு கொடுத்த "போஸ்" கலைக் கண்டு சுற்றி இருந்தவர்கள் சற்றே மிரண்டு ஓடியது தனிக்கதை.. அங்கிருந்து சற்றே இடது புறம் திரும்பிப் பார்த்தால் ஓங்கி நெடிந்து நின்றது கலங்கரை விளக்கம்..கன நேரத்தில் பூங்குழலியையும், தியாக விடங்கரையும், மந்தாகினி தேவியையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.. அதையும் ஆசை தீர காமிராக் கண்களால் விழுங்கிய பிறகு, கோடிக்கரை விலங்குகள் சரணாலயம் நோக்கி சென்றோம். செல்லும் வழியில், இங்க பாருங்க முயல், இங்க பாருங்க இதுதான் குதிரை என்ற ரேஞ்சில் கைடு சொல்லிக் கொண்டே வர, நாம் சற்றே கடுப்பானோம். வேற என்ன்னங்க இருக்கு என சலிப்புடன் கேட்ட ஒரு கேள்விக்கு, அவர் காதில் அமுதை இறைத்து ஓர் பெயர் சொன்னார்..

கடற்கரையில் சோழர்கள் கால கலங்கரை விளக்கம் இருக்கிறது என்று!! வண்டியை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்தால் கண்களுக்கு காணக் கிடைத்தது அந்த பொக்கிஷம்..சுமார் ஆயிரத்தி இருநூறு ஆண்டுகால பழமையான கலங்கரை விளக்கத்தின் எஞ்சிய பாகங்கள்.. பார்த்த கணமே மனம் உருகி விழி நிறைத்தது.. அந்த இடத்திலேயே சுமார் ஒரு மணி நேரம் கழித்த பின்பு நாம் காண விழைந்தத பாயிண்ட் காளிமார் கண்களுக்குக் கிடைத்தது.. மிகுந்த மன நிறைவுடன் அவ்விடம் விட்டகன்றோம்..அடுத்து நாம் சென்றது குழகர் கோவிலுக்கு.. ஏழாம் நூற்றாண்டில் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடியதைப் போல, இன்றும் தனியாகவே இருக்கிறார் கோடிக்கரை குழகர்,, காலத்தின் ஓட்டத்தில் சோழர் கால சிற்பங்களும் சற்றே சிதையத் தொடக்கி விட்டதால், சிதிலமடைத்த பகுதிகளை புதுப்பித்து குட முழுக்குக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் குழகர் எனக் கேள்விப்பட்டோம்.. ஆயினும், பூங்குழலி அம்மை அமர்ந்து ரசித்த சூழலையும், சிற்பங்களையும் காண முடியாதது சற்றே வருத்தம் அளித்தது..நாம் இந்த ரேஞ்சில் பீல் பண்ணிக் கொண்டிருக்க, சத்தமின்றி, பூசாரியின் கையின் சிறிது பணம் கொடுத்து நெய் விளக்கேற்றும் படி ஸ்ரீராம் அவர்கள் சின்சியராய் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கண்டார்.. இத்துடன் முதல் நாள் பயணம் முடிவுற, அனைவரும் மீண்டும் திருநள்ளாறு சென்று பயனியர் விடுதியில் துயில் கோல நுழைந்தோம்..ஞாயிறு காலை கிளம்பி தரங்கம்பாடி சென்றடைந்தோம்.. அழகிய கடற்கரை.. அதை ஒட்டிய பிரம்மாண்டமான கோட்டை, இடதுபுறம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த சோழர்கால சிவன் கோவில் என மனதை கொள்ளை கொள்ளும் சூழல்..அங்கே திரு அவர்கள் நம் சிறப்பு விருந்தினர் சந்திரமௌலி அவர்களை எவ்வாறேனும் முயன்று தமது வசனத்தி பேச வைத்து பதிவு செய்ய வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார்.. அவரோ, மிக சின்சியராய் அருகில் இருந்த ஐஸ் கிரீம் வண்டியைப் பார்க்க, அனல் தெறிக்கும் விழிகளுடன் அவ்வன்டியைப் பார்த்த திரு முகத்தில் சட்டென ஓர் மாற்றம்!!! அதில் எழுதப் பட்டிருந்த குச்சி ஐஸ் எனும் சொல்லாடல் அவருக்கு தம் பால்யகாலத்தில் குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்த ஒரு தேவதையை நினைவு படுத்தி விட்டது.. கண் கலங்க நின்ற அவருக்கு நம் பீ.ஆர்.ஒ. ஜோதிவேல் அவர்கள் இரண்டு குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்து சமாதானப் படுத்தினார்... அந்த குச்சி ஐஸ் கண்டவுடன், சகலரும் ஜோதிவேல் பக்கம் திரும்ப, அனைவர் கைகளிலும் இரண்டு குச்சி ஐஸ்!! ஒரு ஓரமா நின்னு கடலையும் கோவிலையும் வளச்சு வளச்சு புகைப்படம் எடுத்துட்டு நான் வந்து பார்த்தா, இந்த கூத்து இப்படி போயிக்கிடுக்கு!!! சரின்னு மனச தேத்திக்கிட்டு, நானும் ஒரு குச்சி ஐஸ் வாங்கி கைல வச்சிக்கிட்டு நின்னேன்,.. பிறகு கோட்டையை நன்கு சுற்றிப் பார்த்த பின்பு, கடற்கரைக் கோவிலுக்கு சென்றோம்.. திறமையாக திருமதி. லக்ஷ்மி அவர்கள் எல்லாருக்கும் கோவில் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.. அதையும் ஒரு கை பார்த்துட்டு, தஞ்சாவூர் போகலாம்னு கெளம்பினோம். அங்கே சென்று தமிழகத்தின் சிறந்த சரித்திர ஆய்வாளர்களில் குறிப்பிடத் தக்கவரான முனைவர்.குடவாயில்.பாலசுப்பிரமணியன் அவர்களை சந்திப்பதாக ஏற்பாடு. நம்ம வண்டியும் கெளம்புச்சு.... ஆனா...போற வழியில, சிலு சிலுன்னு காவிரி ஆத்து தண்ணி பம்பு செட்டுல பொங்கி வழியறத பார்த்த நம்ம மக்கள் தொடர்பாளர், கபால்னு வண்டிய நிறுத்தி தொபீர்னு தொட்டிக்குள்ள குதிச்சுட்டாரு!!! கன்னத்துல கை வச்சுகிட்டு நானும் ஸ்ரீராம் அவர்களும் நின்றுவிட்டோம்..அன்னார் ஜலக்கிரீடை முடிந்த பிறகு, நாங்கள் இருவரும் முகம் கை கால்களை அலம்பிக் கொண்டு வண்டிக்குத் திரும்பினால், திரு அழைக்கிறார்... தஞ்சாவூருக்கு பத்து கிலோமீட்டர் முன்பிருந்து..!!! சரின்னு அவர் கொபத்தஎல்லாம் ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுட்டு, தஞ்சை சென்றடைந்தோம்..மாலை சுமார் ஐந்து மணியளவில் ஐயா குடவாயில் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தோம். எளிமையாக எங்களை வாசலில் வந்து அவரே வரவேற்றார். ஒரு பெரிய ஆய்வாளர், நம்ம கிட்டலாம் எப்படி பேச போறாரோன்னு பயந்துகடே யிருந்தோம்..அவர் மிக எளிமையாகவும் உற்சாகமாகவும் பேசத் தொடங்க, நம் மக்களும் சளைக்காமல் கேள்விகளைக் கொட்கத் தொடங்கினர். அந்த கேள்வி பதில்களை மட்டுமே ஒரு தனி பதிவா போடலாம்..சுமார் ஒன்றரை மணி நேர மனம் பூக்கும் உரையாடல் முடிந்த பிறகு அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு, தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு சென்றோம்.. அங்கே பிரகாரத்தில் அமர்ந்து கொண்டே அடுத்த சோழ தேச சுற்றுப்பயணம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன..அதைப் பற்றிய செய்திகளும் அடுத்த தனிப் பதிவுகளில் நம் நண்பர்களால் வெளியிடப் படும்.. பின்பு, இரவு சுமார் எட்டரை மணிக்கு சுப்பு&லக்ஷ்மி குடும்பத்தாரிடம் விடை பெற்றுக் கொண்டு, நாம் சென்னை நோக்கி விரைந்தோம்.. இடையில் சில இளைப்பரல்களுக்கும் பின்னர், சுமார் ஆறு மணி அளவில் தாம்பரம் வந்தடைந்தோம். அங்கே நான் விடைபெற்றுக் கொள்ள, நண்பர்கள் மூவரும் தத்தம் இல்லங்களுக்கு திரும்பினர்..

3 comments:

  1. you have a very good narrating skill,
    if you haven't tapped on that skill set,
    pls do,
    you would turn up as a good writer.

    ReplyDelete
  2. so interesting.. but i know u might not be quiet along this trip.. u hid all ur mischeifs.. isn't it..???

    ReplyDelete
  3. the photograph is so nice..!!!

    ReplyDelete