Wednesday, 23 June, 2010

அருள்...


புகை நிரப்பும் இருசக்கர வாகனங்களும், நேரடியாக புகைபோக்கியிலிருந்து கொசு(நுரையீரல்) ஒழிப்பு மருந்தை விநியோகிக்கும் நகராட்சி வண்டிகளும், எதையோ தேடும் நோக்குடன் உயிரைப் பணயம் வைத்து செலுத்தப்படும் சீருந்துகளும் நிறைந்த அந்த மாபெரும் நகரத்தின் பரபரப்புகளில் இருந்து ஒதுக்குப் புறமாய் தியானத்தில் அமிழ்ந்திருந்தது அந்த குக்கிராமம். மதியம் 3 1/2 மணிக்கு சூரியன் தன அனல்காற்றை பூமாதேவியுடன் சேர்ந்து அந்த ஊருக்கு இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தார். யாருமற்ற அந்த மண்சாலையின் புழுதியை அடக்கும் வண்ணம் சிலதுளிகள் வீழ்ந்தன மண்ணில்..பெண்கள் வாசல் தெளிக்கத் தொடங்கியிருந்தனர். "செல்லாத்தா, செல்ல மாரியாத்தா என் சிந்தையில்..." எல்.ஆர்.ஈஸ்வரி அந்த ஊரின் கடைக்கோடியில் இருந்த மாரியம்மன் கோவிலில் ஒலிக்கத்தொடங்கினார். தொடங்கப்பள்ளி சிறார்கள் துள்ளலுடன் கோவிலை நோக்கி ஓடத்தொடங்கினர். அடங்கியிருந்த புழுதியை மீண்டும் கிளப்பிக்கொண்டு நான்கு சக்கர அரசுப் பேருந்து அந்த சாலையை அடைந்தது.
தனக்கு முன்னாள் எழுந்த புழுதியை அடக்கி சாலையை தரிசிக்கும் எண்ணத்துடன் கையை ஆட்டிக்கொண்டே கீழே இறங்கினான் குமாரசாமி.
"யோவ் பெருசு.. ஊரு வந்துருச்சு இன்னும் வாயப் பொளந்துகிட்டு தூங்கிக்கிட்டு கெடக்க..ஏறங்குயா கீழ"
பேருந்தின் நடத்துனர் உச்சகட்ட மரியாதையுடன் ஒரு வயோதிகரை கீழே இறக்கிவிடும் சத்தம் தெளிவைக்கேட்க, வருத்தம் தோய்ந்த புன்னகையுடன் சாலையைக் கடந்து மறுபக்கம் வந்தான் குமாரசாமி.
"டே கொமாரு!! என்னடா இப்பதான் வாரியா!!?"
"ஆமா மாப்ள!! கம்பெனில எங்கத்த லீவு குடுக்கானுங்க ஒரு நா தான் கெடச்சுது.."
"சரி சரி ஓடியா கோயிலுக்கு போவோம்"
"நீ போ மாப்ள, நான் இந்தா வீட்டுக்கு போய் ஒரு எட்டு மூஞ்சிய காமிச்சுட்டு வந்துடறேன்"
நண்பன் பதிலுக்கு காத்திராமல் வீடுநோக்கி விரைந்தான் குமாரசாமி.
இந்த எழவெடுத்த அடுப்ப எப்பிடி பத்த வைக்கனு எனக்கு இது வர தெரில! நானும் ஆறு மாசமா இது கூட மாரடிக்கேன்"
"ஏண்டீ, நான் உன்கூட இருவது வருஷம் மாரடிக்கிலையா!! ஒரு அடுப்புக்கே இப்பிடி சலிச்சுக்கிரவ!? இதாச்சும் பேசாம வாய மூடிக்கிட்டு கெடக்கும்"

மா.. என்ற குரலுடன் குமார் வீட்டினுள்ளே நுழைய, அவர்கள் உரையாடலும் சற்றே தடைபட்டது..

ஏல ராசா!! எப்பிடிய்யா இருக்க! பாத்து மாசமாச்சே டாஇப்டி கறுத்து போய் கெடக்க!? வேலை ஜாஸ்தியா கண்ணு?

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. வெயில் வருஷா வருஷம் ஜாஸ்தியா யிகிட்டே போவுதில்ல..சரி, என்ன! நான் வாங்கிக்குடுத் அடுப்புல சமைக்குறதே இல்லியா!!??

அட நீ வேற கொமாரு, உங்கம்மாளுக்கு அத எப்படி பத்த வைக்கனே இன்னைக்கு வர தெரில..இப்போ கூட அதுக்குதான் பொலம்பிகிட்டு கெடந்தா..

ஏன் மா!! நான் போன் பண்ணப்போவே என்கிட்டே கேட்க வேண்டியதுதானே..

இல்ல ராசா, நீயே வேலை முடிச்சு களைப்பா இருப்ப, அதான்என்று ம்மா முடிக்கும் முன்னரே விழியோரம் நீர் தெறித்தது குமாருக்கு..

அட போம்மாசரி கொண்டா அந்த அடுப்ப இப்டி..எப்படியும் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் ஓரளவு பணம் சேர்ந்ததும் ஊரை ஒட்டி சிறிது நிலம் வங்கி ஊரிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துகொண்டே அடுப்பை பற்ற வைத்துவிட்டு குளிக்க சென்றான்.

குளிக்கும் போதே ராசுவின் நினைவு வந்தது குமாருக்கு.. பத்தாம் வகுப்பு முடித்ததுமே, குடும்பச் சூழலால், படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை நேரிட்டது குமாருக்கும் ராசுவுக்கும்..குமார் மாசமானால் சம்பளம் என்ற நினைப்புடன் பட்டணத்துக்கு வேலைக்கு செல்ல, அப்பாவும் இல்லாது போக, அம்மாவையும், இந்த ஊர் விவசாயத்தையும் விட்டுவிட்டு வரப்போவதில்லை என்று தைரியமாய் நின்றவன் ராசு..


இப்போது பட்டணத்தையும் அந்த மக்களையும் பார்த்துவிட்டபின், ராசுவின் மேல் இருந்த மரியாதையும் பாசமும் கூடிக்கிடந்தது..


குளித்து முடித்து வந்த போது அம்மாவின் கைப்பக்குவத்தில் சூடான இட்லியும், காரப் பணியாரமும் கூடவே தொட்டுக்கொள்ள தும்பைப்பூ தேங்காய் சட்னியும் தயாராய் இருக்கவே, ஒரு பிடி பிடித்துவிட்டு, பல தையல் கண்ட அப்பாவின் தோல் செருப்பை

மாட்டிக்கொண்டேஅம்மா, நான் கோயிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன்என்று குரல் கொடுத்து விட்டு கிளம்பினான்..

“அடேய், வீட்டுக்கு வந்து இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆவுல.. அதுக்குள்ள எங்கடா ஓட்றவன்!?” அப்பாவின் குரலை சட்டை செய்யாமல் கோயில் நோக்கி விரைந்தான்..

ஊரின் கிழக்கு எல்லையில் புதியதாய் வர்ணம் தீட்டப்பட்டு, பக்கத்து பட்டணத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட கணபதி சவுண்ட் சர்வீஸ் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டு கம்பீரமாய் நின்றது. கோவிலுக்கு நூறடி தள்ளிதான் ராசுவின் குடிசை இருந்தது..

ராசு...”, வாசலில் நின்று குரல் கொடுத்தான் குமார். வாசல் தெளிக்கப்பட்டும் கோலம் போடாமல் இருந்தது ஏதோ உறுத்திற்று.. வாடா மாப்ள, என்றவாறே வெளியே வந்தான் மொக்கராசு.

என்ன மாப்ள, கோலம் கூட போட்ல! அம்மா ஊர்ல இல்லியா என்ன?? இல்ல டா.. கொஞ்சம் உடம்பு சரி இல்ல.. என்னடா ஆச்சு!? சொல்லவே இல்ல!!?

உள்ளே சென்றால் கிழிந்த கந்தல் துணியை கிடந்தால் கமலாம்பாள், மொக்கராசுவின் அம்மா.. விடாது இருமலுடன், கண்ணெல்லாம் உள்ளே போய் கிடக்க..

வா குமாரு, எப்டி இருக்க? என்ற குரல் சுரத்தே இன்றி ஒலித்தது.. அதிர்ந்தான் குமார். இயல்பாகவே அதிக சத்தமாய் பேசும் குணம் கமலாம்பாளுக்கு.. ஆண்கள் நிறைந்த ஊர்ப் பஞ்சாயத்தில் கூட, எலேய்! என்ற குரலுடன் கமலாம்பாள் பேசத்தொடங்கினால் ஊரே அமைதியாய் கேட்டு நிற்கும்.. வெறும் சத்தம் மட்டுமல்ல, அவள் சொல்வதில் பல அர்த்தங்களும் இருக்கும் என்பது ஊர் அறிந்த உண்மை.. அவளை இப்படி பார்த்ததும் மனசு கனத்தது குமாருக்கு..

உடம்ப பாத்துக்கங்கம்மா, என்று சொல்லிவிட்டு வெளியே திண்ணைக்கு வந்தான்.. என்னடா ஆச்சு!? போன வாட்டி நான் வந்தப்ப கூட நல்லாதானே டா இருந்தாங்க..

அட போன மாசம் வரைக்கும் நல்லாதான் டா இருந்துச்சு.. இங்க கெழக்கால சிமெண்ட் பாக்டரி ஒண்ணு திறந்துருக்குறானுங்க, அதுக்கு பின்னாடிதான் நாங்க பாக்குற காடு இருக்கு.. அங்க இருந்து பொகைய மேல கொண்டி விடாம அந்த கோழைய கீழேயே விட்டுபுட்டானுங்க, அந்த போக காத்துல கலந்து மூச்சுலையும் கலதுருச்சு, ஆத்தாவுக்கு ஏற்கனவே கொஞ்சம் மூசெறைப்பு இருக்குல்ல.. அதோட சேர்ந்து ஆஸ்துமாவா ஆயிருச்சாம்.. அது மட்டுமில்லாம நெல்லு மேல எல்லாம் அந்த சாம்பல் படிஞ்சு கெடக்கு டா.. எம்புட்டு கழுவுனாலும் திங்கிற சோத்துல சாம்பல் இருக்க மாறியே இருக்கு மாப்ள.. ஊர் பஞ்சாயத்துல சொன்னா??,

அங்கதான் நம்ம ப்ரெசிடென்ட் மவன் சூப்பெர்வைசரா வேலை பாக்குறான்.. அதனால கண்டுக்கிடவே மாடிங்கிராய்ங்க.. என்றவாறே கசிந்த விழிகளை துடைத்தான் ராசு..

சரி வா, மாரியாத்தா இதுக்கு ஒரு வழி காட்டாமையா போயிருவா, வாடா கோயிலுக்கு போவோம், என தோளில் கைப்போட்டவாறே கோயிலுக்குள் நுழைந்தனர் இருவரும்.. "மாரியம்மா, எங்கள் மாரியம்மா".. என்று உள்ளம் உருக்கிக்கொண்டிருந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி..

அம்மனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டு, சக தெய்வங்களுக்கும் ஆராதனை முடிந்த பின்பு கோவில் பூசாரி உடுக்கு அடிக்கத் தொடங்கினார்..


முதலில் அருள் வந்தது புது கருப்புக்குதான்.. இளகிய பார்வை சற்றே கடிந்து, பின் அம்மனை நோக்கி வெறித்த பார்வையாய் மாறத் தொடங்கிய போது சுற்றி நின்றிருந்த அந்த சிறுவர்கள்.. ஹே ஹே என பலமாக கத்தத் தொடங்கினர்.. கடிந்த பார்வை சிவந்த விழிகளாய் மாற, கைகள் முறுக்கேறின..சட்டென யாரோ கொடுத்த எலுமிச்சை பழம் அவசரமாய் அவர் கையில் திணிக்கப்பட்டது.. அதை வாங்கி ஒரே கடியில் பிழிந்த புது கருப்பு, கருப்ப சாமி கோயில் இருந்த திசை நோக்கி ஒரு கணம் வெறித்து விட்டு, இதோ வரேண்டா!! என்ற குரலுடன் சிறுத்தை போல் ஓடத் தொடங்கினார்..

அடுத்து கூட்டம் கள்ளியடி கருப்புக்காக காத்திருக்கத் தொடங்கியது.. உடுக்கை இன்னும் பலமாக அடித்தார் பூசாரி..கூட்டம் கள்ளியடி கருப்பு கோவிலின் வேலை தூக்குபவரின் அருகில் நின்று அமைதி காத்தது.. ஊதற்காற்று ஒரு வித அமானுஷ்ய ஒலியுடன் வீசிக்கொண்டிருந்தது.. உடுக்கை சத்தம் இன்னும் தீவிரமானது.. சட்டென ராசுவின் கண்கள் சிவந்தன..அம்மனையே வெறித்துப் பார்க்கத் தொடங்கினான்.. அனைவரின் கவனமும் அம்மன் மீது இருக்க, சட்டென ஒரு உறுமல் சத்தம் வந்தது ராசுவிடம் இருந்துகூட்டம் மொத்தமும் இப்போது ராசுவை திரும்பிப் பார்க்க, ஹேய்ய்என்ற உறுமலுடன் அம்மனை வெறித்துப் பார்த்து ஆடத் தொடங்கினான் ராசு

பொதுவாய் ஊரில் காப்பு கட்டியிருக்கும்போது இவ்வாறு சிலருக்கு அருள் வருவதுண்டு.. பூசாரி விபூதி அடித்து மந்திரிக்க, அப்படியே அது அமைதியாய்ப் போகும். இரு நாட்கள் இரவு கோவிலில் தங்கி மூன்றாம் நாள் வீட்டுக்குப் போக, அவர் சகஜ நிலைக்கு திரும்புவார். அம்மாதிரி சமயங்களில் அம்மன் சில சமயம் உத்தரவு கொடுப்பதுண்டு

இப்போதும் ஆத்தாவின் உத்தரவு ஏதேனும் கிடைக்குமா என்ற யோசனையுடன் ஊர் பூசாரி ராசுவின் அருகில் வந்து கேட்டார்..

"ஆத்தா, உத்தரவு இருந்தா சொல்ல வேணும்.. "

டேஎன்னடா பண்றீங்க!! எனக்கு மூச்சு முட்டுதுடாநெஞ்செல்லாம் எரிஞ்சு கெடக்குடா!!! படையல்என்னத்த கலந்தீங்க!!!!”

ஆத்தாவிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்ததும் ஊர் மொத்தமும் துடித்துப் போனது

முதலாளி என்று அழைக்கப்படும் ராமசாமி ராசுவின் அருகில் வந்து, கைகட்டி வாய் பொத்தி அம்மனின் உத்தரவைக் கேட்க ஆயத்தமாய் நின்றார்..

ஆத்தா, வழக்கமா உனக்கு படிக்கிற கோவில் நிலத்து நெல்லும், இந்த அடிமை வீட்டு பயிருந்தானே ஆத்தாவெளங்கலியே இந்த மக்குப் பயலுகளுக்கு… கொஞ்சம் புரியற மாதிரி சொல்ல வேணும் ஆத்தா"

இல்லடா... நெல்லுல ஏதோ கலந்துட்டிங்க டாஅதோட உசுர கொன்னுபுட்டிங்கசுடுகாட்டு சாம்பல் வாட அடிக்குதுடா அந்த நெல்லுலஅசலூர்க்காரன் எதையோ கொண்டுவந்து என் மண்ணுல தெளிச்சு என் உடம்ப ரணமாக்கறாண்டா.. அத மொதல்ல தடுத்து நிறுத்துங்க.. அடுத்த அமாவாசை அன்னிக்கு அந்த நெலம் , என் உடம்பு சுத்தமாகனும்இல்ல, நான் இந்த ஊர்ல தங்கமாட்டேண்டா…”

புரியுது ஆத்தா, புரியுது.. காசுக்கு ஆசைப்பட்டு இந்த அநியாயத்த தட்டிக்கேக்காம விட்டது எங்க தப்புதான்.. அதுக்காக எங்கள பெருசா தண்டிசுராத ஆத்தா.. உடனே நாங்க அத சுத்தம் பண்ணிடறோம் உத்தரவு குடுக்கணும் ஆத்தாஇந்த திருவிழாவா கூட இருந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்… “

சடாரென விபூதியை வாரி ராசுவின் முகத்தில் இறைத்தார் பூசாரிநினைவிழந்து சரிந்தான் ராசு

அன்று இரவு சாமி ஊர்வலம் எல்லாம் முடித்து, அம்மனை கோவிலுக்குள் இறக்கி, ஊர் அடங்கிய பின்னர், காலாற நடந்து கொண்டிருந்தான் குமார் . கோவிலுக்கு எதிரே தேர் நிறுத்தும் கொட்டகையின் படியருகே ஏதோ ஒரு உருவம் முழங்காலைக் கட்டிக்கொண்டு குலுங்கிக் கொண்டிருக்கக் கண்டான்சிறு வியப்போடும் கொஞ்சம் அச்சத்தோடும் அதை நெருங்கினான் . பார்த்தால், ராசு

என்ன சாமி, இங்க உக்காந்துருகீங்க?? அந்த சிமெண்ட் பாக்டரி அநியாயத்த நிறுத்த எனக்கு வேற வழி தெரில மாப்ள.. நான் செஞ்சது தப்பாடா??

ஒரு சிறு புன்சிரிப்போடு அவனைப்ப்பார்த்து இல்லை என தலை அசைத்துவிட்டு, மன அமைதியுடன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான் குமார்

(கிராமப் புறங்களில் இன்றும் நடக்கும் இந்த காப்பு கட்டுதல் அல்லது குடியழைத்தல் என்னும் திருவிழாவின் போது, நாடு நாயகமாய் ஊரின் மாரியம்மன் கோவில் இடம் பெறும். உடுக்கும் மேளமும், பழந்தமிழ் பறையும் ஊரதிர ஒலிக்க, ஆலய மணியும் டங் டங் எனும் ஒலியுடன் ஒலிக்கும் நேரம், தீபங்களுக்கு இடையில் சந்தனமும், குங்குமமும் இட்டு, சிகப்பு நிற பட்டுடுத்தி, தீபாராதனைத் தட்டின் கற்பூர ஒளியில் தெரியும் அம்மனின் முகம் அங்கே ஒரு அமானுஷ்ய சூழலை உண்டாக்கும். அப்போது, இவ்வாறு உடுக்கும் அடிக்கப்படும்போது, யாரேனும் ஒருவருக்கு அருள் வந்து, அவர் ஊரின் காவல் தெய்வமாய் விளங்கும் கருப்பு கோயிலுக்கோ அய்யனார் கோயிலுக்கோ ஓடிச்சென்று, அங்கே நடப்பட்டிருக்கும் வேல் அல்லது பெரிய கத்தியை எடுத்து வந்து ஆடத் தொடங்குவார். பொதுவாய் ஒரு முறை இந்த கத்தியை சுமக்கத் தொடங்கியவர் இறக்கும் வரை பொதுவாய் அவரேதான் வருசா வருடம் சுமப்பார். இதையும் பழந்தமிழ் நாகரிகத்துள் ஒன்றாகவே நான் கருதுகிறேன்.)

2 comments:

  1. Superb, padicha piragu etho oru valli, namma nammalayum, namma bhoomiyayum konnutu irkomonnu thoudhu

    ReplyDelete