Friday, 14 October, 2011

சங்கத் தமிழ்ச் சாரல் - 1 (அகநானூறு-1)

      எனக்கும் அவளுக்குமான உரையாடல்கள் எங்கள் இருவர் தொடர்பானதாய் மட்டுமே முதலில் தொடங்கியது. இதோ, இன்று இந்த விடிகாலை வெள்ளி முளைக்கும் தருணத்தில், கண்ணாடிச் சாரளத்தின் வழி மெல்லிய பூத்தூறலாய் சிதறும் மழைச் சாரலினை ரசித்துக்கொண்டே கண்கலந்து பேசிக் கொண்டிருக்கும் அழகிய தருணத்தில் அவள் கேட்கிறாள், "என்ன பேசலாம்?" "அழகு!!"- நான். "அழகெது?" - அவள். வழக்கம்போல் என் சுட்டுவிரலால் அவள் முகம் காட்டிப் புன்னகைக்கிறேன். சற்றே வெட்கி, பின் இல்லையெனத் தலையசைத்து தொட்டில் அருகில் சென்று விழிநாட்டுகிறாள். உவப்பால் விழிகள் விரிய, குழந்தையா? எனக் கேட்கிறேன். "பெயர்?" - இது அவள். "தமிழ்" - இது நான். இதுதான் அழகு என்று கூறிவிட்டு மீண்டும் என் அருகில் வந்தமர்கிறாள். இவ்வாறு தொடங்குகிறது எங்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல் பனிபொழியும் அந்த அழகிய அதிகாலையில்.. இனி வழக்கம்போல, எனக்கும் அவளுக்கும் இடையேயான உரையாடல்களில், அவளுக்கான என் மனச் சிதறல்களின் தொகுப்பு...
      கண்களில் அரும்பி, இதயத்தில் மலர்ந்துப் பின் அங்கேயே வேரூன்றி ஆலமரமாய் கிளைத்து நிற்கும் காதல் வந்துவிட்டாலே, அதனுடன் இலவச இணைப்புகளாய்ப் பற்பல துன்பங்களும் காதல் கொண்ட நெஞ்சத்தூடே வந்து சேரும். அத்துன்பங்களையும் ஒருவித மயக்கம் கலந்த மகிழ்வோடு அனுபவிக்கவும் காதல் கற்றுத்தரும். எவ்விதத் துன்பத்தினையும் ஆடிக்காற்று அள்ளி வரும் தூசியைப் போல ஒரு நொடியில் ஊதித் தள்ளக் கற்றுத் தரும் காதல், தன மனம் நாடிய சகியைக் காணாது தவிக்கும் பிரிவாற்றாமை எனும் கொடிய நோய்க்கு மட்டும் எவ்வித மருந்தும் அளிப்பதில்லை.. சங்கக் கவிகளுள் ஒருவர் பாடியதைப் போல, அணிந்திருந்த இடையணி கால்கள் வழி கழன்று விழும் அளவு உடலை மெல்லியதாய்ச் செய்துவிட்ட பின்னரும், காதலனை அல்லது காதலியைக் காணாது ஒரு துளி நீரும் உள்ளிறங்கா. இவ்வாறு தலைவி, தான் காதல் கொண்ட தலைவனைக் காணாது தவிக்கும் அந்திப் பொழுதுகளிலெல்லாம், அவள் உடன் உறைந்திருக்கும் தோழியே தலைவனைக் கண்ணுறுவதற்கோ, செய்திகளைத் தூதாக எடுத்துச் செல்வதற்கோ உற்ற துணையாய் இருப்பாள். தலைவன் வாராது போன துன்பத்தினால் மூச்சுக்காற்று கூட வெளிவராத அளவிற்கு மௌனத்தின் கடலில் மூழ்கிக் கிடக்கும் தலைவியின் நிலை கண்டு மனம் வெதும்பிச்  சினந்து அத்தலைவனிடம் புலம்பவும் செய்வாள் அந்த வெள்ளை மனம் படைத்த தோழி...
      இன்புறுதலில் இருவகை உண்டு! எதிர்பார்த்து வரும் இன்பத்தினை விட, எதிர்பாராது வரும் இன்பம் அகமகிழ்வை மிக்கதாக்கி உள்ளத்தைப் பூரிப்படையச் செய்யும்... அதுவும் காதலில் வரும் எதிர்பாராத இன்பத்தினால் காதலனும் காதலியும் அடையும் உவகையின் அளவினைச் சொல்லி அறியவேண்டுவதில்லை! ஆனால், ஒரு வேளை நம் தலைவனைப் போல, எதிர்பாராது வரும் இன்பத்தினை தினம்தோறும் அனுபவித்துவரும் ஒருவனாய் இருந்தால்!?? 

இதோ!! இந்த அகநானூற்றுப் பாடலில் கபிலர் கூறும் கதையினை சற்றே செவிமடுப்போமே!! 

    வளமையான இலையினை தன்னகத்தே கொண்டு, தாமாகப் பழுத்த பெருங்குலைகளில் கிடக்கும் இனிய வாழைப்பழங்களைக் கூட சட்டை செய்ய விடாமல் தடுக்கும், மலைச் சரிவில் பருத்துக் காணப்படும் தேனினும் இனிய பலாச் சுளைதனை உண்டு, மிகப்பழமையான பாறையை ஒட்டி சலசலத்து ஓடும் நெடுஞ்சுனையில் கிடக்கும் அமுதத்தினையும் விட மயக்கம் தரக் கூடிய நறும் தேனினை அறியாது உண்ட ஆண் குரங்கு ஒன்று,  அருகில் இருந்த சந்தன மரத்தில் கூட ஏறாது, அருகில் உள்ள நறுமணம் வீசும் மலர்களினூடே மகிழ்ந்து  படுத்திருக்கும், அறியா இன்பம் நிறைந்து காணப்படும் மலை நாட்டைச் சேர்ந்த தலைவ!  எதிர்பார்த்து வரும் இன்பம் உனக்கு என்றுமே அரியதுதானோ !?  மிகுந்த அழகினையும், மூங்கிலைப் போன்ற செழித்த தோளினையும் உடைய இவள், (இத்தலைவி) நிறுத்த முடியாத நெஞ்சோடு உன்பால் காதல் கொண்டதினால், இவள் தந்தை இவளைக் காக்க காவலன் ஒருவனை நியமித்திருக்கிறார். அவன் சற்றே அசந்து கண்ணயரும் நேரமான இரவுப் பொழுதில் வந்து அவளைச் சந்திப்பதே உனக்கு உரித்தானது.. இதோ! வேளை வந்துவிட்டது. பசுமையான புதர்களும், வேங்கை மரமும், ஒளிரும் பூங்கொத்துக்களும் கூட விரிந்து விட்டன! நீண்ட நெடும் முழுநிலவின் ஒளியும் ஊரினைத் தழுவத் தொடங்கிவிட்டது!!   

 அகநானூறு 
 பாடல் : இரண்டு  ; திணை: குறிஞ்சி ; நிரை: களிற்றியாணை நிரை;  பாடியவர்: கபிலனார் ; தோழி தலைவனிடம் சொன்னது

கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை; பைம்புதல்
வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன;
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே! 

பின் குறிப்பு: முதல் முறை சங்க இலக்கியம் குறித்து எழுதத் துணிந்திருக்கும் எனக்கு, தமிழ்க்காதலன் என்பதைத் தவிர்த்த எந்த ஒரு தகுதியும் கிடையாது. தவறுகள் இருப்பின், தயை கூர்ந்து சுட்டிக்காட்டவும். தாழ்மையுடன் திருத்திக்கொள்வேன்.

No comments:

Post a Comment