Friday 9 October, 2009

மணிமேகலை....2

கள்வன் என் காதலன்...

மான்விழியாள் கார்குழலாள் செங்கழுநீர் நிறமுடையாள் சம்புவரையர் குலமகள் மணிமேகலை என்ற பெயருடையாள் கண்டதில்லை கண்ணீர்த் துளி அதன் வெப்பமும் அறிந்ததில்லை நாணமதோ என்ன விலை கேட்டிடுவாள் எவரிடமும்!!

அன்றொரு நாள்.. அமுதினும் இனிய காலைப் பொழுது
தங்கை காண ஓடி வந்தான் அன்புத் தமையன்
மாபெரும் வீரன், அவன் கந்தமாறன்

வீரத்தினில் அர்ச்சுனன் தான் வடிவத்தினில் மன்மதன் தான்
என் உயிர்த் தோழன் அவன்.. உன் மனம் கவரும் திறன் படைத்தோன் நாணமென்றால் என்ன விலை!? கேட்டிடும் மான் விழிகள் ரெண்டும் நிலமகள்மேல் காதல் கொள்ளும் நாள் வருமடி கண்மணி - உன் கழுத்தில்
மாலை சூடும் வேளை வரும் பொன்மணி

மூவேந்தர் முடிபரித்து பரி அழித்து
புலவர் பலர் மகிழ்ந்திடவே பரிசளித்து
பார் போற்றிய வாணன், அவன் வந்திய தேவன்..

கள்ளி மலர் சிவப்பதுண்டு அல்லி கூட சிவப்பதுண்டு
கருங்குவளை சிவந்ததுண்டோ!! காணீர் மானுடரே
எங்கள் மணிமேகலையின் கன்னம் சிவக்கக் காண்பீர் !!

கோபத்தின் ஊடாக வெட்கமொன்று வெட்டிச் சென்றது மின்னலென
மனதுக்குள் பூ பூக்க.. ஓடிச் சென்றாள் புள்ளி மானெனவே
மனதுக்குள் வரித்து விட்டாள்! தன் மணாளனை வரைந்து விட்டாள்
ஆசைத் தோழி, பாசமுள்ள சிநேகிதி.. சந்திரமதி ..
அவள் காதினில் கவி பாடி வந்தாள்.. கள்வன் என் காதலன் என..

மூவுலகும் கட்டி ஆளும் பாவேந்தர்
இந்தப் பார்வேந்தர்.. சுந்தர சோழர்
தலை வணங்கும் தனாதிகாரி..
பழுவேட்டரையரும் சம்புவரையரும்
முத்தரையர் வணங்காமுடி இரட்டையர்
இன்ன பிறரும் கூடினர் ஓர் இரவினில்

எதிரியையும் அணைத்துக் கொள்ளும்
ஏற்றமிகு சோழ வம்ச கருவறுக்க..
அங்கு விதியின் ஆட்டம் விளையாட்டு பொம்மைகளாய் அரையர்கள் கூட்டம் ..

அந்த காரிரவின் முற்பகுதியினில்..
நந்தினியின் கதை பேசி நகைத்திருந்த வேலையினில்
புயலென புகுந்தான் காளையவன்
வானவரும் வணங்கி நிற்கும் வாணன் வல்லவரையன் ...

கனவினில் வரித்த கள்வன்! என் மனம் அணைத்திட்ட காதலன்..
விம்மியது கன்னி நெஞ்சம்..
நிலமகள் மேல் காதல் கொண்டாள்..
தன் காதலன் முகம் காண மறுத்தாள்..
நாணமோ!? என்ன விலை!? கேட்டு வந்த கன்னி இவள்..
சம்புவரையர் குல மகள்..

அறியாத முகமதுவோ!! மீண்டும் பார்க்க
கனவுகளில் கை கோர்த்து அலைகடலும் தாண்டி சென்று
சந்திரனில் கால் பதித்து
காதல் கதைபேசி திரிந்த நாட்கள் மறக்குமோ!
அவன் திருமுகமும் மறந்திடுமோ!!

சொப்பனத்தில் திளைதவளின் மனம் கலைத்தான்
அன்புத் தமையன்.. நந்தினியின் ஆசை வலையில் சிக்கியவன்..
மாபெரும் வீரன், அவன் கந்தமாறன்..

உன் அன்புத் தமயனை முதுகில் குத்திய பாவி!!
சிநேகிதத் துரோகி... அவன் குலம் அறுப்பேன் கூடிய விரைவினில்!!

பெண்ணென்ன மாபெரும் சக்தி!?
தெய்வம் என்பார்கள்! கோவிலை விட்டு வெளியே வரக் கூடாதென்பார்கள்.. அல்லி முல்லை தாமரை என்பார்கள்!
அவள் மனதினை ஏறெடுத்தும் கேள மாட்டார்கள்..

மனம் நொந்தாள் மணிமேகலை, தேவதைகளின் தேவதை..


No comments:

Post a Comment