Friday, 9 October, 2009

ஆட்டோகிராப்..


என்னை முதல் முதலாக பாதித்த திரைப்படம். நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தில் சேரன், ஒரு சாமான்ய கிராமத்து மனிதனின் வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்திருந்தார். கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன், புதிய இடங்களுக்கு செல்லும்போது அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், அவனை பாதிக்கும் விஷயங்கள் பற்றி தெளிவாக காட்சிகளைத் தொகுத்திருந்தார். திண்டுக்கல் அருகில் நெய்க்காரப்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து, தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் படித்த செந்தில் என்ற வெகுளியான சிறுவன், முதிர்ச்சியடைந்த இளைஞனாக மாறும் கதை. சென்னையில் விளம்பர நிறுவனம் நடத்தி வரும் செந்தில் தன் திருமணத்திற்கு தன் வாழ்வில் கடந்து வந்த அத்துனை முக்கிய மனிதர்களையும் அழைக்கும் முடிவுடன், முதலில் தன் கிராமத்திற்கு செல்லும் காட்சியுடன் படம் தொடங்குகிறது... கதையின் முதல் பாகமான கிராமத்து பின்னணியும், மனிதர்களும் நம்மை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறன.பள்ளித்தோழி கமலாவாக நடித்திருக்கும் மல்லிகா, முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விடலைப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை இதை விட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.. சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் செந்திலை பார்க்கும் கமலா, அப்போதும் "ஒரு நிமிஷம்" என்று சொல்லிவிட்டு கண்ணாடி முன்பு சென்று முகத்தை துடைத்து பொட்டு வைக்கும் காட்சி ஆயிரம் கவிதைகளை சொல்கிறது.
அதன் பின்னர் தன் கல்லூரி நாட்களைக் கழித்த கேரளாவிற்கு செல்கிறான். அவன் கண் முன்னால் 12 வருடங்களுக்கு முன்பான கல்லூரி நாட்கள் விரிகின்றன. தந்தையின் பணிமாற்றம் காரணமாக கேரளா வரும் செந்தில் வந்த புதிதில் மாற்ற மாணவர்களால் கிண்டல் செய்யப்படுகிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஆதரவாக இருக்கும் லத்திகா (கோபிகா) மீது காதல் வசப்படுகிறான். லத்திகாவும் அவனைக் காதலிக்க, அழகிய புல்லாங்குழல் இசையினைப் போல் சென்று கொண்டிருக்கும் அவர்களின் காதல், லத்திகாவின் தந்தைக்கு தெரியவர, அவளைக் கோவிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி அவளின் மாமன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார். அதே நேரத்தில் செந்திலின் வீட்டிற்கும் ஆட்களை அனுப்பி அவர்களை ஊரை விட்டு செல்லும்படி செய்கிறார்.
அதன் பின்னர் தன் வாழ்வின் இருண்ட இரு வருடங்களை கோவையில் கழிக்கும் செந்தில், வேலை தேடி சென்னை செல்கிறான்.. அங்கே பசி பட்டினிக்கு இடையில் நம்பிக்கையை தொலைத்த நிலையில் திவ்யா (சினேகா) வை சந்திக்கிறான். அவனுக்கு வேலை வாங்கித் தருவது மட்டுமின்றி, அவனுடன் ஒரு நல்ல தோழியாகவும், நலம் விரும்பியாகவும் இருந்து அவனை கடந்த கால சோகங்களில் இருந்து மீட்டெடுக்கிறாள்.
படகு கரையை அடைய, அவனும் பழைய நினைவுகளில் இருந்து மீள்கிறான். பழைய நண்பன் கிருஷ்ணாவுடன் சென்று லத்திகாவை திருமணத்திற்கு அழைக்க செல்லும் அவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக, அவள் விதவைக் கோலத்தில் அமர்ந்திருக்க, கனத்த இதயத்துடன் சென்னை திரும்பும் செந்தில், திருமணத்தை நிறுத்தி விடும் யோசனையில் இருப்பதாக திவ்யாவிடம் கூற, அவள் அவன் மனதை மாற்றி, "அறுபது வருட வாழ்க்கையில், முப்பது வருடம் பொருளாதாரத்திற்காகவே போராட வேண்டியிருக்கு. இந்த போராட்டத்தில் ஒரு மனிதனின் கவலைகள், தோல்விகள் எல்லாம் அடித்து செல்லப்படுகின்றன. இப்படித்தான் இருக்க முடியும், ஏன்னா இதுதான் இயல்பு" என்று அறிவுரை கூறுகிறாள்.அவனும் திருமணத்திற்கு சம்மதிக்கிறான். அனைவரும் திருமணத்திற்கு வர, அழகான ஓவியம் போல காட்சிகள் விரிகின்றன. திருமணப் பரிசு கொடுத்து விட்டு செல்லும் போது தூரம் சென்று திரும்பிப் பார்க்கும் காட்சியில், மல்லிகா ஆயிரம் கவிதைகளை திரும்ப சொல்கிறார்.
சேரனின் மிகச் சிறந்த படைப்பான இத்திரைப்படம் எல்லா விதத்திலும் சிறப்பாக அமைந்துள்ளது. நல்ல ஒளிப்பதிவு, செவிகளுக்கிதமான பரத்வாஜின் பாடல்கள், சபேஷ்-முரளி யின் பின்னணி இசை, துணை நடிகர்கள் என அனைவருமே தங்கள் உச்சபட்ச உழைப்பை அள்ளிக்கொட்டியிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. ஒரு ஆட்டோக்ராப் புத்தகத்தைப் போல விரியும் படத்தின் பெயரிலிருந்து, ஒவ்வொரு பிரேமிலும் சேரனின் உழைப்பு பளிச்சிடுகிறது. எத்தனை வருடங்களானாலும் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் மிகச் சில திரைப்படங்களுள் ஒன்று, சேரனின் ஆட்டோகிராப்...


No comments:

Post a Comment