Monday 15 August, 2011

நினைவு நாடாக்கள்



ஊரையே மறைக்கும் அளவுக்கான புழுதியை தெருவெங்கும் வாரித் தெளித்தவாறே உருண்டோடி வந்து நின்றது நான் வந்த அருங்காட்சியகத்தில் வைக்க சகல தகுதிகளையும் உடைய அந்தஅரசுப்பேருந்து . எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும் இறைவனைப்போல், முகத்தின் முன்னால் படர்ந்து கிடந்த புழுதியை கைவீசி விலக்கிக்கொண்டே இறங்கினேன். அந்த பேருந்து மீண்டும் கிளம்புகையில் வாரி இறைத்த புழுதி சற்றே அடங்கும்வரை அங்கேயே மௌனமாய் நின்றிருந்தேன். பின் கலங்கலாய் காட்சிகள் தெரியத் தொடங்கின. நீண்ட நெடுங்காலத்துக்குப்பிறகு நுகர்ந்த அந்த மண்வாசனைக் காற்றை நுரையீரல் முழுவதுக்குமாய் நிரப்பிக்கொண்டே, பார்வையை அலையவிட்டேன் . ஊர் வெகுவாக மாறித்தான் விட்டிருந்தது. ஆனால், அந்த அரசமரத்தடி தேநீர்க் கடை மட்டும் அப்படியே அதே இடத்தில்…
சாலையைக் கடந்து (இப்போதிருக்கும் நகரத்தின் சாலைகளுடன் ஒப்பிட்டால், அதை ஒரு குறுக்குச்சந்து என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்) "அழகு செட்டிநாடு ஓட்டல்" என்று பெயர் மாறிவிட்டிருந்த அந்த காரைக்குடியார் டீக்கடைக்குள் நுழைய முற்பட்டேன். நான் கடைசியாக ஊரை விட்டு சென்றபோது இருந்ததற்கும் இப்போதைக்கும் அந்த பெயர்ப்பலகையைத் தவிர பெரிதாக எதுவும் மாற்றம் இருக்கவில்லை.கடையின் முன்புறத்தில் பாய்லர் அருகில் நின்றுகொண்டு டீ ஆத்திக்கொண்டிருந்த சிறுவன் சிவப்பு நிற முண்டா பனியனும், நீல நிற அரசுப்பள்ளி கால்சட்டையும் அணிந்திருந்தான். அநேகமாக “அழகு” வின் மகனாக இருக்க வேண்டும் என யூகித்தேன். அவனிடம் "ஒரு டீ போடுப்பா", என்று சொல்லியவாறே கடையின் உள்ளே நோட்டமிட்டேன்… வழக்கமாய் எல்லா கிராமங்களின் பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய டீ கடைகளிலும் அமர்ந்திருப்பது போலவே இங்கும் சில வெண்மை என்ற நிறமே அறியாத தேகத்தை மறைக்க மேலாடை ஏதும் அணியாத, வாழ்க்கையின் விளிம்பை அடைந்துவிட்ட நிம்மதியும், விரக்தியும் கலந்து குழம்பிக் கிடக்கும் மொத்தமான கண் கண்ணாடிகளினூடே தெரிந்த கண்களையும் கொண்ட, கிழவாடிகள் என்று செல்லமாக அழைக்கப்படும் முதியவர்களே இங்கும் வீற்றிருந்தனர். நான் கண்களால் துழவியதைக் கண்டு கொண்ட ஒருவர், “யாருப்பா??” என விளிக்கவே, “ராமசாமிப்பிள்ளை பேரன் தாத்தா” என்றேன்..

“யாரு, கங்காணி வீடு ராமசாமி பிள்ளையா?

“ஆமா தாத்தா!” “யாரு பையன்?” “கனகராசு பையன் தாத்தா”

கனகராசு அந்த நடு ஆளா?சொகமா இருக்கியாபா?, அந்த காலத்துல உங்க அப்பாரு இந்தா இந்த பையன மாதிரி இருக்கும்போது நாங்கலாம் ஒண்ணா சேர்ந்து ஆத்தங்கரையில கபடி விளையாடுவோம்… அப்பாரு எப்படி இருக்காரு??”
அப்பா நாலு வருஷத்துக்கு முன்னாடியே காலமாயிட்டாரு தாத்தா.. வீடு இன்னும் அப்படியே கெடக்கு… அதான் ஊர் பிரசிரண்ட பாத்து பேசிட்டு ஒரு முடிவு பண்ணிட்டு போலாம்னு வந்தேன்… யாரு இப்ப பிரசிரண்டு??
ஒரு வினாடி இருண்டு பளீரிட்ட அவரின் கண்கள் அநேகமாக அவரின் அந்திமக் காலத்தை நினைவு படுத்தியிருக்க வேண்டும்.."அட நம்ம பெருமா கோயில் தெரு முனியாண்டி மவன் தான்… அவன் பேரு…"என்றவாறே இரு வினாடிகள் யோசித்தவர் , "ஒயே இருளப்பா!! அவன் பேரென்னடா??" என்று அருகில் இருந்த இன்னொரு கிழவாடியைக் கேட்டார்…

"அட சரவணன் பா… என்ன நேத்துதானே வந்து உன்கூட பேசிட்டு போனான்… அதுக்குள்ள மறந்துட்டியாக்கும்??"

"அப்புடியா… மறந்து போவுதப்பா… " இதற்குள்ளாக டீ வந்து விட, எங்கள் பேச்சு சற்றே தடைப்பட்டது… குடித்து முடித்து விட்டு க்ளாசை பையனிடமே திரும்பக் கொடுத்து, காசையும் கொடுத்தேன்… சிநேகமாய் சிரித்தான் சிறுவன்…

அப்பொழுதுதான் கவனித்தேன்.. கடையில் கல்லா பெட்டி அருகிலேயே ஒரு நாற்காலியை போட்டு ஒரு 1-1/2 வயதுக் குழந்தை உருட்டிக் கொண்டிருந்தது… இடுப்பில் இருந்த அரைஞாண்கயிறு தவிர வேறு எதுவும் உடையோ, ஆபரணங்களோ கண்டிராத, பையனைப் போலவே (அநேகமாக அண்ணனாக இருக்கக் கூடும்) கருமை படிந்த தேகத்தை மட்டுமே ஆடையாய்ப் போர்த்திக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது… பையன் மீதி சில்லறையைக் கொடுக்கும் போது நான் சற்றே தவற விடவே, இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் குழந்தை அருகில் விழுந்தன… தலை உயர்த்தி அண்ணாந்து பார்த்தது.. அந்த நாணயங்கள் உருண்ட சத்தம் அதற்கு மகிழ்ச்சியை ஊட்டியிருக்க வேண்டும்… மூக்கில் வழிந்த சளியுடனே ஆனந்தமாக கைகொட்டி சிரித்தது… ஏனோ, எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று தோன்றவில்லை… மெலிதாய் புன்னைகைத்து விட்டு, அந்த கிழவாடியிடம் "போயிட்டு வரேன் தாத்தா…" என்றவாறே கடையை விட்டு வெளியேறி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்…
எங்கோ எப்பொழுதோ ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது…“ இந்த லோகத்துல எல்லாருக்கும், வெள்ளைநிறத் தோலுடன், பெடல்புஷ் பாண்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்துகொண்டு, தெருவில் போவோரை எல்லாம் பொம்மை துப்பாக்கியில் சுட்டுவிடுவேன் என்று திமிர் காட்டுகிற குழந்தை அழகு… மயிலாப்பூர் தெப்பத் திருவிழாவில் இரவு ஏறும் நேரத்தில் உடம்பெல்லாம் சேறுபடிந்து, மன வளர்ச்சி குன்றியவனாய், இயற்கை தலையில் அடித்து தரைக்கு எத்தின பிராணியாய் கயிற்றில் கட்டப்பட்டு பிச்சை எடுத்துத் திரியும் சிறுவன் அருவெறுப்பு!!”
மனத்தைக் குழப்பிய நினைவுகளை தலையசைத்துக் கலைத்துவிட்டு வீடு நோக்கி நடைபோட்டேன்.. கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டன…நான் ஊருக்கு வந்து…கடைசியாக ஊரில் இருந்த அரசுப் பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாவது முடித்த பிறகு எனது கல்லூரிப் படிப்புக்காக அப்பா தனது வேலையை சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்த பிறகு, வேலை, தங்கை திருமணம், பிறகு என் திருமணம், குடும்பம், கடமைகள் என்றான பிறகு ஊர்ப்பக்கம் வரவே இல்லை… சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு அப்பா மறைந்த பொழுது கூட சொந்த பந்தங்களெல்லாம் பெரும்பாலும் சென்னையிலேயே இருந்ததனால் ஊரில் இருந்த சிலரை மட்டும் அங்கே வரவழைத்து காரியங்களை முடித்தாகிவிட்டது…
இத்தனை வருடங்களுக்குப் பின்னர் நான் பிறந்த வீட்டையும், தவழ்ந்த நிலா முற்றத்தையும், ஓடி விளையாடிக் கீழே விழுந்து சிராய்த்துக்கொண்ட நெல் காய வைக்கும் முன்வாசலையும் பார்க்கப் போவதை நினைத்தவுடன் ஏதோ ஒன்று என் தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டது.. இதற்குள்ளாகவே வீட்டின் அருகாமையில் வந்து விட, பக்கத்து வீட்டில் இருந்த சரசு அக்காவின் வீட்டிற்குள் நுழைந்தேன்… அப்போதுதான் உலை கொதித்துக் கொண்டிருந்தது போல… அக்கா வியர்க்க விறுவிறுக்க சமயலறையில் இருந்து வெளியே வந்து பார்த்தது… “வாய்யா…இந்தா வீட்டு சாவி ஜன்னல்ல மாட்டி இருக்கு பாரு” என்று கூறியவாறே முகத்து வியர்வையை சீலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டது… “மாமா எங்கே.. காட்டுக்கா?” “இல்லைய்யா சொசைட்டிக்கு பால் ஊத்த போயிருக்காங்க..நீ வீட்ட தொறந்து உள்ள போ.. நான் பின்னாடியே வாரேன்”
போய் வீட்டை திறந்து பார்த்தவுடன் மனசு முழுவதும் வீட்டை நிரப்பியிருந்த வெறுமை வந்து சூழ்ந்து கொண்டது… என் சிறுவயதில் இவ்வளவு பெரிய வீடு முழுவதும் சொந்தங்களால் நிரம்பிக் கிடக்கும்…. அந்த வெறுமை தந்த சோர்வுடனே சென்று குளித்து விட்டு பூஜை அறையில் வந்து நின்றேன். அதற்குள்ளாக அக்கா காலை உணவை இங்கேயே எடுத்துக்கொண்டு வந்துவிட்டது… சாப்பிட்டுவிட்டு பிரசிரண்டு வீட்டை தேடிக் கிளம்பினேன். வழிகாட்ட அக்கா அதன் ஆறு வயது பையனையும் கூடவே அனுப்பி வைத்தது… எங்கள் ஊரில் ஒரு வழக்கம்.. புதிதாக வீடு கட்டுவதாக இருந்தாலோ, அல்லது வீடு சரி பார்பதாக இருந்தாலோ ஊர் தலைவரிடம் தான் முதலில் சொல்லப்படும்.. அவர் பிறகு அதனை ஊரில் இருந்த 5-6 கொத்தனார்களில் யாராவது ஒருவருக்கு சுழற்சி முறையில் திருப்பி விடுவார்.. அனைவருக்கும் சமமாக வேலைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம் அது… இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது…
அவர் வீட்டை அடைந்த உடன் பையனை வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு, அவரிடம் பேச வேண்டிய விஷயங்களையும் பேசிய பின்னர் வீடு திரும்பத்தொடங்கினேன்.. அதற்குமுன் ஊரில் நான் பார்க்க ஆசைப்பட்ட ஒரு இடம் இருந்தது… அதை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.. அரசு மேல்நிலைப்பள்ளியைத் தாண்டி நடக்கும்போதே நெஞ்சுக்குள் ஒரு சின்ன குறுகுறுப்பு ஒட்டிக் கொண்டது… இதோ, இந்த பக்கம் தான்… செட்டியார் கடை தாண்டி அந்த இரண்டாவது….. இப்போது அந்த இடம் இருந்த நிலை என்னை சற்றே வேதனைக்குள்ளாக்கியது... அங்குதான் "மூக்கையன் சலூன் கடை" இருக்கும்.. இப்போது அது இருந்ததன் அடையாளமாக வெறும் மண் குவியலும், துரு ஏறிய செல்லரித்த பழைய பெயர்ப் பலகையும் மட்டுமே கிடந்தன….வீடு வீடாக சென்று முடி திருத்தும் பணியை விடுத்து, முதன் முதலில் எங்கள் ஊரில் கடைபோட்டு, சுத்துகிற நாற்காலி வைத்து, முன்னும் பின்னும் பெரிய பெரிய கண்ணாடிகள் வைத்து, பெரிய சைஸ் ரேடியோ வைத்துக் கட்டப்பட்ட "மூக்கையன் ஆண்கள் அழகு நிலையம்…"
முதன் முதலில் இங்கு வந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது… 6 வயது இருக்கலாம்.. அதிலிருந்து... முதற்முதலில் மீசை அரும்பிய போது இந்த கடை கண்ணாடியில் நின்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்த வரை… கையில் ஒரு விதமான வித்தியாசமான கத்திரியையும், சீப்பையும் வைத்துக் கொண்டு, பளீரென்ற வெள்ளை நிற வேட்டி சட்டையுடன் மூக்கையன் முடி திருத்துவதில் ஒரு அலாதியான நேர்த்தி தெரியும்.. சிறுவர்களுக்கு முடி வெட்டியபின் வெட்டுப்பட்ட துகள்கள் ஒட்டியிருந்தால் குத்துமே என்பதற்காக முகத்தையும், கழுத்துப்புறத்தையும் நன்றாக ஒரு துணி வைத்து துடைத்து, கழுத்தில் பாண்ட்ஸ் பவுடர் தூவி விட்டு, எட்ட நின்று ஒரு கணம் அழகு பார்த்துவிட்டு, பின்னர்தான் இருக்கையிலிருந்து இறங்க விடுவார்… சிறு வயதில் யாரோ வீட்டுக்கு வந்த உறவினர் ஒரு முறை என்னிடம் என்ன ஆக போறீங்க தம்பி பெரிய ஆள் ஆகி? என்று கேட்க, மூக்கையன் மாதிரி ஆகப்போறேன் என்று சொல்லி அப்பாவிடம் அடிவாங்கிய நினைவு கூட இருக்கிறது.. நாங்கள் பதினொன்றாவது படித்துகொண்டிருந்த சமயத்தில் தான் ரஜினிகாந்தின், முரட்டுக் காளை என்று நினைக்கிறேன்… வெளியாகி இருந்தது… அந்த படத்தில் வரும் ரஜினி போஸ்டர்கள் எல்லாம் கலர் கலராய் கடையின் சுவர் எங்கும் ஆக்கிரமித்திருக்கும்… மூக்கையன் தீவிர ரஜினி ரசிகர்.. ரஜினியின் முதல் படத்திலிருந்து அவர் இருக்கும் எல்லா புகைப்படங்களையும் எப்படியோ தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து விடுவார்.. அதைப்பார்ப்பதற்காகவே பள்ளி முடிந்ததும் எங்கள் வயது பையன்கள் அங்கு வருவதுண்டு… இதையெல்லாம் தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர்… நான் எங்கள் ஊரில் பார்த்த, பெரிய மனிதர்கள் என்று ஊர்க்காரர்கள் சொன்ன எல்லாரையும் விட, அவர் நல்லவர்.. யாரிடமும் அவர் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.. வெட்டியாக அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை வம்பு செய்யும் கூட்டத்தையும் அவர் கடை அருகில் நெருங்க விட்டதில்லை.. அந்த நேர்மை மற்றும் ஒழுக்கத்தினாலோ என்னவோ, எப்பொழுதுமே நெஞ்சு நிமிர்த்தி தான் நடை போட்டு வருவார்.. கடைசியாக நாங்கள் ஊரை விட்டுக்கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு நான் முடி திருத்துவதற்காக சென்றிருந்தேன்… வழக்கம் போல என்னுடன் உரையாடிக்கொண்டே தன் பணியை செய்து முடித்தவர்.. திடீரென கடைக்குள் வெளிச்சம் குறையவே, திரும்பி வாசல் பக்கம் பார்த்தார்.. அங்கே மேல தெரு சின்னையனும் , இன்னும் சிலரும் கோபத்துடன் நின்றுகொண்டிருந்தனர்..
முதலில் சின்னையன் தான் “டே ********** (அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையில் அர்ச்சனை) வெளிய வாடா” என்றான்… முதன் முதலில் மூக்கையன் கோபப்பட்டு அன்றுதான் பார்த்தேன்… அதுவும் ஒரு கணம்தான், கண்களில்… பின்பு அமைதியாக “என்னடா வேணும் உனக்கு” என்றார்.. “வாடா வெளிய… பிள்ளையாடா பெத்து வச்சுருக்க? என்ன, பெரிய எடத்து பொண்ணா பாத்து வளைச்சு போட சொல்லி நீதான் சொல்லி குடுத்தியா?” மூக்கையன் பதில் பேசும் முன்பாக சரமாரியாக செருப்புகள் பறந்து வந்து கடைக்குள் விழுந்தன… கொஞ்சநாளாகவே ஊருக்குள் அரசல் புரசலாக ஒரு பேச்சு அடிபட்டு வந்தது…மூக்கையன் பையனுக்கும், முதலாளி பிள்ளையின் மகளுக்கும் ஒரு விஷயம் ஓடுவதாக… இன்று விடியற்காலை மூன்று மணிக்கு அவளை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு சென்றும் விட்டான்..
ஊர் பஞ்சாயத்தில் நிறுத்தி அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த போதெல்லாம் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் தலைகுனிந்து நின்றிருந்தார்… முதல் முறையாக… அதுவும் அவர் செய்யாத, தவறும் இல்லாத ஒரு காரியத்துக்காக… கூட்டத்தில் ஓரிருவர், "டேய் மூக்கா… எப்பவும் நெஞ்ச நிமித்திக்கிட்டு நடப்பியே.. எங்க இப்ப மூஞ்சியக்காட்டி பதில் சொல்லுடா" என்று குரல் கொடுத்தனர்… மனிதர்கள் சக மனிதன் மேல், அவன் குணங்களின் மேல் கொண்டுள்ள ஆற்றாமை எனும் தீ வளர்ந்து அங்கே பண்பாட்டை அழித்துக்கொண்டிருந்தது… அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து பார்க்கவே இல்லை… இரண்டு நாட்களுக்குப் பின்னர் நாங்கள் ஊரை விட்டுக் கிளம்பிய அன்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறினேன்… அடுத்த நாள் காலை நங்கள் சென்னை அடைந்தபிறகு அவர் முதல்நாள் இரவே மாரியம்மன் கோவிலில் தூக்கிட்டுக் கொண்டதாக செய்தி வந்தது…மனம் நொந்து போனது! அதன் பின்னர் இப்போதுதான் கடையைப் பார்க்கிறேன்… ஏனோ கடை இருந்த இடத்துக்குள் நுழைந்து பார்க்க வேண்டும் எனத் தோன்றியது … குவிந்து கிடந்த கற்களை விலக்கியவாறே நுழைந்தேன்.. உடைந்த கண்ணாடிச் சில்லுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்தன.. திடீரென அடித்த காற்றில் புழுதி பறக்கவே, சற்றே கண் மூடினேன்.. கால் அருகிலிருந்த ஒரு கல்லில் இடறியது.. புழுதி அடங்கியதும் கல்லை நகர்த்திக் கொண்டே குனிந்து பார்த்தேன்.. கல்லின் அடியில் இருந்து ஏதோ பறந்தது … அது ரஜினியின் ஒரு பழைய புகைப்படம்.. ஏனோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது.. எடுத்து சட்டைப்பையில் பத்திரப்படுத்தியவாறே நினைவுகள் சூழ அந்த இடம் விட்டகன்றேன்…

வீட்டுக்கு சென்று, சரசு அக்கா வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு, மாமனுடன் கொஞ்ச நேரம் மாமரத்தடியில் கட்டில் போட்டு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை… மணி ஐந்தாகி விட்டிருந்தது.. சட்டென முகம் கழுவி, திருச்சிக்கு செல்லும் கடைசிப் பேருந்தை பிடிக்க ஆயத்தமானேன்.. “ஜெயஸ்ரீயையும் புள்ளைங்களையும் கேட்டதா சொல்லுய்யா…” என்றவாறே விடைகொடுத்தது அக்கா..

அடுத்த நாள் சென்னை வந்த பிறகு வழக்கமான வேலை, குடும்பம் என்று மூழ்கி விட்டதில் ஊர் மறந்துபோனது.. ஒரு ஒரு மாதம் கழித்து முடி திருத்த ஒரு கடைக்கு சென்றேன்… பையனின் வற்புறுத்தலின் பேரில் அந்த குளிரூட்டப்பட்ட “Romeo Hair stylists ” க்குள் நுழைந்தேன்… வண்ண வண்ணமாய் சுவரெங்கும் திறந்த மார்புடன் “மாடல்” கள் சிரித்துக்கொண்டிருந்தனர்… முடிதிருத்தி முடித்த பின்னர், வீட்டுக்கு வந்து சவரம் செய்யும் கண்ணாடி முன் நின்ற பொழுது கழுத்தில் உறுத்தின வெட்டப்பட்ட மயிர்த்துகள்கள் ஒரு கணம் என்னை மூக்கையன் கடை சுழற்நாற்காலிக்கு இழுத்துச் சென்றன … அனிச்சையாய் கண்ணாடியின் பின்புறம் செருகி வைக்கப்பட்டிருந்த அந்த பழைய ரஜினி படம் கீழே வந்து விழுந்தது.. ஏனோ என் கண்கள் கலங்கி சட்டென இரு துளி கண்ணீரை உதிர்த்தன….

No comments:

Post a Comment