
முன்பனிக் காலம்... ஓர் முழுமதி நேரம்...
வீசும் வாடையின் குளிர்தனைப் போக்க
அவளின் குழலினும் கருத்த மேகங்க ளிரண்டு
வானினும் ஓடையில் சட்டென இறங்கி
கரங்களைக் கோர்த்து காதல் புரிய,
முத்தங்களிட்டு சத்தமும் செய்ய
ஆசையிற் தெறித்த எச்சிற் துளிகள்
உலகம் எங்கும் மழையாய்த் தூற,
எழுப்பிய சத்தம் இடியாய் இறங்க
வெப்பம் விழுங்கும் வேதியியல் வினையால்
நெஞ்சின் ஊடே குளிர் ஒன்றிரங்க
மூளையின் மூலை அவள் நினை வனுப்ப
கருநெடுங்காட்டில் தணல் பொறி போல
பற்றிய நெருப்பில் செவிகள் சிவக்க
மூடிய இமையின் பிதுங்கிய விழிகள்
அவள்புறம் திரும்ப - அவளின் விழியோ
இமைகளை இறக்கி பிறையென ஒளிர
கால்கள் வண்ணக் கோலங்கள் இட
என் கைகள் இரண்டும் அவள் இதழ் தேட,
கால்கள் இரண்டும் அவள் இடை நாட,
பிதுங்கிய விழிவழி அவள் இமை நோக்கி
மூச்சுக் காற்றில் முகங்கள் சிவக்க
இதழ்கள் இணைந்து தணல் வழி பேச
தணல் - தழலென மாறி கொழுந்து விட்டெரிய
நெடிதுயர் தென்னை சாமரம் வீச
முழு மதியெனும் சந்திரன்
முகமும் சிவக்க
தோட்டக் குயில்கள் தேனிசை பரப்ப
அம்பலம் ஏறிய எங்கள் கூடல்
வள்ளுவன் உரைத்த இருவரிப் பாடல்!
கூடலில் திளைத்த கூடுகள் களைக்க,
கலைந்த ஆடை அப்புறம் சரிய,
அவள்
என் மார்பில் புதைந்து
அவளின் வாசனை நுகர
நானோ... கண்கள் மூடி நினைவுகள் நுகர்ந்தேன்...
முன்னொரு மாலை அக்கினி வெயிலில்
குளிர் அறை தன்னில் கூடிய பொழுதில்
இங்ஙனம் கேட்டு காதைக் கடித்தாள் -
மழை வருவ தெங்ஙனம் ?
சற்றே என் புருவம் தேய்த்து
இதழ் மடித்துரைத்தேன்...
மேகங்கள் ரெண்டும் கூடும் நேரம் சிதறும் துளிகள்!!...
என் மார்பைக் குத்தி "பொய்"யென உரைத்தாள்...
நினை வது கலைய,
ஒருகணம் திகைத்து
சட்டென உரைத்தேன் சற்றே உரக்க
மழை! மழையென!!
திக்கென விழித்த அவளோ ஒரு கணம்
ஆடைகள் தேடிப் பின் குழம்பி விளித்தாள்;
எங்கே மழைத்துளி!??
அன்றலர் மலராய் விரிந்த இதழின் மேலே;
கேள்விக்குறியாய் நீண்ட நாசியின்
கீழ்புறம் முத்தென துளிர்த்த வியர்வைத்
துளிகள் நோக்கி என் விரல்கள் நீள,
அதோ! என்றுரைத்தேன்!
வில்லெனும் புருவம் வளைத்து என் முகத்தினைப் பார்த்தாள்;
அவள் செவிகள் மட்டும் கேட்கும் வண்ணம் ரகசியம் சொன்னேன்...
மேகங்கள் ரெண்டும் கூடும் நேரம் சிதறும் துளிகள்... மழையென..!
ஒருகணம் திகைத்து மறுகணம் நகைத்தாள்...
எங்கள் இருவருக்குமாய் சேர்த்து வெட்கத்தில்
சிவந்தது வானம்!!
நண்பரே, சிறந்த கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி தோழரே! வருகைக்கும் வாழ்த்துக்கும்!
ReplyDeletejapanil thanimai thavam
ReplyDeleteengallukku kidaithathu
oru iniya kalaviyal padam/paadal.