Sunday, 8 March 2009

வாழ்க்கை!!!


வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அவற்றில் ஒவ்வொன்றும் ஒருவிதம். நவரசங்களையும் மனிதனுக்குள் கொண்டு வரும் அற்புத ஆசான் வாழ்க்கை. அவற்றுள் பல பாடங்கள் நம் கற்றுக்கொள்ளும் திறனை மீறியதாயும், கசப்பானதாகவும் அமைந்துவிடுகின்றன. ஆனாலும், அதையும் தாண்டி வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு தெளிவான நீரோடை போல, முன்பே ஓடுபாதை வகுக்கப்பட்டதைப் போல. சில பாடங்கள் ஒரு முறை படித்தால் தெளிவாகிறது. சில பலமுறை படித்தாலும் புரிவதில்லை.அவ்வகைப் பாடங்களை மீண்டும் மீண்டும் கற்றுகொடுத்துக் கொண்டே இருக்கிறது.முதலில் மென்மையாகவும், பின் சில நேரங்கள் கடுமையாகவும். வாழ்க்கை என்பது கடவுளைப்போல, உருவம் இன்றி, உணர்வுகள் வடிவானது.அது ஒவ்வொரு பாடத்தையும் எதாவது ஒரு சக மனிதனின் மூலமாகவோ, அல்லது சூழ்நிலைகள் மூலமாகவோ கற்றுக்கொடுக்கிறது. சிலநேரம் அன்புடன் அரவணைக்கும் தாயைப்போலவும், சிலநேரம் கண்டிப்பு காட்டும் தந்தை போலவும் , சில நேரம் தோளில் கைபோட்டு பேசும் தோழனைப்போலவும் ஆசிரியர்கள் அமைவதுண்டு. சில நேரம் அதையும் தாண்டி பல அருவருப்புக்கள் மூலமாகக் கூட பாடங்கள் கற்பிக்கப்படுவதுண்டு.அவற்றை அவன் எடுத்துக்கொள்ளும் விதமே ஒருமனிதனை, அவனது குணநலன்களை வரையறுக்கும் அளவுகோலாகிறது. வெற்றி, தோல்வி,நல்லவர்,தீயவர்,ஆசை,நிராசை,மகிழ்ச்சி,சோகம் என முரண்பட்ட பலவற்றுள் ஒரு தனிமனிதனுக்கு தரப்படவேண்டியதை முடிவு செய்வதும் அவனின் பாடங்களை எடுத்துக்கொள்ளும் விதமே . இந்த பாடங்கள் அனைத்துமே உணர்வு ரீதியிலானவயாகவே பெரும்பாலும் அமைவதுண்டு. புது உறவுகளின் மூலமாகவோ, உறவுகளின் பிரிவு மூலமாகவோ தான் பொதுவாக அவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. உறவுகள் ஒரு தொடர்கதை...உண்மையான வார்த்தை. உறவுகளில்தான் எத்துனை எத்துனை வகைகள்.!! சில ஆதாயம் சார்ந்தவை, சில அறிவு சார்ந்தவை, சில மட்டுமே இதயம் சார்ந்தவை. அவை என்றுமே ஒரு புதிராகவே இருக்கின்றன. அந்த புதிர்களை அவிழ்க்கும் சுவாரஸ்யமே வாழ்க்கை என்றும் சொல்லலாம். ஒவ்வொரு புதிரும் அவிழும்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும். சில நாம் எண்ணியதைப் போல இருந்தால் மகிழ்ச்சி முதலிய நேர்மறையான விடயங்களையும், அப்படி இல்லாவிட்டால், சோகம், தோல்வி முதலிய எதிர்மறையான விடயங்களையும் மனிதனுக்கு அளிக்கின்றன. ஆனால், அத்துணை உறவுகளும் சில சமயங்களில் அர்த்தமற்று போவதாகக்கூட தெரிவதுண்டு.அந்த உறவுகளைப்பற்றி அடுத்து வரும் பதிவுகளில் தொடர்வேன்...

No comments:

Post a Comment