Monday 9 March, 2009

உறவுகள்




உறவுகள்.. வாழ்வின் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் அங்கங்கள். ஒரு மனிதனுக்கான சகலத்தையும் அளிப்பவை. ஒருவனுக்கு இவ்வுலகை காணும் பாக்கியத்தை கொடுப்பது தாய்மை. இந்த உலகில் வாழ வேண்டும் எனும் உத்வேகத்தைக் கொடுப்பது காதல். அது ஒரு பெண்ணின் மீது கொண்டதாய்தான் இருக்கவேண்டும் என்பதல்ல. ஒரு லட்சியத்தின் மீது கொண்ட காதலாகக் கூட இருக்கலாம். இது போன்ற உறவுகளுக்கெல்லாம் அடிப்படையாய் அமைவது அவனின் எண்ணங்கள். அவனின் எண்ணங்களைப் பொறுத்தே உறவுகளும் அமைகின்றன. உயர்ந்த எண்ணங்கள் இல்லாதவன் உயர்ந்த மனிதனாவதில்லை, வள்ளுவர் வாக்கின் படி, "வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு", அதாவது, ஆற்று வெள்ள நீரின் உயரத்தைப் பொறுத்தே அதில் மிதக்கும் மலர்களின் உயரம் அமையும், அதைப் போலவேதான், ஒருவனின் உள்ளத்தை (எண்ணத்தை) பொறுத்தே அவன் தன் வாழ்வில் எட்டப்போகும் உயரமும் அமையும். இந்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பதில் தான் வாழ்க்கை மிகவும் கடினமான பல சோதனைகளுக்கு உள்ளாகிறது. இந்த பாடத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கும் உறவுகள் ஏராளம், அதன் மூலமாக நமக்கு கிடைக்கும் காயங்களும், வலிகளும் ஏராளம். பொதுவாக ஒரு மனிதன் தனக்கு நடக்கும் தீங்குகளுக்கெல்லாம் பிறர் மீது குற்றம் காணத் தொடங்கும்போதுதான் இந்த உறவுகள் வலிக்கத் தொடங்குகின்றன. "தீதும் நன்றும் பிறர் தர வாரா", ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு சொற்றொடர்.ஆனால் அதைப் பொதுவாக எந்த மனிதனும் பல வலிகளுக்கு முன்னால் உணர்வதில்லை. இதை உணர்ந்தால் வாழ்வில் துன்பமும் இல்லை. இவ்வளவு பேசும் நானும் ஒன்னும் முற்றும் துறந்த முனிவனுமில்லை, சகல காரியங்களையும் கசடற செய்யும் அதிமேதாவியுமில்லை. உங்கள் எல்லாரையும் போல, பல பலவீனங்களை உடைய ஒரு சாமான்யனே. என் மனசில் ஓடும் எண்ணங்களைப் பதிவு செய்யும் ஆசையே என்னை இதனை எழுதத் தூண்டுகிறது. திருச்சி மாவட்டத்தின் மூலையிலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பெரும்பகுதியை அங்கேயே கழித்த பின்னர் திருச்சி மாநகரம் வந்து, பொறியியல் படித்து, பின்னர் இன்று பல்லாயிரம் மைல்கள் தாண்டி ஜப்பானுக்கு நான் வந்த வரையிலான என்னுடைய சிறு ஓட்டத்தில் பல்வகை மனிதர்களையும் உறவுகளையும் வாழ்க்கை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது, இருக்கிறது, இருக்கும். ஒவ்வொரு உறவும் எனக்கு கொடுத்த பாடங்கள் ஏராளம். குறிப்பாக கல்லூரியில் நான் செலவிட்ட நான்கு வருடங்களில் இயந்திரவியல் படித்ததை விட அதிகமாக மனிதர்களையும், உறவுகளையும் படித்திருக்கிறேன். மனிதர்களில்தான் எத்தனை வகைகள்!! ஒவ்வொருவரின் செயலுக்குப் பின்னாலும் வரையறுக்கப் பட்ட ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தேன். ஒருவருக்கு சரியாகத் தோன்றுவது மற்றவருக்கு தவறாக தோன்றும் அதிசயத்தை நான் கண்டதும் அங்கேதான்.
தொடர்ந்து பதிவேன்...

No comments:

Post a Comment