Friday 2 October, 2009

மணிமேகலை...

கரைபுரளும் காவிரியின் கரையினிலே நான் நிற்கும்
நிமிடங்கள் ஒவ்வொன்றும் விழிச் சுழலில் சுழன்றடிக்கும்
கற்களையும் கசிந்துருக செய்துவிட்ட பேதையவள்
காதலினால் கடவுளுமாய் ஆன கதை…

அறிமுகம்….

அன்றொரு நாள்.. அழகிய மாலை..
ஆடியின் பெருக்கு காவிரியின் உவப்பு
வளம்கொழிக்கும் சோழதேசம்

இந்திரனின் கரி மிஞ்சும்
பரிமேலே வலம் வந்தான் காளையவன்
வடிவினிலே மன்மதன் தான்
வீரத்தினில் அர்ச்சுனன் தான்
வானவரும் வணங்கிடுவர்
வாணன் வல்லவ ரையன்
திரு முகம் கண்டால்

உடுக்கை இழந்தவன் கைபோல்
மனம் இணைந்த தோழன்
மாபெரும் வீரன் அவன் கந்தமாறன்
இல்லம் தேடி செல்லுகின்றான்
இரவினில் துயில் கொள்ள நாடுகின்றான்

மாளிகையின் வாயிலினில்
தடுத்திட்ட காவலரை தகர்த்தெறிந்து செல்லுகின்றான்
வந்தியதேவன்,
வாணன் புகழ் விளைக்கும் முதற்படியாய்

மாறன் கண்டுகொண்டான் தன்னுயிர் தோழன் முகம்
பிரிந்தவர் கூடி பேசா வார்த்தை பல கோடி
அன்புள்ள நண்பன் தனை தாயில்லம்
விழைக்கின்றான் அந்தப்புரம் செல்வதற்கு..

தேவலோக மாளிகையோ, அரம்பை மேனகை ஊர்வசியோ
அல்லியிடை கன்னியர்காள் செங்கழுநீர் நிறத்தினர்காள் ..
வியந்து நின்றான் காளையவன்
வானவரும் வணங்கி நிற்கும்
வாணன் வல்ல வரையன் ..

அம்மாவை வணங்கி நின்று விழி திறந்தான்
திறந்த விழி இமைக்கவிடா
இரு கயல் கண்டான்
பின் உணர்ந்தான் அது கன்னியவள் கண்களென..

மயங்கி நின்ற காளையவன்
மனம் உடைத்தான் நண்பனவன்
உனக்கல்ல என் தங்கை
நாடாளும் அரசன் அங்கே காத்து நிற்க
அவள் பாதம் தொட.
மனம் உடைந்தான் காளையவன்
தன்வழியின் தான் சென்றான்

அரசனென ஆவதென்று சூளுரைத்தான்
நாடிழந்தும் மானம்தனை உயிராகக் கொண்ட மன்னன்
அலுவல் நாடி சென்றுவிட்டான் தொலைதூரம் பறந்துவிட்டான்

முழுநிலவின் ஒளிகண்டான் கயல்விழியாள் முகம் மறந்தான்
குந்தவையின் முகம் கண்டான் – அவள்
வேல்விழியின் வீச்சினிலே தனை மறந்தான்

கடல் அலையை தாண்டி சென்றான்
மனிதருள்ளே மா ணிக்கம் கண்டான்
பொன்னியின் செல்வரென புகழ்படைத்தோன்
பார்போற்றும் பராந்தகரின் செல்லப் பெயரன்
அருள்மொழி வர்மன் தனை

மதி முனையும் வேல்முனையும்
தீட்டினன் தன் திறம்படவே
வென்றனன் அரிய பரிசில் பல
பார்போற்றும் சக்கரவர்த்தித் திருமகனின்
மனம் கவர்ந்து நட்பு கொண்டான்

2 comments: