Thursday 5 March, 2009

என் கவிதைகள்... என் உணர்வுகள்..




கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடியதாம் காதல் வந்ததால்...
வருந்தினேன் நான் பாடவில்லையென..
சட்டென உறைத்தது அட மடையா!!
அவள் பெயரை விட
அழகிய கவிதை உலகில் ஏதடா...!!

நீ பேசுவதைக் கேட்கும் முன்னரே
அதற்கு சுந்தர தெலுங்கு என
புனை கூறிய பாரதி
கவிஞனா கடவுளா!!!??

உன்னை ஒவ்வொரு முறை பார்த்த போதும் என் இதயம் பல நூறாய் சிதறியது ... இப்போதெல்லாம் நான் உன்னை பார்ப்பதுமில்லை, என் இதயம் சிதறுவதுமில்லை... ஆனாலும் அப்போதெல்லாம் இல்லாத ஒரு வலி என் மனதை சிதைக்கிறதே.. பெண்ணே, உன்னை விட உன் நினைவுகள் என்னை மிகவும் காயப்படுத்துகின்றன....

காதலும் ஒரு வகைத் துறவறம்தான்...
"நான்", "என்னை" எனும் சொற்களையே மறக்கச் செய்கிறதே...!!!

இரண்டாம் தாய்
அழ மட்டுமே தெரிந்த ஒருவனை
பேச வைத்தால்(ள்) தாய்...
பேச மட்டுமே தெரிந்த அவனைக்
கவிஞனாக்கினால்(ள்) காதலி..

என்னால் இப்போதெல்லாம் வானவில்லை ரசிக்க முடிவதில்லை..
ஏன் தெரியுமா என் அன்பே...!
நீ வழக்கமாக அணியும் கத்தரிப்பூ நிற சுடிதார்..
அதற்குப் பொருத்தமாக அணியும் கருநீல நிற வளையல்கள்...
உன் கண்களில் நான் ரசிக்கும் வெளிர் நீல வானம்...
அன்றொரு மழை நாளில் நீ தாங்கிய கரும் பச்சை நிற பூபோட்ட குடை..
எப்போதும் நீ சுமக்கும் மஞ்சள் நிற பென்சில் பௌச்..
அதிசயமாக உதட்டுச்சாயம் பூசும்போது உன்
கன்னக்கதுப்புகளில் ததும்பும் ஆரஞ்சு நிற வெட்கம்..
என்னை உன்னிடம் முதன்முதலில் ஈர்த்த செந்நிற கண்களிடை குங்குமம்...
இவற்றையே ஞாபகப்படுத்தி என்னைக் கொல்கிறதே....!!

உன்னை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் இதயம் பல நூறாய் சிதறுகின்றது... வியக்கிறேன்..
அதில் இருக்கும் நீ மட்டும்
சிறிது தேஜஸ் கூட குறையாமல் இருப்பது கண்டு...!!!

அ வ ள் . .
காந்தம் கண்களில்
யவ்வனம் அழகினில்
த்வாலை நடையினில்
ரிதம் பேச்சினில்...

பெண்ணே... எச்சரிக்கையாயிரு...
நீ பேசும்போது உன் கண்களும் கைகளும்
பிடிக்கும் அபிநயங்கள் கண்டு
ரம்பைக்கும் ஊர்வசிக்கும்
உன் மீது பொறாமையாம்...

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றேன் அவளிடம். .
நீ யார் என்றால் அவள் என்னிடம்...
பாவம்..
அதைக் கேட்கத்தான் நானும் வந்தேன் அவளிடம்
என்பதை அறியாதவள்..

அவள் முகம் கண்டால் மனம் குதித்தாடும்
அவள் குரல் கேட்டால் சித்தம் பிசகிவிடும்
அவள் நடை பார்த்தால் கை ஜதிபோடும்
அவள் கைகோர்த்தால் உயிர் பிரிந்தோடும்..
அவள் மனம் திறந்தால் ஜென்மப் பலனடையும்...

என் உயிரில் கலந்த அவளை மறக்க நினைக்கிறேன் என் உயிர் பிரியாமல் அது நடக்காது எனும் உண்மையையும் மறந்து...

இறுதி ஆசைகள்..
பெண்ணே.. நான் இறந்த பின்பாவது உன் இதயத்தில் எனக்கொரு இடம் கொடு...
காதலுடன் இல்லாவிட்டாலும், கல்லறையாகவாவது...
மனிதர்களே! மலர் தூவுங்கள் என்னவள் மீது என் நினைவு நாளில்...
என்னுயிர் நிரந்தரமாக உறைந்திருக்கும் கல்லறை அவள் இதயமல்லவா...

1 comment:

  1. Really superb
    But unn kavithaigallil oru varutham therigiradhu

    ReplyDelete