Tuesday 22 September, 2009

சொல்லப்படாத என் காதலின் கிழிக்கப்பட்ட காதல் கடிதங்களின் நாயகியே நெஞ்சோடு கலந்து விழியோடு உறைந்து குருதியில் மிதந்துகொண்டிருக்கும் உன் நினைவுகள் எங்கு காணினும் உன் பிம்பங்கள் என் உயிரின் யாதுமானவள் நீ கண்ணீர் முட்ட இதயம் விம்ம நான் வடிக்கும் இன்னும் ஓர் மடல்.. வழக்கம்போல் மூடப்பட்ட உன் இதயக்கதவுகளால் ஏமாந்து என் கல்லறையில் அடக்கம் செய்யப்பட இப்போதே தயாராய் நான் பார்க்கும் ஒவ்வொரு காதல் கதையும் உன்னையே நினைவு படுத்துகிறது கண்மணியே. என்ன செய்ய!! அனைத்தும் நடந்திருக்கிறதே என் காதலிலும்.. உன் அகன்ற விழிப் புன்னகையில் நான் மயங்கிய அந்த முதல் கணம் முதல், மகிழ்ச்சியையும் சோகத்தையும் குறைவின்றி நான் கண்டிருக்கிறேன். இன்றும் உன் நினைவு என்னுள் ஒவ்வொரு நொடியிலும் புன்சிரிப்பையும் அதனுள் புதைந்த வலியையும் ஒன்றாய் விதைத்துவிட்டே செல்கிறது. நான் சிந்திக்கும் ஒவ்வொரு கருத்தையும், நான் காணும் சிறுசிறு சந்தோஷத்தையும், வலியையும் உன்னுடன் பகிர்ந்துகொள்ளவே துடிக்கிறேன். என்ன செய்வது!! நானோ சாமான்யன், நீயோ தேவதைகளின் தேவதையாயிற்றே. உன் கைகோர்த்து மணலில் கால்புதைய நடந்து என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உன்னுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசை இப்படி நிராசையாகவே நிலையாய் மாறிப்போகும் என்று தெரிந்திருந்தால், அன்றே முயன்றிருப்பேன் உன் கவனம் ஈர்க்க.. இதற்குமேல் எழுத முடியாது என் மனம் என்னைக் கொல்கிறது..வழக்கம்போல் இன்றும் பாரத்தை உன் மேலேயே போட்டுவிட்டு நான் செல்கிறேன்..

1 comment: