Tuesday 23 February, 2010

மணிமேகலை...6 கொலைக் களம்

கொலைக் களம்

அங்கே ஆதித்தச் சிறுத்தை நுழைந்தது

கனவாக தான் கண்ட காதலியே

தம்மை கொலை வாளுடன் அழைப்பது கண்டான்

தன மதி மறந்தான்

யானே பாவியானேன்! உன் காதலனைக் கொன்றிட்டேன்

அவன் சிரத்தையும் கொய்திட்டேன்!

என்றெனைக் கொல்வாயோ!? இந்நரகத்தி லிருந்தென்னை மீட்பாயோ!

கண்ணே! நீயே என் காதலி.. உடன் வருக என்னுடன்

சென்று படைப்போம் ஓர் புது உலகு!!!

வெறி கொண்டாடினான் ஆதித்தன்!

நாதா! என் உள்ளம் என்றும் உங்கள் வசமே!

ஆயினும் விதி போடும் பெருந்தடை

நான் யார் தெரியுமா!! நான் யார் தெரியுமா!!?

உரைத்தாள் நந்தினி ஓர் உண்மை! தன வாழ்வின் முதல் உண்மை

மீண்டும் பிதற்றினான் ஆதித்தன்

யானே பாவி! யானே கள்வன்

திறந்தன கொலைக்களக் கதவுகள்

உளம் பதைத்தான் வாணன்

சற்றே அவ்விடம் செல்ல விழைந்தான்

சட்டென அணைந்தன கண்கள்

கரியின் பிடிபட்டு சுழன்றன கால்கள்

காரிருள் சூழ்ந்தது ஆங்கே

ஆதித்தன் விண்ணுலகம் கண்டான்

தன் இன்னுயிர் நீத்தான்

மெல்லத் திறந்தன வாணன் கண்கள்

கலங்கிய காட்சியும் சிதைந்திட்ட குரலும்

சூழ்ந்த இருளும் முன்ஜென்ம வினையும்

ஒரு சேரக் கண்டான் அக்காட்சியை

அந்தோ! மடிந்தனனா என் தலைவன்!

எங்கே என் தலைவன்! வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி!

சேவூரைச் செவ்வூராக்கிய கால்கள் எங்கே!

எதிரிகளை வதம் செய்த கரங்கள் எங்கே!

யான் செய்த சத்தியமும் மேற்கொண்ட ஓர் செயலும்

ஒரு சேரப் போனதே இன்று விண்ணுலகம்

அரற்றினான், மூவேந்தரும் போற்றும் வாணன்

வந்திய தேவன்

அதிர்ந்தது அவ்விடம் – நுழைந்தார் அரையர்

விதியின் ஆட்டத்தில் விளையாட்டுப் பொம்மையான சம்புவரையர்

சிநேகிதத் துரோகி, மோகினியின் வலை வீழ்ந்த உன்மத்தன்

மாபெரும் வீரன், கந்த மாறன் உடன் இருக்க

நீயே கொன்றாய் சோழ குலக் கன்றை!

உறைந்தான் வாணன், அதை உடைத்தாள் மணிமேகலை

தேவதைகளின் தேவதை.. யானே கொன்றேன்!

சோழனை யானே கொன்றேன்! உறுமியது ஓர் கருஞ்சிறுத்தை

உறைந்தனன் வாணன்! உறைந்தார் அரையர்!

பேதையவள் சொற்கள் அங்கே ஏறவில்லை அம்பலம்

அக்கியினியின் வசம் இருந்த கோட்டை மதில் தாண்டி வந்து

தன் தலைவன் பொன்னுடலை சுமந்து சென்று

கிடத்தினான் வாணன், வந்திய தேவன்

சாய்ந்தனன் ஆல மரமென

காதலனோ சிறை செல்ல, கண்ணீரில் தினம் கரைய

நடந்தாள் மணிமேகலை, தன் உயிர் கரைத்து

சுமந்தாள் ஆதித்தன் ஓலைதனை!

யானே கொன்றேன், ஆதித்தனை யானே கொன்றேன்!


No comments:

Post a Comment