Sunday 12 April, 2009

மனமெனும் மாயக் குரங்கு


மனிதனின் மனம், அவனின் மன ஓட்டங்கள், அவன் வாழ்க்கையை மட்டுமன்றி, அவனை சுற்றியிருக்கும் அனைத்து உறவுகளின் வாழ்க்கையையும் மிகவும் பாதிக்கிறது. பாதிக்கப்படும் மனிதரின் மன நிலைமையைப் பொறுத்து பாதிப்பின் அளவும் வேறுபடுகிறது. இதைப் பலரும் உணர்வதில்லை. வெறும் அறுபது முதல் எழுபது ஆண்டுகள் மட்டுமே வாழ முடிந்த ஒரு சராசரி மனிதன், தன் வாழ்நாளில் எத்துனை சக மனங்களை காயப்படுத்தி, கசக்கி, காலடியில் போட்டு நசுக்கி, தன் வலிமையை நிரூபிக்கத் துடிக்கிறான் என்பதை பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது!! ஹிட்லர் முதல் முசோலினி வரை, ஜார்ஜ் புஷ் முதல் சதாம் உசேன் வரை.. அவ்வளவு ஏன்!! நம் வாழ்க்கையிலேயே பலரை சந்திக்க நேரிடுகிறது. அன்பு மட்டுமே வாழ்க்கையில் நிலையான இன்பத்தைத் தரும் என்பதை யாரும் உணர்ந்தும், தெரிந்தும் தன்னை திருத்திக் கொள்ள முயல்வதில்லை..அன்பின் அடிப்படையில் உருவானவைதானே நாம் வணங்கும் அத்துணை தெய்வங்களும்!! எல்லா மதங்களும் வலியுறுத்துவது அன்பை மட்டும்தானே!! இவை யாவுமே எவருக்கும் தெரியாத செய்திகள் இல்லை.. வலுக்கட்டாயமாக மனதில் இருந்து ஒவ்வொரு தனி மனிதனாலும் அகற்றப் பட்டவை.!!
ஒவ்வொருவனும் அதற்கு காரணம் என்ற பெயரில் ஒரு கதையை சொல்லிக்கொள்வதுண்டு!! அவ்வப்போது எழுந்து தன்னைக் குத்தும் மனசாட்சியை கொள்ள இயலாமல் சமாதானப் படுத்தும் நோக்குடன்.. ஆனால் பாவம்!! ஒவ்வொருவனும் தன் வாழ்க்கையின் இறுதி நிமிடங்களை நெருங்கும்போது, அவனின் மனதை, மனசாட்சி செய்யும் துன்பம் இவன் வாழ்க்கை முழுவதும் பிறரையும் அவன் மனசாட்சியையும் துன்புறுத்தியதற்கு சமமானதாக இருக்கிறது. எந்த ஒரு சாமான்ய மனிதனின் பணப் புகழும் அதிகபட்சம் இரு தலைமுறைகளுக்கு மேல் நீடிப்பதில்லை. அப்படி நீடிக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவருமே அன்பை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தியவர்களாகவே இருக்கிறார்கள். இதுவும் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே..பின்பு ஏன் ஒருவரும் இதனை பின்பற்றுவதில்லை என்பது தான் புரியாப் புதிராகவே இருக்கிறது..!! இதுவரை நான் சந்தித்த மனிதர்களில் கிட்டத்தட்ட அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் உருவாகும் கோபத்தை அவர்தம் எளியரின் மீது செலுத்தும் செயலை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்... கோபம் என்பதே ஒரு மனிதனின் இயலாமையைக் காட்டும் ஒரு வழி தானே. "நகையும் உவகையும் அழிக்கும் சினத்தின் பகையும் உளவோ பிற" எனும் வள்ளுவர் வாக்கினை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்!! அவர்கள் அனைவருமே வாழ்வில் வெற்றியடைந்தவர்கள்தாம், இல்லையா!! வாழ்வில் வெற்றி என்பது வெறும் பணத்தையும் பதவிகளையும் வைத்து மதிப்பிடப்படுவதில்லை..அவன் வாழ்வில் அவனுக்குக் கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சியான மற்றும் மனம் நிறைந்த தருணங்களும், அவன் இறப்புக்காக உண்மையாக கண்ணீர் சிந்தும் உள்ளங்களும்தான் அவனின் வெற்றியை சொல்பவை என்பது என் உறுதியான எண்ணம். அப்படி உண்மையாகக் கண்ணீர் சிந்தும் உள்ளங்களுக்கான தேடலில் நாம் பல போலிகளையும், அவர்கள் தரும் வலிகளையும் தாங்கிக் கொள்ள நேரிடலாம். அவற்றையெல்லாம் தாண்டியும் வாழ்க்கையை ஒரு நம்பிக்கையோடே வாழ்ந்து முடிப்பவர்கள்தாம் பிறருக்கு எடுத்துக்காட்டுகளாய் கூறப்படும் உன்னத மனிதர்களாகின்றனர்..

No comments:

Post a Comment